மைலாஞ்சி படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்திற்கு சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைத்திருக்கிறார்.
இந்நிகழ்வில் திருமதி அகிலா பாலுமகேந்திரா, கங்கை அமரன், சீமான், காவல்துறை உயரதிகாரி தினகரன் (ஏடிஜிபி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
எழுத்தாளரும், தமிழ் இலக்கிய சிந்தனையாளருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தில் ‘கன்னி மாடம்’ பட புகழ் நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை க்ருஷா குரூப் நடித்திருக்கிறார். செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
டிரென்ட் மியூசிக் நிறுவனம் ‘மைலாஞ்சி’ பாடல்களை வெளியிட்டுள்ளது.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர், டாக்டர் ப. அர்ஜுன் பேசுகையில், “இது நெகிழ்ச்சியான மேடை. உலகம் பெரியது, ஆனால் என்னுடைய உலகம் மிகச் சிறியது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள சிறிய கிராமத்தில் மனநல மருத்துவராக பணியாற்றி வருகிறேன். அன்னை இல்லம் என்ற ஒரு கூட்டு இல்லம்தான் என்னுடைய உலகம். எனக்கு வெளி உலகம் தெரியாது. நோய்களைப் பற்றி, அதுவும் மனநலம் சார்ந்த நோய்களைப் பற்றியும், நோயாளிகள் குறித்தும் கண்டறிந்த நான், இந்த வெளிஉலகத்தை பார்க்கவில்லை.
சினிமா தயாரிக்க போகிறேன் என்று சொன்னவுடன் என்னுடைய உறவுகளும் நண்பர்களும் பதட்டம் அடைந்தனர். வியப்பாகவும் பார்த்தனர். சிலர் வருத்தமும் அடைந்தனர். ஆனால் ‘மைலாஞ்சி’ திரைப்படம் எனக்கு ஏராளமான அனுபவங்களைக் கற்றுத் தந்திருக்கிறது. அனுபவ பாடங்களில் நல்லவற்றை எடுத்துக் கொள்ளுங்கள், தீயவற்றை விட்டு விடுங்கள். அடுத்தநாள் காலையில் நாம் இருப்போமா என்று உறுதியாகத் தெரியாது. மனித வாழ்க்கை நிலைத்தன்மை அற்றது.
கதை சொல்வதற்காக என்னுடைய ஹீரோ, இயக்குநர் அஜயன் பாலாவை எனக்கு அறிமுகப்படுத்துகிறார். நான்கு கதைகளை அவர் சொல்கிறார், அனைத்தையும் மௌனமாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். எந்த கதைக்கும் எதிர்வினை ஆற்றாததால் ஹீரோவும், இயக்குநரும் என்னை பார்த்துக் கொண்டே இருந்தனர். நான் அடிப்படையில் மனநல மருத்துவன் என்பதால் எதிர்வினை ஆற்றாமல் இருப்பது என்னுடைய பழக்கமாகிவிட்டது. அதன் பிறகு அவர்களிடம் ‘வேறு ஏதேனும் கதை இருக்கிறதா?’ எனக் கேட்டேன்.
இயக்குநர்களில் பீம்சிங், ஸ்ரீதர், மகேந்திரன், பாலு மகேந்திரா, பாலச்சந்தர், பாரதிராஜா உள்ளிட்டவர்களை எனக்குப் பிடிக்கும். இவர்கள் மனித உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்துவார்கள். ‘சினிமா பொழுதுபோக்கு ஊடகம் என்பதை கடந்து, அதற்குள் மனித உணர்வுகளைக் கடத்தக்கூடிய அளவிற்கு கதையை சொல்லுங்கள்’ என கேட்டுக் கொண்டேன்.
அதன் பிறகு ஐந்தே நிமிடத்தில் ஒரு கதையைச் சொன்னார். அந்த கதைதான் ‘மைலாஞ்சி’. உணர்வுகள் எதுவும் புதிதில்லை, எல்லா மனிதர்களுக்கும் உணர்வுகள் ஒன்றுதான். இந்த பூமி அழியும்வரை காதல் ஒரு உன்னதமான நெகிழ்வான ஒரு உணர்வு. காதல் எனும் உணர்வு பழையதாக இருந்தாலும், அதை கொடுக்கும் விதம் புதிதாக இருக்க வேண்டும். இந்தத் திரைப்படம் எனக்கு நட்பை கற்றுக் கொடுத்திருக்கிறது.
