*சினிமாவைப் பார்த்து மட்டும் ஒளிப்பதிவைக் கற்க முடியாது*

 

 

 

‎லென்ஸ் வழியே ஒரு புதிய உலகம் படைத்துக் கொண்டிருப்பவர், ஒளிப்பதிவாளர் பாவெல் நளினி நடராஜன். அவர் பணியாற்றிய ‘சுழல்’ வெப்சீரியஸ் முதல், ஆவணப்படங்கள் வரை  தனது சுவாரஸ்யமான அனுபவங்களையும், சவால்களையும் இங்கே விரிவாகப் பகிர்ந்து கொள்கிறார்…

கே: ‎‎இன்ஸ்டாகிராமில் உங்க underwater showreel viral-ஆ இருக்கு. அதோட முயற்சி பற்றி சொல்லுங்க.   தமிழ் சினிமால இதே போல் ட்ரை பண்ணி இருக்கீங்களா?

ப: ‎உண்மையைச் சொல்லப் போனால், இந்த showreel வைரலானதா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதை உருவாக்கியதற்குப் பின்னால் ஒரு முக்கியமான நோக்கம் இருக்கிறது. இதுவரை தமிழ் சினிமாவில் நீருக்கடியில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் (Underwater sequences) இருந்தால், பெரும்பாலும் மும்பையில் இருக்கும் குழுவினரைத்தான் அழைப்பார்கள். அந்த நிலையை மாற்றி, சென்னையிலேயே அத்தகைய காட்சிகளைப் படமாக்கத் திறமையான குழு இருக்கிறது என்பதை எஸ்டாப்ளிஷ் (Establish) செய்வதுதான் இந்த ஷோரீலின் முக்கிய நோக்கம்.
‎இது குறித்து நான் ஏற்கனவே தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கமான SICA-வில் உள்ள திரு. அருண்குமார் அவர்களிடம் பேசியிருக்கிறேன். நான் ஒளிப்பதிவாளர் கே.வி. குகன் (K.V. Guhan) அவர்களிடம் உதவியாளராக இருந்தபோதே அருண்குமார் சாருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் உண்டு. எனவே, இந்த வசதி மற்றும் திறமை இப்போது இங்கேயே இருக்கிறது என்பதை SICA மூலம் ஒரு விளம்பரம் (Add) போல வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளேன். இந்த ஷோரீல் மூலம் இதுவரை எனக்கு நேரடித் திரைப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், எதிர்காலத்தில் நிச்சயம் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என்ற முழுமையான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இப்போதைக்குச் சென்னையில் இந்தத் தொழில்நுட்ப வசதிகளை அதிகப் படுத்துவதற்கான பணிகளை இந்த ஆண்டிற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளேன்.

கே: ‎‎சுழல்’ (Suzhal) போன்ற ஒரு க்ரைம் த்ரில்லரில் இருளையும் மர்மத்தையும் காட்சிப்படுத்தியது ஒரு தனி மொழி. அந்தத் த்ரில்லர் mood (Vibe) உருவாக்க நீங்கள் கையாண்ட நுணுக்கங்கள் என்ன?

‎’ப: ‘சுழல்’ தொடரில்  அண்டர்வாட்டர் காட்சிகளுக்கான கேமரா ஆபரேட்டராகப் (Collaborative Work) பணியாற்றினேன்.  இருப்பினும், நீருக்கடியில் ஒளியமைப்பது (Underwater Lighting) போன்ற விஷயங்களில் இயக்குநரின் கற்பனைக்கு ஏற்ப  கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்குவது ஒரு கூட்டு முயற்சியாக அமைந்தது.
‎நீருக்கடியில் இயல்பாகவே ஒரு மர்மமான சூழலை உருவாக்க, தண்ணீரை கலங்களாக (Disturb the water) செய்ய வேண்டும். ஆனால், அப்படிச் செய்யும்போது தண்ணீர் மிகவும் கலங்கலாகிவிட்டால் (Too murky), அன்றைய படப்பிடிப்பே வீணாகிவிடும் அபாயம் உள்ளது. எனவே, பாதுகாப்பான மற்றும் சிறந்த முறையாக, காட்சிகளைத் தெளிவாகப் படம் பிடித்துவிட்டு, பிறகு எடிட்டிங்கில் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்வதே சிறந்தது என்று நினைக்கிறேன்.
‎இருளும் மர்மமும் (Darkness & Mystery) த்ரில்லர் உணர்வைக் கொண்டுவர, நீருக்கடியில் படமாக்கப்பட்ட காட்சிகளைப்
பின்தயாரிப்பு (Post-production) பணிகளின்போது ‘டார்க்’ (Darken) செய்வதன் மூலம் அந்த மர்மமான சூழல் உருவாக்கப்படுகிறது.
‎இல்லாத விவரங்களை உருவாக்குவதைவிட, படம்பிடிக்கப்பட்ட தெளிவான காட்சிகளில் இருந்து தேவையானவற்றை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றைச் சரி செய்வது எளிதானது மற்றும் பலனளிக்கக்கூடியது.

