அய்யனார் ஈடாடியின் இரண்டு சிறுகதை தொகுப்புகள்

சிறுகதையோ நெடுங்கதையோ படிக்கும் போது ஒரு பரபரப்பும், முடித்தபின் ஒரு பாரமும் மனதில் தங்கி நிற்கும். அய்யனார் ஈடாடியின் கதையில், மூதூர் காதை, எனதூர் சரித்திரம் வாசிக்கும்போது ஒரு வாசிப்பு அனுபவமே ஏற்படவில்லை; மாறாக அந்தந்த மக்களோடு, அந்தந்த இடங்களில் வாழ்ந்ததாகவே ஒரு உணர்வு ஏற்படுகிறது! கதைகளின் இயல்பான போக்கு இவை. கற்பனை என நினைக்கத் தோன்றவில்லை. ஆனால் ஒவ்வொரு கதையிலும் நிகழும் முரண் சம்பவங்களின் பாதிப்பை, கதை மாந்தர்கள் இயல்பாகவே கடந்து செல்வது கதாபாத்திரங்களின் தன்மையா அல்லது அய்யனாரின் மனப்பக்குவமா என்ற ஒரு கேள்வி எழுகிறது. நொண்டி வாத்து கதையில் வாத்தை திருடி விட்டதாக பெரிய கருப்பன் காலை உடைத்த ராவுத்த குடும்பன், நொண்டி வாத்தை மகன் திருடவில்லை என தெரிந்ததும் அவன் வாத்தை திருடக்கூடாது என சத்தியம் வாங்குவதும், தோப்பு காவல் கதையில் தவசி நாடாரை, வயதாகிவிட்டது என்ற காரணத்திற்காக வேலை நீக்கம் செய்யும்போது, ஆண்டாள் அம்மா, ஒரு குற்ற உணர்ச்சியின்றி இருப்பதும் தவசி நாடார் அதை சுலபமாக ஏற்றுக் கொள்வதும் கதையில் ஒரு ஸ்டைலிஸ்டிக்ஸ் அப்ரோச். சமீபத்திய வெளியீடுகள், இதைப் போன்ற சுருக்கமான, அதேநேரம் நேர்த்தியான வட்டார வழக்கோடும், தெளிவான உரைநடையோடும், வேறு ஏதும் புதினங்கள் வந்திருக்கிறதா என்பது சந்தேகமே. ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு முத்திரை இருந்திருந்தால், இந்தக் கதைகள் அனைத்தும் புதுமைப்பித்தன், ஓ ஹென்றி வரிசையில் இணைந்திருக்கும்!

எனது ஊர் சரித்திரம் அதே நடை அதே லாவகம். கெழவங்காணி கதையும், கசியாத கண்களில் நீரை வரவழைக்கும் தன்மை பெற்றவை. எதார்த்த நடையில் மின்னல் வெட்டிவிட்டுச் செல்வது போன்று கடந்து விடுகிறது. ஆனால் செவினியின் வாழ்வில் நடந்த சம்பவங்கள், துயரங்கள் ஒரு பெருமழையைப்போல இப்பவும் எத்தனையோ செவினிகளின் வாழ்க்கையில் கரைபுரண்டு கொண்டுதான் இருக்கிறது.

- Advertisement -

கருவாயன் கதையில் உள்ள எதார்த்தம்… ! ஆளாத்தி கதை, நிஜமா கற்பனையா என புரியவில்லை. அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று உள் மனது விரும்புகிறது.

ஆலாத்தி, கற்பனை என்றாலும் அது உண்மையாக வேண்டும் என்று ஒரு வாசகர் நினைத்து விட்டால், அது படைப்பாளியின் வெற்றிதானே! வாழ்த்துகள் அய்யனார் ஈடாடி. தொடர்ந்து எழுதுங்கள். நிறைய மாந்தர்களை அறிமுகப்படுத்துங்கள்.

வெளியீடு: யாப்பு பதிப்பகம். தொடர்புக்கு 07639297871