காதல் என்ற உணர்வை மென்மையாக சொல்லக்கூடிய இந்த கதைக்கு, இசைஞானி இளையராஜாதான் வேண்டும் என கேட்டேன். செழியனின் நட்பிற்காக இளையராஜா இதில் பணியாற்ற ஒப்புக்கொண்டார். செழியனின் நட்பிற்காக படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் இந்த குழுவுடன் இணைந்தார். மிஷ்கின் அவர்களும் நட்பின் காரணமாகவே இங்கு வாழ்த்த வருகை தந்திருக்கிறார். அண்ணன் சீமானுக்கும் எனக்கும் இடையே உள்ள நட்பின் காரணமாகவே அவரும் இங்கு வருகை தந்திருக்கிறார். திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டாத என்னுடைய பால்ய கால வகுப்புத் தோழர் ஏடிஜிபி தினகரனையும், நட்பின் காரணமாக இங்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன்.” என்றார்.
ஒளிப்பதிவாளர் செழியன் பேசுகையில், “அஜயன் பாலா எனக்கு நண்பன். 2000ம் ஆண்டில் நான் பி. சி. ஸ்ரீராமின் உதவியாளராக பணியாற்றியபோது, அஜயன் பாலா மற்றொரு இயக்குநரிடம் உதவியாளராக பணியாற்றினார். நண்பர்களாக அறிமுகமானோம். அப்போது நடைபெற்ற உரையாடலில், ‘நான் முதலில் படத்தை இயக்கினால் அதற்கு நீதான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும்’ என என்னிடம் கேட்டுக் கொண்டார். கேட்டுக் கொண்டதுடன் மட்டும் இல்லாமல் அவருடைய பையில் இருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து, ‘ இதுதான் உனக்கான அட்வான்ஸ்’ என்றார். அதற்குப் பிறகு 25 ஆண்டுகள் கடந்து விட்டன. ஒரு நாள் திடீரென்று அலுவலகத்திற்கு வந்து படத்தில் பணியாற்ற சம்மதமா எனக் கேட்டார். அப்போது அவரிடம், ‘நீ கொடுத்த அட்வான்ஸ் அப்படியே இருக்கிறது. வா படப்பிடிப்புக்கு செல்லலாம்’ என்றேன்” என்றார்
இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “இயக்குநர் அஜயன் பாலா பேரன்புமிக்கவர். என்னுடைய சினிமா ஆய்வை, அறிவை உரசி பார்க்கக்கூடியவர். எப்போதும் சினிமாவைப் பற்றி ஆரோக்கியமான விவாதத்தை முன் வைப்பவர். நான் சினிமாவில் வந்ததற்கு அஜயன் பாலாவும் ஒரு காரணம். அன்பான மனிதர், பண்பான மனிதர். அதனால் அவருக்கு சினிமா வாய்ப்பு எளிதாக கிடைக்கவில்லை. சினிமாவில் தேவையில்லாமல் ரொம்ப நல்லவர்கள் சில பேர் இருப்பார்கள். அதில் மீரா கதிரவனை போல் அஜயன் பாலாவும் ஒருவர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கு முன்னால், வெற்றிமாறனுக்கு முன்னால், இயக்குனராகி இருக்க வேண்டும். தாமதமாக கிடைத்த இந்த வாய்ப்பில் அவர் வெற்றி காண்பார்” என்று வாழ்த்தினார்.
ஏடிஜிபி தினகரன் பேசுகையில், “எனக்கு இந்த மேடை புதிது. சூழல் புதிது. ஆட்கள் புதிது. இதுதான் நான் கலந்து கொள்ளும் முதல் திரைத்துறை சார்ந்த விழா. இங்கு தயாரிப்பாளரின் நண்பனாக வருகை தந்திருக்கிறேன். அவருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அர்ஜுனின் பள்ளிக்கூட தோழராக இருந்த நான் சொல்கிறேன், அவர் மருத்துவர் ஆவதற்கு கடுமையாக உழைத்தார். அவருடைய வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டும் என்றால் 15 கிலோ மீட்டர் நடந்து வர வேண்டும். அவரிடம் சைக்கிள் கிடையாது. நான்தான் அவரை சைக்கிளில் அழைத்துக் கொண்டு செல்வேன். இன்று நான் ஐபிஎஸ் அதிகாரி ஆகிவிட்டேன். அவர் மருத்துவராகி விட்டார். சேத்தூர் என்ற சின்ன கிராமத்தில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர், இன்றும் அவரது வீட்டில் ஒரு ஏசி கிடையாது, ஒரு பிரிட்ஜ் கிடையாது. இப்படி ஒரு வீட்டில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய மனைவி மற்றும் மகன், மகள்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.
