காட்டாளன் – திரைவிமர்சனம்


வனப்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சுனில், யானைகளை வேட்டையாடி அதன் தந்தங்களை கடத்தி பெரும் லாபம் பார்க்கிறார். அவரது தொழிலுக்கு போட்டியாக வரும் கபீர் துகான் சிங், காவல்துறையின் உதவியுடன் அந்த தந்தங்களை கைப்பற்ற முயற்சிக்கிறார். இந்த மோதலுக்கு நடுவே நாயகன் ஆண்டனி வர்கீஸ் அறிமுகமாகிறார்.
ஆரம்பத்தில் சுனிலின் தரப்பில் செயல்படும் ஆண்டனி வர்கீஸ், பின்னர் பழங்குடியின மக்களின் பக்கம் சாய்ந்து, கடத்தலுக்கு எதிராக போராட தொடங்குகிறார். இதனால் ஒன்றுக்கொன்று எதிராக இருந்த சுனிலும், கபீர் துகான் சிங்கும் கைகோர்க்க, அவர்களை எதிர்த்து ஒரு பெரிய போராட்டத்திற்கு தயாராகிறார் ஆண்டனி வர்கீஸ். இந்த மோதலில் வெற்றி பெற்றது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்து இருக்கும் ஆண்டனி வர்கீஸ், திரையில் தோன்றும் விதம், அவரது உடல்மொழி, தோற்றம் என பல இடங்களில் மோகன்லாலை நினைவுபடுத்துகிறார். அதிக வசனங்கள் இல்லாமல், பார்வை மற்றும் உடல்மொழி மூலமாக கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்க முயற்சித்திருக்கிறார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவரது உழைப்பு தெரிகிறது.
ஆந்திர சுனில் வழக்கம்போல கொடூரமான வில்லனாக மிரட்டுகிறார். கபீர் துகான் சிங்கும் ஸ்டைலான வில்லனாக தனக்கான இடத்தைப் பிடிக்கிறார்.
துஷாரா விஜயன், பாதிக்கு மேல் குறுகிய நேரமே வந்தாலும், ஆக்ஷன் காட்சிகளில் தனது உழைப்பை வெளிப்படுத்தி யிருக்கிறார். பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டர் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாக செய்திருக்கிறார்கள்.
பழங்குடியின மக்கள், யானை தந்த கடத்தல், கொடூரமான வில்லன்கள், மாஸான ஹீரோ, இடைவிடாத சண்டைக் காட்சிகள் என ஒரு பெரிய ஆக்ஷன் உலகத்தை உருவாக்க முயற்சி செய்து இருக்கிறார், இயக்குனர் பால் ஜார்ஜ். ஆனால் அந்த உலகத்திற்குள் நம்மை முழுமையாக இழுத்துச் செல்ல வேண்டிய திரைக்கதை மிகவும் பலவீனம். பார்ப்பவர்களிடம் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்த தடுமாறுகிறது!
தந்த கடத்தல் போன்ற முக்கியமான விஷயத்தை மையமாக வைத்திருந்தாலும், அதுகுறித்த ஆழமான காட்சிகள், இல்லை. பழங்குடியின மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை சொல்லாமல் பாட்டு, சண்டை என்றே பயணிப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது.
ஒளிப்பதிவாளர் ரெனாடைவின் பங்கு, படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். காடு சார்ந்த காட்சிகள், சண்டைகளை பிரம்மாண்டப்படுத்தி, அமர்களப் படுத்தியிருக்கிறார்.
ரவி பஸ்ரூரின் பின்னணி இசை, மாஸ். ஆனால் பல காட்சிகளில் அதுவே மைனசாக மாறி விடுகிறது! எதிர்பார்த்த படம், ஏமாற்றமாக அமைந்துவிடுகிறது.