கே: ‎ஆவணப்படங்கள் எடுக்கும்போது கிடைக்கும் எதார்த்தம் (Realism), சினிமா எடுக்கும்போது எந்த அளவுக்குக் கைகொடுக்கிறது?

ப:‎ ஆவணப் படங்களைப் பொறுத்தவரை, நான் பிரெஞ்சு செய்தி நிறுவனமான AFP (Agence France-Presse) உள்ளிட்ட பல இடங்களுக்கு ஜர்னலிசம் மற்றும் டாக்குமெண்டரி பணிகளைச் செய்திருக்கிறேன். இந்த அனுபவத்திலிருந்து நான் கவனித்த ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு ஒளிப்பதிவாளரின் பார்வை என்பது எப்போதும் ‘சப்ஜெக்டிவ்’ (Subjective) ஆகத்தான் இருக்கும். உங்கள் கண்ணுமுன்னே ஒரு யதார்த்தமான நிகழ்வு நடக்கும்போது, அதை ஒரு கேமரா லென்ஸ் வழியாக நீங்கள் பார்க்கத் தொடங்கும்போதே அந்த யதார்த்தம் (Realism) அங்கே மறைந்து விடுகிறது என்பதுதான் என் கருத்து. உலகத்தில் ‘அப்ஜெக்டிவிசம்’ (Objectivism) என்று எதுவுமே கிடையாது. ஒரே விஷயத்தை இரண்டு பேர் வெவ்வேறு கோணங்களில் பார்க்கும்போது, அது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருக்கும். சினிமா (Fiction)  திரைப் படங்களைப் படமாக்கும்போது ஒளிப்பதிவாளரின் கட்டுப்பாட்டில் பல விஷயங்கள் இருக்கும். உதாரணமாக, கலை இயக்கம் (Art Department), உடைகள் (Costumes) போன்றவற்றை நம் விருப்பப்படி மாற்றி அமைக்க முடியும். ஆவணப் படங்களில் இப்படி அனைத்தையும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அங்கு நடக்கும் நிகழ்வுகளை, நமக்குத் தேவையான கதையைச் சொல்லும் விதமாக நுணுக்கமாகத் தொகுக்க (Tweaking the story) முடியும்.
‎சுருக்கமாகச் சொன்னால், ஒளிப்பதிவாளராக என்னுடைய நோக்கம் அந்த ‘சப்ஜெக்டிவ்’ பார்வையைத் தாண்டி, எவ்வளவு தூரம் ஒரு விஷயத்தை அதன் உண்மைத் தன்மையோடு (Objectively) பதிவு செய்ய முடியும் என்பதுதான். சினிமா  படங்களில் நம்மால் சூழலைக் கட்டுப்படுத்த முடிந்தாலும், ஆவணப்படங்களில் கிடைக்கும் அந்த நிஜமான தருணங்களை லாவகமாகக் கையாள்வதே ஒரு சிறந்த பயிற்சியாக அமைகிறது.

கே: ‎‎நிஜ வாழ்க்கையை ஒளிப்பதிவு செய்யும் அனுபவம், ஒரு படைப்பாளியாக உங்களுக்கு எத்தகைய புரிதலைத் தருகிறது?

