*தனித்து தெரியும் தனம் அம்மா*

 

 

 

- Advertisement -

 

திரையில் பெரிய அறிமுகமோ, சினிமா பின்னணியோ இல்லாமல், தனது இயல்பான பேச்சாலும் முகபாவனைகளாலும் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நக்கலைட்ஸ் தனம். இவரது இயற்பெயர் தனலட்சுமி. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பாலக்கனூத்து கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர், தனது குடும்பத்திலும் சமூகத்திலும் கல்வியில் முன்னேறியவராக இருந்துள்ளார்..

சிறுவயதிலிருந்தே படிப்பில் ஆர்வம் கொண்ட தனலட்சுமி, குடும்ப சூழ்நிலைகளையும் தாண்டி தனது கல்வியைத் தொடர்ந்தார். கல்லூரி காலத்தில் சமூக விஷயங்கள், அரசியல், நாடகம் போன்றவற்றில் ஆர்வம் அதிகரித்தது. பின்னர் திருமணத்துக்குப் பிறகு மதுரை உள்ளிட்ட பல இடங்களில் வாழ்ந்தபோதும், நாடகங்களிலும் சமூகப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். ஒரு நாடகத்தில் நடிகை வர முடியாத சூழலில், எதிர்பாராத விதமாக ‘விக்டோரியா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததே அவரது மேடைப் பயணத்தில் முக்கியமான திருப்பமாக அமைந்தது.

அதன்பிறகு கோவையில் ‘கோணங்கள்’ என்ற திரைப்படக் குழுவுடன் இணைந்து, சமூக மற்றும் அரசியல் கருத்துகளை கொண்ட திரைப்படங்களை கல்லூரிகள் மற்றும் கிராமங்களில் திரையிடும் பணியிலும் ஈடுபட்டார். சமூக பிரச்சினைகள் மீதான அவரது ஆர்வம் மூலமாகவே நக்கலைட்ஸ் குழுவினருடன் அறிமுகம் ஏற்பட்டது. ‘ஆண்டபரம்பரை’ என்ற நக்கலைட்ஸ் வீடியோவில் நடித்ததன் மூலம், இணைய ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். குறிப்பாக அவரது கொங்கு தமிழ் பேச்சு, இயல்பான நடிப்பு, நேரடியான வசன உச்சரிப்பு ஆகியவை தனம் அம்மாவை தனித்துவமான கதாபாத்திரமாக மாற்றின.❤

YouTube வீடியோக்களில் கிடைத்த வரவேற்பு, அவரை சினிமாவுக்கும் அழைத்துச் சென்றது. ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் முக்கியமான குடும்பப் பாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் ஜாங்கோ, பேச்சிலர், ஆனந்தம் விளையாடும் வீடு, வீட்ல விசேஷம், டைரி, உடன்பால், ரிப்பப்பரி, சொப்பன சுந்தரி, பாத்து தலை உள்ளிட்ட பல படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக ‘பேச்சிலர்’ படத்தில் கதாநாயகனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த தனம், கதையின் குடும்பப் பகுதிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக விமர்சனங்களிலும் குறிப்பிடப்பட்டது. அதேபோல் 2025-ல் வெளியான ‘குடும்பஸ்தன்’ படத்திலும் நக்கலைட்ஸ் கலைஞர்களுடன் இணைந்து நடித்தார்.

2025-ல் வெளியான ‘பெருசு’ படத்திலும் தனம் முக்கியமான குடும்பப் பாத்திரத்தில் நடித்தார். படத்தில் சுனில், வைபவ் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்திருந்தார். இப்படி YouTube-ல் ரசிகர்களால் “தனம் அம்மா” என்று கொண்டாடப்பட்ட ஒருவர், படிப்படியாக திரைப்படங்களிலும் தனது இயல்பான நடிப்பால் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தனம் அம்மாவின் சிறப்பு என்னவென்றால், அவர் நடிக்கும்போது “நடிக்கிறார்” என்ற உணர்வு அதிகமாக தெரியாமல், நம்முடைய வீட்டில் இருக்கும் ஒரு அம்மாவைப் போலவே தோன்றுவதுதான். அதனால்தான் அவரது கதாபாத்திரங்கள் நகைச்சுவையாக இருந்தாலும், குடும்ப உணர்வுகளாக இருந்தாலும் ரசிகர்களுடன் எளிதாக connect ஆகின்றன.

*நன்றி:facebook/Anuja Anu*