நூல் ஆசிரியர்: லி நெளஷாத் கான்
வெளியீடு: மௌவல் பதிப்பகம்
முதல்பதிப்பு: ஜூன் 2025
வகைமை: சிறுகதைகள்
பக்கங்கள்: 120 பக்கங்கள்
விலை:₹.150 ரூபாய்
தொடர்ந்து இலக்கியப்பணி செய்து வரும் ஆசிரியர் பல்வேறு இதழ்களில் கதை,கவிதை,கட்டுரை என்று தொடர்ந்து தனது படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். கவிதைகள், சிறுகதை தொகுப்புகள், நாவல் என இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். கும்பகோணத்தில் வசிக்கும், பணி நிமித்தமாய் அபுதாபியில் இருக்கும் ஆசிரியரின் சமீபத்திய சிறுகதை தொகுப்பு “அம்மாவின் துப்பட்டி ” என்ற சிறுகதை தொகுப்பு. இருபது சிறுகதைகள் ஒவ்வொன்றும் நம் வாழ்வில் சந்தித்த யாரோ ஒருவரை நினைவுப்படுத்தும்.
ஆசிரியர் முகநூல் வழியே கிடைத்த சொந்தம் எனலாம், முதல் முறை நேரில் சந்தித்ததும் எத்தனையோ ஆண்டுகள் ஒன்றாய் பழகிய உணர்வு மேலிட்டது. அவரின் அன்புக்கும், நட்புக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள்.
கும்பகோணத்தில் இருந்து பயணப்பட்டு புத்தகம் எனக்காக வந்தவாசிக்கு பயணப்பட்டு வியாழக்கிழமை இரவு கைகளுக்கு கிடைத்தது. கிடைத்த இரவே புத்தகத்தை இரண்டு கதைகள் வாசித்து பிறகு வாசிக்கலாம் என்று தான் நினைத்து வாசிக்க ஆரம்பித்தேன். என்னால் புத்தகத்தை கீழே வைக்கமுடியவில்லை.
கதைகள் எனக்கு ரொம்பவும் பக்கமாக இருந்தது., சிலவற்றில் என்னுடைய உணர்வுகளை நானே வாசித்தேன். அவ்வளவு நெருக்கமாகி விட்டது., சில கதைகளைப் படித்து முடிக்கும் போது கண்களில் கண்ணீர் துளிகளை தவிர்க்க முடியவில்லை.
நெஞ்சம் கனத்தது.
மக்கள் உரிமை இதழில் தொடர்ந்து நூல் விமர்சனங்கள் எழுதும் சமூக நீதி படைப்பாளர்கள் சங்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இ. தாஹிர் பாட்சா அவர்கள் ஆசிரியரின் நூலுக்கு வாழ்த்துரை வழங்கியிருக்கிறார்.
அன்பின் போர்வை என்று பதிப்பகம் ஆசிரியரின் அறிமுகத்தோடு நூலின் கதைக்களம் பற்றியும் அறிமுகம் கொடுக்கிறது.
என்னுரையில் ஆசிரியரின் வார்த்தைகள் தான் இன்றைய இளம் எழுத்தாளர்களின் நிலை. இத்தனை நெருக்கடியிலும், வேலைச்சுமை, குடும்பச் சுமை எல்லாவற்றையும் தாண்டி ஒரு படைப்பாளியாக தன்னுடைய வாசகர்களுக்கு இலக்கியம் வழி தொடர்ந்து தொண்டு செய்யும் ஆசிரியருக்கு அன்பின் நன்றிகள்.
“சில தீவிரவாதிகளின் கதை” இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரும் யாரோ ஒருவரால் அனுபவித்த வலியை கூறும் கதை.
“பெருநாள், பக்கிர்ஷா” கதைகள் நாம் சந்தித்த, சந்தித்து கொண்டிருக்கும் அப்படியான மனிதர்களை கண் முன் நிறுத்தும்.
“ஏனங்குடி மச்சானும், வெள்ளை குர்மா ஆனமும்” சிறுகதையை வாசிக்கும் போது கண்ணீர் சிந்தாமல் அடுத்த கதைக்கு நகர முடியாது.
“நூர் பாவாவும், பைரோசும், சர்வர் அலியக்கா” சிறுகதைகள் கால ஓட்டத்தில் மனிதர்கள் மாறுவதும், நாம் போட்டு வைத்திருக்கும் பிம்பம் அவர்களாலே மாறும் நொடியும் அழுத்தமாக பேசுகிறது.