ப: ‎ஆவணப் படங்களைப்  ( documentary) படமாக்கும்போது, நிஜ வாழ்க்கையை மிக நெருக்கத்திலிருந்து பார்க்க முடிகிறது. இதன் மூலம் மக்கள் உண்மையில் எத்தகைய சவால்களைக் கடந்து போகிறார்கள் என்பது குறித்த ஒரு தெளிவான புரிதல் கிடைக்கிறது. இந்த உலகம் உண்மையில் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள இது ஒரு பெரிய வாய்ப்பு. தகவல்களை நாம் தேடிப் போக வேண்டும் என்று நான் நம்புகிறேன். அது புத்தகங்களாக இருக்கலாம் அல்லது நேரடி அனுபவங்களாக இருக்கலாம். நாமாகத் தேடிச் சென்றால் மட்டுமே அத்தகைய ஆழமான விஷயங்கள் நமக்குக் கிடைக்கும். அதை விடுத்து, வீட்டிலேயே உட்கார்ந்துகொண்டு திரைப்படங்களை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு முழுமையான தகவலாகவோ அல்லது அனுபவமாகவோ இருக்காது என்பது எனது கருத்து.

கே: ‎‎இயக்குநரின் கற்பனையை உங்கள் லென்ஸ் வழியாகக் கொண்டு வரும்போது, அவருக்கும் உங்களுக்கும் இடையே ஏற்படும் சிக்கல்களை (Conflicts) எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

ப: ‎ஒரு இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது என்பது மிகவும் இயல்பான ஒன்றுதான். நான் பல இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன்.  என்னைப் பொறுத்தவரை ‘நான் ஒரு டைரக்டர் சினிமாடோகிராஃபர்’ (Director’s Cinematographer). படத்தின் இறுதி முடிவு என்பது இயக்குநருடையதுதான். எனவே, ஒரு காட்சியை இயக்குநர் எப்படி விரும்புகிறாரோ அப்படியே படமாக்குவதே எனது முதல் வேலை.
படப்பிடிப்பின் போது போதிய நேரம் இருந்தால், இயக்குநர் விரும்பும் அதே ஷாட்டை எனது பார்வையில் மற்றொரு விதமாகவும் எடுத்துப் பார்ப்போம். இறுதியில் எடிட்டிங் மேசையில் எந்த ஷாட் கதைக்குச் சரியாகப் பொருந்துகிறது என்பதை இயக்குநர் முடிவு செய்வார். ஒளிப்பதிவு என்பது வெறும் அழகான காட்சிகளை உருவாக்குவது மட்டுமல்ல. அந்த காட்சி ஒரு கதையைச் சொல்ல வேண்டும். சினிமாவில் ‘ஷோ டோன்ட் டெல்’ (Show Don’t Tell) என்ற விதியுண்டு. நாம் பயன்படுத்தும் வண்ணங்கள், லைட்டிங் என ஒவ்வொன்றும் கதை சொல்ல உதவ வேண்டும். லைட்டிங் என்பது நடிகர்களை அழகாகக் காட்டுவதற்காக மட்டுமே அல்ல, அது அந்தத் தருணத்தின் உணர்வை (Story) வெளிப்படுத்துவதற்காக இருக்க வேண்டும். காஸ்டியூம் முதல் லொகேஷன் வரை அனைத்திலும் ஒரு கதை இருக்கும். இவை அனைத்தையும் படப்பிடிப்புக்கு முன்னரே இயக்குநருடன் விவாதித்து விடுவதால், களத்தில் தேவையற்ற சிக்கல்கள் எழுவதைத் தவிர்க்க முடிகிறது.
‎ஒளிப்பதிவாளராக இயக்குநரின் கனவை நனவாக்குவதும், அதே சமயம் தொழில்நுட்ப ரீதியாக அந்தக் கதைக்கு வலு சேர்ப்பதுமே எனது அணுகுமுறை.

கே: ‎’காதலும் கற்று மற’ (Kadhalum Katru Mara) மற்றும் ‘Just Because Kalyanam’ ஆகிய தொடர்களில் பணியாற்றிய ஒளிப்பதிவு அனுபவங்கள் குறித்துக் கூறுங்கள்?

