வேறு போக்கிடம் இல்லாத காரணத்தினால் சினிமாக்களுக்கும், மால்களுக்கும், கோவில்களுக்கும் பெண்கள் செல்கிறார்கள் என்பதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது!
வழக்கமான தமிழ் சினிமாதான் என்றாலும், வழக்கமான மொக்கைகள் அற்றிருந்தது. மிகத்தீவிரமான ஒரு கதைக்கரு. உச்சக்கட்ட நாடகத் தருணங்கள் கொண்ட கதைப்புலம். தமிழ் சினிமாவில் மிக குறைவாக காட்சிப்படுத்தப்பட்ட கதைக்களம். ஆனாலும் தமிழ் சினிமா ரசிகர்களின் மூன்றாந்தர எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்கிற வணிக நெருக்கடிதான் படத்தை வீணடித்திருக்கிறது.
நிமிசா யார் என்று பார்த்தேன். என் ஆசை முகங்களில் ஒன்று அவருடையதும். இந்தப் படத்தில் அவரின் நடிப்பினைப் பார்த்த பிறகு அவரின் தீவிர ரசிகனாகவே மாறிவிட்டேன். மிகச்சிறந்த நடிப்பு. பேரழகி.
முதல் அரைமணி நேரம் தேவையில்லாத தேய்வழக்குகள். கடைசியில் இராம நாராயணன் கதையிலான உச்சக்கட்ட காட்சிகள். அன்னையரின் உலகத்தை அவர்களின் உள்ளுணர்வை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அன்னையாக நிமிசா வரும் காட்சிகள் அனைத்தும் ஆகச்சிறந்தவை. படைப்பூக்கம் நிறைந்த தருணங்கள். படத்தில் மூன்று நான்கு இடங்களில் கண்கள் பொங்கின.
ஒரு க்ரைம் த்ரில்லர் என்றுதான் இந்தப் படத்தை வகைப் படுத்தியிருக்கிறார்கள். ஓடிடி வந்த பிறகு ஏகப்பட்ட க்ரைம் த்ரில்லர்கள் பார்த்து அலுத்துவிட்டது. கேரளாவில் லாட்டரிக்கு அடுத்து க்ரைம் த்ரில்லர் திரைக்கதைகள்தான் அதிகம் லாபம் அளிக்கின்றன போலும். இந்தப் படத்தை ஒரு சிறந்த க்ரைம் த்ரில்லர் என்ற நோக்கில் நான் பாராட்டவில்லை. தாய்மையின் உணர்ச்சிகரமான தருணங்கள் மிகச் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன. இது தமிழ் சினிமாவில் அபூர்வம்.
அப்புறம் இயக்குநருக்கு கைவசப்பட்டுள்ள திரைமொழி. அது பார்வையாளரின் மீது இயக்குநருக்கு இருக்கும் உயர்ந்த மதிப்பீட்டினைக் காட்டுகிறது. தமிழ்சினிமா ரசிகர்கள் என்றாலே என முன்வைக்கப்படும் ஒரு அவதானிப்பை மீறி உலக சினிமா அரங்கு சார்ந்த ஒரு பிரக்ஞை அவரிடம் இருக்கிறது. மிக நுட்பமான பாவனைகளை மிகச்சிறப்பாக திரையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
தமிழ்சினிமா குறித்து விரிவாக எழுத வேண்டாம் என்றிருக்கிறேன். இங்கே நுாற்றுக்கணக்கான பேர்கள் மாங்கு மாங்கு என்று எழுதித் தள்ளுகிறார்கள். இது அவர்களின் வேலை. அவர்களுக்கு தெரிந்ததை அவர்கள் மிகச்சிறப்பாக செய்யட்டும்.
ஆனால் நல்ல சினிமாவை ஏங்கும் ஒருவன் செய்ய வேண்டிய பணிகளில் இதுவும் வரும் என்பதால் இங்கே எழுதுகிறேன். வாரக்கடைசியில் எந்தப் படம் பார்க்கலாம் என்று குடும்ப சகிதம் யோசிப்பவர்கள் இந்தப்படத்தை நம்பிச் செல்லலாம்.
ஒரு குத்துப்பாட்டு இரண்டு மூன்று சண்டைக் காட்சிகள் என்று கண்றாவிகள் இருந்தாலும் அவற்றைத் தாண்டியும் ரசிக்க இந்தப் படத்தில் நிறைய உள்ளது.
நிமிசா சஜயன் என்கிற தேவதைக்காகவே பார்க்கலாம்.
நன்றி:
இராயகிரி சங்கர்