‘ஜாக்கி’ திரைப்பட விமர்சனம்

Casting : Yuvan Krishna, Ridhaan Krishnas, Ammu Abhirami, Kali, Madhusudhan Rao, Sithan Mohan, Saranya Ravi, Phathmen, Yogi, Sai Dinesh, Chidambaram, Praveen, Aathav, Eesha

Directed By : Dr.Pragabhal

- Advertisement -

Music By : Sakthi Balaji

Produced By : PK7 Studios LLP – Prema Krishnadas, C Devadas, Jaya Devadas

நாயகன் யுவன் கிருஷ்ணா, ஆட்டோ ஓட்டிக்கொண்டே கிடா சண்டை மீது அதிக ஈடுபாடு உள்ளவராக இருக்கிறார். வசதி படைத்தவரான ரிதன் கிருஷ்ணா கிடா சண்டையை கெளரவமாக கருதுகிறார். இதற்கிடையே, யுவன் கிருஷ்ணாவின் கிடா, ரிதன் கிரிஷ்ணாவின் கிடாயை ஒரு முறை வீழ்த்தி விட, அதன் மூலம் இருவருக்கும் இடையே பகை உண்டாகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி வெட்டு குத்து, அடிதடி நடக்கிறது. கிடா சண்டை மூலம் ஆரம்பித்த இவர்களுடைய பகைக்கு, அதே கிடா சண்டை போட்டி மூலம் முற்றுப்புள்ளி வைக்க ஊர் பெரியவர்கள் முடிவு செய்கிறார்கள். அதன் பிறகு என்ன நடந்ததுதான் ‘ஜாக்கி’-யின் கதை.

மதுரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடக்கும் கிடா சண்டை போட்டியை மையப்படுத்திய கதையை எதார்த்தமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் டாக்டர்.பிரகாபல, கிடா சண்டை போட்டிகளை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருப்பது படத்திற்கு ப்ளஸ் பாயிண்ட்!

நாயகனாக நடித்திருக்கும் யுவன் கிருஷ்ணா, மதுரை இளைஞராக நடிப்பில் அசத்தியிருப்பதோடு, தான் வளர்க்கும் கிடா போல் சண்டைக் காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார். ஒரு பக்கம் அடிதடி, மறுபக்கம் அம்மு அபிராமி உடனான காதல்!

வில்லனாக மிரட்டியிருக்கும் ரிதன் கிருஷ்ணா, ”கிடா சண்டை மட்டும் அல்ல, ரவுடிசமும் பண்ண தெரியும்” என்று அதிரடி வசனங்கள் பேசி, தன் பங்கிற்கு பங்கு வகிக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி, கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக, கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்.

மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவி, பத்மன், யோகி, சாய் தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தம்!

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமார், மதுரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். கிடா சண்டை மற்றும் போட்டிகள் படமாக்கிய விதம் உண்மைக்கு நெருக்கமாக இருப்பது படத்திற்கு கூடுதல் பலம்தான்.

சக்தி பாலாஜியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கிடா சண்டை போட்டிகளை பரபரப்பாக்கி இருக்கிறார்.

என்.பி.ஸ்ரீகாந்த், படத்தை அழகாக தொகுத்து, திரைக்கதையின் சுவாரஸ்யத்தை அதிகரித்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் டாக்டர்.பிரகாபல், உண்மைச் சம்பவங்களை திரைமொழியில் சரியாக சொல்லியிருக்கிறார். குறிப்பாக கிடா சண்டை மற்றும் போட்டிகளை மிக தத்ரூபமாக படமாக்கி பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்!

‘ஜாக்கி’-யின் கதைக்கரு பழசுதான் என்றாலும், கிடா சண்டைகள் நீளமாக இருப்பதை நறுக்கி இருந்தால், இன்னும் பவர்ஃபுல்லாக இருந்திருக்கும்!