*டோரதி – விமர்சனம்!*

 

 

 

- Advertisement -

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இளையராஜாவின் இசையில் வந்திருக்கும் டோரதி.

இந்தப் படம் பேசும் மையப்பொருள் அட்டகாசமான ஒன்று.

ரெண்டு நண்பர்கள். அந்த நண்பர்களுடைய வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு திருப்பம். அந்தத் திருப்பத்தை அவர்கள் எதிர்கொள்ளும் விதம். அதிலிருந்து உருவாகும் உணர்வுகளும், அதற்கான தீர்வைத் தேடும் பயணமும்தான் படத்தின் மையம்.

ரொம்ப எமோஷனலான ஒரு கதையைச் சொல்லியிருக்கிறது. அதைவிட முக்கியமாக, இப்படியொரு கதையைப் பேசுவதற்கான தைரியமும், தேவையும் கார்த்திக் சுப்புராஜுக்கு எப்படி வந்தது என்பதே நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

கார்த்திக் நிறைய படங்கள் செய்திருக்கிறார். அதனால் Film Craft அவருக்கு நன்றாகக் கைகூடுகிறது என்பது படத்தில் தெரிகிறது.

ஆனால் ஒட்டுமொத்தமாக திரைக்கதையைப் பார்க்கும்போது சில குறைகள் இருக்கின்றன.

முதல் பாதி, வழக்கமான மதுரைப் பின்னணியில் உருவாகும் திரைப்படங்களின் மொழியிலேயே நகர்கிறது. வன்முறை, ஆபாச வார்த்தைகள், மனிதர்களின் அழுக்கான பக்கங்கள், அந்த வாழ்வியல் என்று எண்பதுகளின் காலக்கட்டத்தில் நடப்பது போன்ற ஒரு பின்னணியில் கதை சொல்லப்படுகிறது.

அதே நண்பர்கள் வளர்ந்து பெரியவர்களாகி நண்பர்களாக இருக்கும் பகுதிகள் வரும் இடத்தில், முதல் பாதி கொஞ்சம் இழுவையாகவே உணரப்படுகிறது.

தேவையில்லாத பல காட்சிகள் இருப்பது போலவும், ஒரு கோர்வையான திரைக்கதை அமைப்புக்குள் கதை நகரவில்லை என்பது போலவும் தோன்றுகிறது.

ஆனால் இரண்டாம் பாதியில் வரும் அந்தத் திருப்பம் நம்மை நெகிழச் செய்கிறது.

நாம் அந்தச் சம்பவத்துடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருக்காவிட்டாலும், நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களைப் பற்றிய ஒரு பார்வையை உருவாக்குகிறது என்பதால் அந்த இடத்தில் ஒரு எமோஷனல் கனெக்ட் நமக்கு ஏற்படுகிறது.

அதன் கோர்வையும், முடிவை நோக்கி நகரும் விதமும் இரண்டாம் பாதியில் நன்றாக அமைந்திருக்கிறது.

இளையராஜாவின் பங்கு…

ஒட்டுமொத்த திரைப்படத்துக்கும் அவருடைய இசை முழுமையாகப் பொருந்துகிறது, முழுமையாகச் சிறப்பாகச் செய்திருக்கிறார் என்று என்னால் சொல்ல முடியவில்லை.

ஆனால் அற்புதமான சில கணங்களை இளையராஜா உருவாக்கியிருக்கிறார்.

அது இளையராஜாவால் மட்டுமே சாத்தியம் என்று சொல்லக்கூடிய தருணங்கள்.

குறிப்பாக சில முக்கியமான இடங்களில் தன்னுடைய முந்தைய காலத்து இசையின் சாயலைப் பயன்படுத்துவதும், அந்தப் பழைய இளையராஜா இசையின் உணர்வை மீண்டும் கொண்டு வருவதும், சில காட்சிகளை அட்டகாசமான திரை அனுபவமாக மாற்றுகிறது.

அதேபோல “முத்துமணி” பாடல்.

ப்ரமோஷனல் சாங்காக அந்தப் பாடல் வெளியானபோது அது கொடுத்த உணர்வும், அந்தப் பாடலைப் பற்றிய நம்முடைய அபிப்ராயமும் வேறு.

ஆனால் திரைப்படத்திற்குள் அந்தப் பாடல் முற்றிலும் வேறு ஒரு தளத்தில், வேறு ஒரு அர்த்தத்துடன் வந்து நிற்கிறது.

அந்தப் பாடல் இடம்பெறும் இடமும், அதைத் தொடர்ந்து கிளைமாக்ஸை நோக்கி நகரும் பகுதிகளும் சேர்ந்து, இந்தத் திரைப்படத்தின் உச்சபட்ச உணர்வுப்பூர்வமான திரை அனுபவத்தை உருவாக்குகின்றன.

நடிப்பில், சுப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகரைக் குறிப்பாகச் சொல்ல வேண்டும். ரொம்ப பிரமாதமான நடிப்பு.

மற்ற நடிகர்களின் Performance-ம், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் பணியும் படத்திற்கு உறுதுணையாக இருக்கின்றன.

குறிப்பாக ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு அவர்களின் அனுபவமும், அவருடைய சினிமாட்டோகிராஃபி பார்வையும் இந்தப் படத்திற்கு ஒரு பலம்.

ஒட்டுமொத்தமாக இந்தத் திரைப்படத்தை ஒரு முழுமையான திரைப்படமாகக் கொண்டாட முடியாவிட்டாலும், அது பேசும் கருப்பொருளுக்காகவும், அதைச் சொல்லியிருக்கும் விதத்திற்காகவும், ஒரு கமர்ஷியல் வடிவத்திற்குள் ஒரு சீரியஸான ஆர்ட் ஃபார்ம் கதையை கொண்டு வந்து சேர்த்திருப்பதற்காகவும் இந்தப் படம் பாராட்டப்பட வேண்டியதும், கவனிக்கப்பட வேண்டியதுமான ஒரு திரைப்படம் என்று எனக்குத் தோன்றுகிறது.

ஒரு திரைப்படம் நம்மை யோசிக்க வைக்கும்போது, அதன் குறைகளைக் கடந்து அதைப் பற்றி பேச வேண்டிய அவசியம் உருவாகிறது.

டோரதி – அப்படிப் பேசப்பட வேண்டிய ஒரு திரைப்படம்.

 

நன்றி: Karthik/facebooks