ப: ‎இந்த இரண்டு (Radaan)தொடர்களுமே எனக்கு மிகவும் பிடித்தமான அனுபவங்கள். பொதுவாக நான் இதுவரை படங்கள் மற்றும் ஆவணப் படங்கள் (Documentaries) எனப் பணியாற்றிவிட்டு, ஒரு மாற்றத்திற்காக யூடியூப் (YouTube) தளத்தில் நம்மால் ஒரு நல்ல கதையைச் சொல்ல முடியுமா, நம்முடைய விஷுவல் லாங்குவேஜ் (Visual Language) அந்தத் தளத்திற்குப் பொருந்துமா என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்கான ஒரு பரிசோதனை முயற்சியாகவே இவற்றைத் தொடங்கினேன்.
‎அதில் ஒரு ஒளிப்பதிவாளராக நான் கற்றுக் கொண்ட முக்கியமான பாடம் என்னவென்றால், நாம் எந்தத் தளத்திற்காகப் பணியாற்றுகிறோம் என்பது முக்கியமல்ல. அந்தத் திட்டத்தில் பணியாற்றும் எழுத்தாளர், இயக்குநர், நடிகர்கள், கலைத் துறை மற்றும் இசை என அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் சிறந்த உழைப்பைக் கொடுக்கும்போது, எந்த மீடியத்திலும் ஒரு அழகான படைப்பை உருவாக்க முடியும். இந்தத் தொடர்களில் பணியாற்றியபோது ஒரு புதுமையான கதைசொல்லல் முறையைக் கையாள முடிந்தது. சினிமா அல்லது ஆவணப்படங்களில் கிடைக்காத ஒருவிதமான சுதந்திரம் இந்த டிஜிட்டல் தளங்களில் கிடைத்தது.

கே: ‎இது தவிர, ஷான் ரோல்டன் (Sean Roldan) அவர்களின் ‘அன்பெனும் பெருவெளி’ வள்ளலார் கவிதைகளை எடுத்து மாடர்னைஸ் பண்ணி ஒரு ராக் மியூசிக் ஆல்பத்திற்காக ரஃபிக் இஸ்மாயில்  (ரத்த சாட்சி இயக்குநர்) இயக்கத்தில் நான் பணியாற்றிய மியூசிக் வீடியோக்களும் யூடியூப்பில்தான் உள்ளன. இதுவரை நான் செய்த வேலைகளிலேயே எனக்கு மிகவும் திருப்தியான மற்றும் சிறந்த படைப்புகளில் ஒன்றாக அதைக் கருதுகிறேன். சுருக்கமாகச் சொன்னால், இந்தத் தொடர்கள் மற்றும் மியூசிக் வீடியோக்கள் மூலம் என்னுடைய விஷுவல் லாங்குவேஜை ஒரு புதிய தளத்தில் வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ளேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

கே: ‎டிஜிட்டல் கேமராக்கள் வந்த பிறகு ‘Soul of Cinema’ மாறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

