*’நூறு சாமி’ விமர்சனம்*

 

 

 

தமிழக் கிராமம் ஒன்றில் வசிக்கும் செல்வி (ஸ்வாசிகா) இளம் வயதிலேயே கணவனை இழந்தவர். தனது இரு குழந்தைகளையும் அக்கறையுடன் கடும் போராட்டத்திற்கு மத்தியில் வளர்க்கிறார். உறவினர்கள் யாரும் அவருக்கு துணை நிற்காத சூழலில், பொருளாதார பிரச்னைகளை சமாளித்து, தனது பிள்ளைகளை படிக்க வைக்கிறார். பின் வளர்ந்து வந்த தன் பிள்ளைகளிடம், மறுமணம் தொடர்பாக உள்ள விருப்பத்தை தெரிவிக்கிறார். அதனால் ஆத்திரமடைகிறார், மூத்த மகனாக வரும் பாஸ்கர் (அஜய் திஷான்).

ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு அம்மாவின் விருப்பத்தை புரிந்து கொண்ட இரண்டு மகன்களுமே, அவருக்கு மறுமணம் செய்ய விரும்புகின்றனர். ஆனால் அம்மா செல்வி, சம்மதம் சொல்லாத நிலை. அவருக்கு மறுமணம் நடந்ததா இல்லையா என்பதே ‘நூறு சாமி’ திரைப்படத்தின் க்ளைமாக்ஸ்.

பத்து வருடங்களுக்கு முன் நடந்த உண்மை சம்பவமே இதன் அடிப்படையான கதை. இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சசி.

உணர்ச்சிமிகு முகபாவனைகள், தவிப்பு கலந்த நடிப்பு என படத்தை முழுக்க முழுக்க தாங்கி இருக்கிறார் கதானாயகி, ஸ்வாசிகா. அவருக்கு இது மிக முக்கியமான படம்.

பிள்ளைகளுக்காக உறுதியாக போராடுவது, கிராமத்து ஆண்களிடம் எதிர்த்து நிற்பது, தயக்கத்துடன் மறுமணத்தை அணுகுவது என காட்சிக்குக் காட்சி, உருகி நடித்து இருக்கிறார். யாரும் இல்லாத நேரத்தில் ஃபேனுடன் பேசும் இடங்களில் நெகிழ வைக்கிறார்.

விஜய் ஆண்டனி, வழக்கத்திற்கு மாறான நடிப்பில் அசத்துகிறார். அக்கறையான, தெளிவான மகனாக அஜய், துருதுருவென வரும் சக்தியும் மனதில் நிற்கிறார்கள். இவர்களுடன் கருணாஸ், பாலாஜி சக்திவேல் , லிஜுமோள், காவியா அனில், பகவதி பெருமாள், ஜென்சன், தாமரைச்செல்வி ஆகியோர் நடித்துள்ளனர். இரண்டாம் பாதியில் சில காட்சிகளே வந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் விஜய் ஆண்டனி.

பிள்ளைகள் இருக்கும் போது, மறுமணம் செய்து கொள்ள பெண்கள் சந்திக்கும் சவால்கள், அது கொடுக்கும் அவலங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றை சரியாகச் சொல்லி இருக்கிறார், இயக்குநர் சசி. வசனங்கள் மிகச்சிறப்பு.

வசூலைக் கடந்து, விருதுகளைத் தட்டிவரும், இந்த நூறு சாமி.

Comments (0)
Add Comment