முருகனடிமை வாஸ்து எஸ். செல்வா அவர்களின் கேள்வி பதில்கள் தொடர்கின்றன…

11) தென்மேற்கு மூலையை ஏன் மண் தத்துவமாக வாஸ்துவில் சொல்லப்பட்டுள்ளது?
வாஸ்துவில் அதிக புனைப் பெயர்களை வைத்துக் கூறப்படும் திசை என்றால் தென்மேற்கு திசைதான். எட்டு திசைகளில், அதி முக்கியம் வாய்ந்த 2 ம் இடத்தில் இந்த திசை உள்ளது.

இந்த திசையை பழமையான நூல்களில் நைருதி மூலை எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த திசையினை குபேர மூலை, கன்னிமூலை, பழநி மூலை எனவும் ராகுவுக்குரிய பகுதி எனவும் மக்களிடையே பரவலாக அறியப்படுகிறது.

- Advertisement -

இதில் நைருதி மூலை என்பதை தவிர்த்து மற்ற அனைத்து பெயர்களும் இடைச்செருக்கல்களே.குபேர மூலை என்று பழமையான நூல்களில் எங்கும் குறிப்பிடபடவில்லை.
சரி விசயத்திற்கு வருவோம். தென்மேற்கு மூலை என்பது குடும்ப தலைவரின் படுக்கையறைக்கு மட்டுமே உரிதான ஒரு இடமாகும். ஒரு மன்னன் அரசாட்சி புரிய வேண்டும் என்றால் அதற்கு ஒரு நாடு தேவை. அதாவது பூமி ..மண் …எனவே குடும்ப தலைவருக்கான இடம் என்பதால், தென்மேற்கை மண் தத்துவமாக கூறபட்டது.

12) தென்மேற்கு மூலையை, ஏன் மூடியவாறு இருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது?

ஒரு ஜோதிடரிடம் போய் இந்தக் கேள்வியை கேட்டால், அந்த திசை நைருதி என்ற அரக்கனின் திசை அதனால் அது மூடி இருக்க வேண்டும் என்றும், இன்னும் சிலர் அது ராகுக்குரிய திசை ராகு என்பது பாம்பு விஷத்தை உடையது என்றும், இன்னும் சிலர் ராகு போகக்காரகர் எனவே ஆணும் பெண்ணும் போகத்திற்கு ஏற்ற இடம் எனவே, அது, மூடியவாறு இருக்க வேந்டும் என்றும் பல கதைகளைச் சொல்லிவிடுவார்கள். ஆனால் அதற்கு பின்பு, ஓர் அறிவியல் கூற்று உள்ளது என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

நம்முடைய இந்திய நாட்டின் பருவமழைகள் என்பது, வடகிழக்கு பருவ மழை, தென்மேற்கு பருவ மழை என்பதாகும்.
இதில் கோடை காலம் முடியும் தருவாயில் கோடைக் காற்று வீசும். இந்தக் காற்றை ஊதக்காற்று என்பார்கள். மேலும் இந்தக் காற்றானது, தூசு நிறைந்த காற்றாக வீசும்.

இந்த தூசு நிறைந்த ஊதகாற்றானது, தென்மேற்கில் வாசல் வைத்திருந்தால் அது வீட்டினுள் வரும். இது வீட்டினில் இருப்பவர்களின் ஆரோக்கியத்திற்க்கு மிக தீங்கை உருவாக்கும்.
கோடை காலத்தில் மேற்கு திசை நோக்கி பயணித்தால், எளிதில் உடல் சோர்வடைந்து விடுவதை காணலாம்.
மேலும் சூரியன் தினமும் மறையும் திசையானது மேற்கு. எனவே இரவு 11 மணி வரையிலும் வீட்டின் மேற்கு சுவரானது அதிலும் தென்மேற்கு சுவரானது சூடாகவே இருக்கும். சுவற்றின் சூடானது எளிதில் வீட்டினுள் வராமல் இருப்பதற்காக இந்த சுவரானது தடிமனமாகவும் மேலும் அந்த சுவர்களை வீட்டின் ஒட்டிய உள்பகுதியில் அலமாரிகள், பீரோ, போன்றவைகளை வைக்க பரிந்துறைக்கப்படுகிறது. இதனால் அதீத வெப்பம் வீட்டினுள் பரவாமல், மிதமான வெப்பம் மட்டுமே வரும்.

மேலும் இரவு நேரத்தில் கிழக்கு திசை குளிர்ச்சியாகவும், மேற்கு திசை வெப்பமாகவும் இருக்கும். இந்த இரண்டு நிலைகளும் சந்திக்கும்போது மிதமான வெப்பநிலை உருவாகும்.
வருடம் முழுதும் சீரான ஒரேமாதிரியான வெப்பநிலையைக் கொண்ட ஒரு அறை என்றால் அது தென்மேற்கு அறை மட்டுமே.

சீரான ஓரே மாதிரியான வெப்பநிலை ஓர் அறையில் இருந்தால்தான் நல்ல தூக்கமும் கிடைக்கும் அதேபோல் ஆணும் பெண்ணும் சங்கமிப்பதற்கு ஏற்ற சூழலும் உருவாகும். எனவேதான் தென்மேற்கு அறையை குடும்ப தலைவருக்கான படுக்கையறைக்கு மட்டுமே உகந்த இடமாகவும், அந்த திசையில் வாசல் வைக்கக் கூடாது என்றும் கூறப்படுகிறது.

(கேள்வி பதில்கள் தொடரும்)