ப: ‎நிச்சயமாக, சினிமா இப்போது டிஜிட்டல் மயமாகிவிட்டாலும், அதில் சில முக்கியமான விஷயங்களை நாம் இழந்துவிட்டோம் என்றே நான் கருதுகிறேன். ஃபிலிம் (Film) இருந்த காலத்தில் நமக்கு வாய்ப்புகள் (Options) மிகக் குறைவாக இருந்தன. அதனால் ஒளிப்பதிவாளர்கள் ஒவ்வொரு காட்சியிலும் அதிக உழைப்பையும், ஆக்கப்பூர்வமான ரிஸ்க்-களையும் எடுத்தனர். அப்போது ஒரு காட்சியைப் பார்த்தாலே இது எந்தப் படம் என்று சொல்லும் அளவிற்குத் தனித்துவம் இருந்தது. ஆனால் இன்று தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்தாலும், பல படங்கள் ஒரே மாதிரியான ‘லுக்’ (Look) கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. ஃபிலிமில் படமாக்கும்போது தவறுகள் செய்ய முடியாது. ‘சேஃப்டி டேக்’ (Safety take) என்ற வசதி அப்போது கிடையாது. அந்த ஒரு கட்டுப்பாடு படப்பிடிப்பு தளத்தில் ஒருவிதமான ஒழுக்கத்தைக் கொடுத்தது. இன்று டிஜிட்டல் வந்த பிறகு, ஷூட்டிங் ஆரம்பிக்கும்போது ‘ஸ்லேட்’ (Slate) போடுவதைக்கூடப் பலர் மறந்து விடுமளவிற்கு அந்த டிசிப்ளின் குறைந்து விட்டது.  ஒரு காலத்தில் பின்னணியையும் தெளிவாகக் காட்டும் ‘டீப் போக்கஸ்’ (Deep Focus) முறைக்காகப் போராடினோம். ஆனால் இன்று எதார்த்தம் (Realism) என்பது கதாபாத்திரத்தைச் சுற்றியுள்ள சூழலையும் காட்டுவதில் தான் இருக்கிறது என்பதை மறந்துவிட்டு, எல்லாவற்றையும் ‘சாஃப்டாக’ மாற்றும் ‘ஷாலோ போக்கஸ்’ (Shallow Focus) முறைக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. ஒளிப்பதிவாளர் கான்ராட் ஹால் (Conrad Hall) கூறியது போல, “அழகு என்பது நிழலில் (Shadows) இருக்கிறது”. ஃபிலிம் கேமராக்கள் கையாண்ட அந்த அடர் கருப்பு நிறங்களை (Blacks) டிஜிட்டல் கேமராக்களால் இன்னும் முழுமையாகக் கொண்டு வர முடியவில்லை என்பது ஒரு யதார்த்தமான உண்மை.
‎தொழில்நுட்பம் நமக்கு அதிக வாய்ப்புகளைத் தந்திருந்தாலும், ஃபிலிம் காலத்தில் இருந்த அந்த அர்ப்பணிப்பும், எக்ஸ்பெரிமென்ட் செய்யும் குணமும் குறையும்போதுதான் சினிமாவின் ஆன்மா (Soul) மாறுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

கே: ‎புதிதாக வரும் ஒளிப்பதிவாளர்களுக்கு நீங்கள் சொல்லும் ‘Golden Rule’ என்ன?

ப: ‎புதிதாக வரும் ஒளிப்பதிவாளர்களுக்கு நான் சொல்லும் முக்கியமான விஷயம் “புத்தகங்களை வாசியுங்கள்.  சினிமாவைத் தாண்டி உலகத்தைப் புரிந்து கொள்ளுங்கள்” என்பதுதான். சினிமா என்பது ஒரு தகவலைக் கடத்தும் ஊடகம் (Medium of information). உங்களிடம் சொல்லத் தகுந்த தகவல்கள் ஏதுமில்லை என்றால், நீங்கள் எவ்வளவு பெரிய தொழில்நுட்பக் கலைஞராக இருந்தாலும் அதில் ஒரு பயனும் இல்லை. உங்களுக்கென்று ஒரு தனித்துவமான பார்வை (Point of view) உருவாக வேண்டுமென்றால், உங்களிடம் போதுமான தகவல்கள் இருக்க வேண்டும். அந்தத் தேடல் இருந்தால் மட்டுமே உங்களால் ஒரு ‘சப்ஜெக்டிவ்’ பாயிண்ட் ஆஃப் வியூ (subjective point of view) எடுக்க முடியும்.  இல்லையெனில் மற்றவர்கள் எடுத்த படங்களையே நீங்களும் மீண்டும் எடுக்க நேரிடும்.  அந்தத் தனித்துவமான பார்வையைப் பெற புத்தகங்கள் வாசிப்பது மட்டுமல்லாமல், நிறையப் பயணங்கள் செய்யுங்கள். விதவிதமான மக்களைச் சந்தித்து உரையாடுங்கள். உங்களது அசல் தன்மை என்பது உங்களது நேரடி அனுபவங்களில் இருந்துதான் பிறக்கும். எனவே, வெறும் படங்களைப் பார்த்து மட்டும் சினிமாவைக் கற்காமல், அனுபவங்களைத் தேடி ஓடுங்கள். ஒளிப்பதிவு என்பது கேமராவுக்குப் பின்னால் நின்று பார்ப்பது மட்டுமல்ல, உலகத்தை எப்படிப் பார்க்கிறோம் என்பதும் தான்.
*சந்திப்பு: ஷீபா*

Comments (0)
Add Comment