‘மைலாஞ்சி’ படத்தை தயாரிப்பதற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதும் எனக்குத் தெரியும். பள்ளியில் படிக்கும்போதே அவர் சினிமா மீது ஆர்வம் கொண்டவர்.
இசைஞானி இளையராஜாவை பற்றி நான் பல தருணங்களில் ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். காவல்துறையில் பணியாற்றும் எங்களுக்கு விடுமுறை இல்லை. ஃபோனை ஆஃப் கூட செய்ய முடியாது. வெளிநாடு சுற்றுலா செல்ல முடியாது. குடும்பத்துடன் செலவிட முடியாது. இது போன்ற சூழலில் எங்களுக்கு மிகப்பெரிய வடிகால் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள்தான்.
இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டீசரை பார்க்கும்போது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் நன்றாக இருக்கிறது. இந்தப் படம், மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.
சீமான் பேசுகையில், “நாம் ஒருவரை சந்தித்தால் உடல்நிலை எப்படி இருக்கிறது என்றுதான் கேட்கிறோம். மனநிலை எப்படி இருக்கிறது என்று யாரும் கேட்பதில்லை. எவ்வளவு பணம் இருந்தாலும் மனம் சரியில்லை என்றால் அது பயனற்று போகும். பாதிக்கப்பட்டவர்களுக்குதான் அதன் அருமை தெரியும். அதனால் மருத்துவத்திலேயே மகத்தான மருத்துவம் மனநல மருத்துவம் தான். மனநலத்தை சரி செய்யும் மருத்துவர் அர்ஜுன் இந்தப் படத்தை தயாரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தன் மண்ணின் மக்களுக்காக, தான் பயின்ற கல்வி பயன்பட வேண்டும் என்று அவர் சேத்துரிலேயே பணத்தை பெரிதாக எண்ணாமல், மனத்தை நலப்படுத்தி வரும் மகத்தான மருத்துவர் தான் தயாரிப்பாளர் அர்ஜுன்.
என் தம்பி அஜயன் பாலா, தமிழ்த் திரை உலகில் சிறந்த படைப்பாளிகள் அனைவரையும் சந்தித்து இருப்பார். கேரளா போன்ற மாநிலங்களில் முதலில் எழுத்தாளர்களுக்குத் தான் மரியாதை. அங்கு முதலில் கதையை வாங்கிய பிறகுதான் இயக்குநர், நடிகர் போன்றவற்றை தீர்மானிப்பார்கள். ஆனால் இங்கு அப்படி இல்லை. அஜயன் பாலா ஒரு சிறந்த எழுத்தாளர். நான் அவருடைய எழுத்தின் ரசிகன். பல தருணங்களில் நான் வாசிப்பதற்கு நேரம் இல்லாத போது தலைவர்களைப் பற்றிய சுருக்கமான எழுத்துகளை எழுதித் தருவார். தலைவர்களைப் பற்றி முன்னணி வார இதழில் கட்டுரையாக அவர் எழுதி இருக்கிறார். இன்றைய தலைமுறையினருக்கு அம்பேத்கர் என்றால் யார் என்று தெரிந்து கொள்வதற்கு அவர் எழுதிய புத்தகம் உதவும். அவருடைய எழுத்தில் ஒரு ஈர்ப்பு இருக்கும். புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினால் இறுதிப்பக்கம் வரை தொடர்ந்து வாசிப்பார்கள்.
எழுத்தாளரான அஜயன் பாலா திரைப் படைப்பாளியாக வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இலக்கியம் பொய் பேசலாம். புராணம் பொய் பேசலாம். வரலாறு உண்மையை மட்டும்தான் பேசும். அப்படி ஒரு வரலாற்று உண்மையை பதிவு செய்யக் கூடியவர்தான் அஜயன் பாலா.
ஒளிப்பதிவாளர் செழியன், கலை இயக்குநர் லால்குடி இளையராஜா போன்ற எனக்கு நெருக்கமான உறவுகள் பலரும் இப்படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள்.
இங்கு ‘சிம்பொனி செல்வன்’ என இளையராஜாவை குறிப்பிட்டு இருக்கிறார்கள். மகிழ்ச்சி. மனநல மருத்துவர் தயாரித்த இந்தத் திரைப்படத்திற்கு, குணநல மருத்துவர் இளையராஜா இசையமைத்திருப்பது சிறப்பு. இந்தப் படம் மிகச்சிறந்த வெற்றியை பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்,” என்றார்.
