கேந்திரன் இயக்கத்தில், ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் நடித்திருக்கும் ‘வடம்’ இசை வெளியீட்டு விழா

   

 

 

                                      கேந்திரன்

 

 

- Advertisement -

      ஆர். ராஜசேகர்

 

மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் – நட்டி நட்ராஜ் நடிப்பில் இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவான ‘வடம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

மார்ச் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘வடம்’ படத்தில் விமல், நட்டி நட்ராஜ், சனஸ்கா ஸ்ரீ,  முனிஸ்காந்த்,  பால சரவணன், ‘ஆடுகளம்’நரேன், மதுசூதன் ராவ், தீபா, இந்துமதி மணிகண்டன், இயக்குநர், நடிகர்களுமான ஷரவணன் சக்தி, மூர்த்தி, ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தை ஷபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். வடமஞ்சு விரட்டு எனும் கிராமிய வீர விளையாட்டின் பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ராஜசேகர் பேசுகையில், ” நான் இந்த துறைக்கு புதிது. இயக்குநர் ஆறு மாதத்திற்கு முன் என்னை சந்தித்து கதை சொல்வதற்கு முன் மாட்டைப் பற்றி சொன்னார். அது எங்களுக்கு பிடித்திருந்தது. அதன் பிறகு இரண்டு மூன்று சந்திப்புகளிலும் கதையைப் பற்றி விரிவாக சொன்னார். அதன் பிறகு என்னுடைய பார்ட்னர்களுடன் விவாதித்தேன். இயக்குநர் எங்களிடம் எப்படி கதையை சொன்னாரோ… அதை அப்படியே திரையில் கொண்டு வந்து இருந்தார். நாங்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம். இதற்காக முதலில் அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா நடிகர்,நடிகைகளும் நன்றாக நடித்திருந்தார்கள். குறிப்பாக இமான் அவர்களின் இசை சிறப்பாக இருந்தது. புது தயாரிப்பு நிறுவனம், புது தயாரிப்பாளர் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

நான் கிராமத்தில் இருந்து வந்தவன். எங்களுக்கும் மாட்டிற்கும் நிறைய தொடர்பு உண்டு. ஒரு மாடு பதினெட்டு ஆண்டுகள்தான் உயிர் வாழும் என நினைக்கிறேன். டீ, காபி -பால் -தயிர்- என மாட்டுடன் நாம் அனைவரும் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறோம். இன்றும் ஆலயங்களில் நந்தீஸ்வரராகத்தான் இருக்கிறார். நாங்கள் இதுபோன்று மாட்டை பற்றி படம் எடுப்பது பாக்கியம் என கருதுகிறோம்.” என்றார்.

இயக்குநர் கேந்திரன் பேசுகையில், ”கதை முழுமையாக எழுதி முடித்தவுடன் முதலில் இசையமைப்பாளர் இமானிடம்தான் சொன்னேன். அவர் முழுவதும் கேட்டுவிட்டு நான் இசையமைக்கிறேன் என்று சொன்ன தருணத்திலேயே எனக்குத் தெரிந்து விட்டது, இந்தப் படம் ஹிட் என்று. இதற்காக இமானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரைத் தொடர்ந்து இப்படத்தின் கதையை விமலிடம் சொன்னேன். இப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.‌ இந்தப் படத்தில் விமலுடன் நடித்த ‘பாண்டி முனி’ எனும் காளை மாட்டிற்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மார்ச் 6ஆம் தேதி திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டிய படம் இது.”என்றார்

மேலும் நடிகை சனஸ்கா ஸ்ரீ,
இசையமைப்பாளர் டி. இமான், நட்டி, ஆகியோர் பேசினார்கள். அனைவருமே தயாரிப்பாளரின் விருந்தோம்பலை புகழ்ந்து பேசினார்கள்.

ஹீரோ விமல் பேசுகையில், ” இமான் சார் இந்த படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.‌ மதுரையில் மஞ்சுவிரட்டு நடக்கும் இடங்களில் எல்லாம் இதில் வரும் ‘பாண்டி முனி’ பாடலைதான் ஒலிக்க விடுகிறார்கள்.
ஹீரோயின் இந்தப் படத்தில் மிகவும் இயல்பாக  நடித்திருக்கிறார். தயாரிப்பாளரின் நல்ல மனசுக்கு, இந்த நிறுவனமும், இந்த படமும் பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.” என்றார்.
கலகலப்பான விழாவாக இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சி, நடந்து முடிந்தது.