*கருப்பு விமர்சனம்*


சாமி மேல் சத்தியம் செய்வது உலக வழக்கம். ஆனால் இங்கு சாமியே சத்தியம் செய்கிறது- ‘நான் என்னை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டேன், என் சக்தியை உபயோகப்படுத்த மாட்டேன்’ என்று. ஆனால் அடுத்த காட்சியிலேயே அதையும் உருப்படியாகக் கடைப்பிடிக்கவில்லை. ஆக, சாமியே சத்தியத்தை மீறுவதுதான் பாலாஜிஸம்.
ஆறு பேர் அடங்கிய குழு திரைக்கதை அமைத்துள்ளது. அதனாலோ என்னவோ கண்டபடி தறி கெட்டு மனம் போன போக்கில் கதை அலைகிறது. இருந்தாலும் மேக்கிங் மற்றும் ட்ரீட்மெண்டில் களை கட்டுகிறது கருப்பு. நிகழ்காலச் சம்பவங்களைச் சகட்டுமேனிக்குக் கலாய்த்துள்ளார்கள் – ஆர் ஜே பாலாஜியின் கிரிக்கெட் கமெண்ட்ரி உட்பட.
சுவாரசியமான கோர்ட் ரூம் ட்ராமாவுக்கான திரைக்கதைதான். திருப்பங்களையும் சட்ட நுணுக்கங்களையும் டீடெய்லாக விவரித்து இயல்பான கதையாக இருந்திருந்தால் படம் அனேகமாக இந்தியத் திரையிலேயே முக்கியமான படமாக இருந்திருக்கும். ஆனால் கடவுளைப் புகுத்திக் கொஞ்சம் கந்தரலங்காரமாகி விட்டது.
நீதிமன்ற நடவடிக்கைகளை கீழ்மட்டம் முதல் மேல் மட்டம் வரை விமர்சித்திருப்பது துணிச்சல். அதற்காக நீதிபதியே வக்கீலுடன் ஏதோ நேருக்கு நேர் பேட்டி போலச் சட்டப் பாடம் எடுப்பது மிகை. இடைவேளை வரையிலான சென்டிமெண்ட் பலம். இரண்டாம் பாதியில் பழைய ராமநாராயணன் ஐயாவின் பக்திப் படம் போலப் பாதை மாறுகிறது கருப்பு.
கடவுளின் சக்திக்கு எல்லை வகுப்பதெல்லாம் ஆர் ஜே பாலாஜி பாணிக் காமெடி போல. அநீதியை ஒழித்து நீதியை நிலைநாட்ட வரும் கடவுள் மொத்தமாக உலகையே மாற்றலாமே, அதென்ன ஏழுகிணறு மாவட்ட நீதிமன்றத்தில் மட்டும் களமாடுகிறார்? இப்படிப் பலப்பல கேள்விகள். ஆனால் அதையெல்லாம் கவனிக்க விடாமல் பரபரவென்று நகர்கிறது படம்.
மலையாளப் படங்கள் பாணியில் சுமார் 40 நிமிடங்கள் கழித்துத்தான் திரையில் வருகிறார் ஹீரோ. அந்த வகையில் பார்த்தால் படத்தின் ஹீரோ ஆர் ஜே பாலாஜி தான். துவக்கம் முதல் முடிவு வரை அவர்தான் திரையை ஆக்கிரமிக்கிறார். திரிஷா கேரக்டருக்கு யாரேனும் ஒரு துணை நடிகையைப் போட்டுச் செலவை மிச்சப்படுத்தியிருந்திருக்கலாம். ஐடியா இல்லாத தயாரிப்பாளர். அவர் படத்தில் ஏன் வருகிறார் என்றே தெரியவில்லை.
நகையை இழந்தவர்கள் அதைத் திரும்பப் பெறப் படும் பாடுதான் படத்தின் உயிர் நாடி. நீதிமன்றத்திலும் மாபியாக்கள் ஆதிக்கம் என்பது திரையில் புதிய சிந்தனை. அதிலும் கேஸ் கட்டைக் கீழே வைத்து எந்த வக்கீலுக்காவது தைரியம் இருந்தால் இதை எடுக்கலாம் என்று சவால் விடுவது நல்ல காட்சியமைப்பு.
ஒளிப்பதிவு, கலை அலங்காரம், துறைகளுக்குப் பெரிதாக வேலை இல்லை. அதிகபட்சம் கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் போன்ற லொகேஷன்கள்தான் கதைக்களம். சாய் அபயங்கரின் பின்னணி, முன்னணி, இடையணி, பாடல்கள் எல்லாம் பயங்கரம். காதுகளை அடைத்துப் பஞ்சு சொருகுகின்றன. இவருக்குப் பேசாமல் ‘பயங்கர்’ என்றே பெயர் வைத்திருக்கலாம்.
– உங்களுக்கு என்னங்க, நீங்க கடவுள், நீங்க எதையும் ஈசியாச் செஞ்சிரலாம். நான் மனுஷன். என்னால் எப்படி முடியும்?
– நான் அவங்கள அலைய விட்டிருப்பேன் ஆனா சாக விட்டிருக்க மாட்டேன். இந்தச் சாவு என் கணக்குல வராது…
– அந்த டேஸ்டான பிரியாணியை நாங்க எத்தனையோ பேருக்கு வாங்கி கொடுத்தோம். ஆனா இன்னைக்கு வரைக்கும் நானும் என் அப்பாவோ அதைச் சாப்பிட்டதே இல்லை…
இம்மாதிரி வசனங்கள் பிரியாணிச் சுவை. நட்ராஜ், சிவதா, ஸ்வாசிகா, ஜார்ஜ் மரியான், மன்சூர் அலிகான், தீபா சங்கர்… என்று நட்சத்திரக் கூட்டம். அனைவரின் நடிப்பும் கச்சிதம்.
விருந்தில் டெசர்ட் போல க்ளைமாக்சில் சூர்யாவின் சாமியாட்டம் அபாரம். காந்தாராவை நினைவு படுத்தினாலும் மேக்கப், கெட்டப், உணர்ச்சிகள், நடன அசைவுகள் என்று எல்லாமே காந்தாராவுக்கும் ஒரு படி மேலே. காந்தாரா ஆட்டத்தில் இருந்த ஒரு வித செயற்கைத் தன்மை கருப்பின் ஆட்டத்தில் இல்லை. அந்த ஆட்டம் படத்தின் குறைகள் அனைத்தையும் மறக்கச் செய்து விடுகிறது என்பதும் உண்மை.
வெகு காலம் கழித்து சூர்யாவிற்கு ஒரு மாஸ் கமர்சியல் ஹிட். வாழ்த்துக்கள் சூர்யா, ஆர் ஜே பாலாஜி மற்றும் படக் குழுவினருக்கு.
கருப்பு – சிறப்பு.
*நன்றி: பரிமேலழகன்*