” அம்மாவின் துப்பட்டி” தலைப்பு கதையை வெறும் கதையாக கடந்து போகமுடியவில்லை. அம்மாவை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த கதை சமர்ப்பணம். தாயின் அன்பையும், பிள்ளையின் தவிப்பையும் கண் முன் கண்ணீர் துளிகளால் நிறுத்தியது.
“அயல்நாட்டு அன்னப்பறவைகள்” கதையில் இரண்டு கிளை கதை வெளிநாட்டில் மனைவியை பிரிந்து வேலைக்கு செல்லும் கணவன் மனைவி பற்றியது. ஒன்று நெகிழ்ச்சியையும், ஒன்று அதிர்ச்சியையும் கொடுத்தது.
ஆனால் இரண்டுமே இன்றும் எங்கோ நடந்து கொண்டிருக்கிறது என்பது உண்மை.
“எல்லாம் அவன் செயல்” சிறுகதை அத்தனை நெகிழ்ச்சியை மனதிற்கு தந்தது. மாலிக், மணி இருவரும் சில மணி நேரங்கள் மனதை விட்டு நீங்கவில்லை. சமூகத்தில் எந்த மாற்றத்தையும் ஒரு படைப்பு நினைத்தால் முடியும் என்பதற்கு சாட்சியான கதை.
“எழில் காக்கும் கவசம், மீன் துவா” சிறுகதைகள் சில விஷயங்கள் செய்வதற்கு பிடிக்காமல் இருந்தாலும் அதை நம்பிக்கையோடு செய்வதில் கிடைக்கும் நிம்மதியைப்பற்றிய கதைகள்.
“நளாஸ் கடை ஆப்பமும், தேங்காய் பாலும் “சிறுகதை வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியானது இல்லை என்பதையும், ஒரு நடுத்தர இளைஞனின் வலியும், சமூகத்தில் அவன் படும் அல்லல்களையும் பற்றிய கதை.
“மனசு பேசும் மனிதம், அம்மாவின் மீன் குழம்பு, நீரும்,சோறும்,நோன்புக் கஞ்சி” சிறுகதைகள் சமூகத்திற்கு நிச்சயம் தேவை. சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், நாமும் அப்படியாக வாழ முயற்சிப்போம்.
“ஆரஞ்சு மிட்டாய்” கதையில் வரும் நிஷாவும், பைசலும் இப்போதும் இருக்கிறார்களா தெரியாது. ஆனால் அப்படி இருந்தவர்கள் சிலரை இப்போதும் தெரியும். குடும்பத்திற்காக தன்னுடைய காதலை தியாகம் செய்ய துணியும் காதலும் வெற்றியான காதல் தான்.
“தலப்பாக்கட்டு தயிர் சாதம் ஆனது”,
நூரியக்கா தர்கா சிறுகதை சிலர் அவரது பார்வையில் தவறாக புரிந்து கொள்வது உண்மையில் சரியாக இருக்கலாம். சிலர் சரியென்று நினைத்தது தவறாய் போகலாம் என்று உணர்த்தியது. அவரவர் விருப்பப்படி அடுத்தவரை காயப்படுத்தாமல் வாழ்வது தவறில்லை.
“தாதி சொன்ன கதைகள்” கதை படிக்கும் போது இறந்துபோன பாட்டி என் நினைவலைகளில் வந்தார். வாசிக்கும் உங்களுக்கும் உங்கள் பாட்டி நினைவு வந்தால் ஆசிரியர் வென்று விட்டார்.
ஆசிரியருக்கு அவருடைய பாட்டியை அவ்வளவு பிடிக்கும் என்று கதையின் இறுதியில் புரிந்து கொண்டேன்.
இப்படியாக ஆசிரியருக்கும், எனக்கும் அவ்வளவு மன,உணர்வு ரீதியாக நெருக்கமாக இருந்தது இந்த சிறுகதை தொகுப்பு. நிச்சயம் அனைவரும் வாசிக்க வேண்டிய தொகுப்பு.
ஆசிரியர் இன்னும் பல படைப்புகள் வழியே வாழ்வில் உயரவும், புதிய பல படைப்புகளை வழங்கவும் வாழ்த்துகளும், பேரன்புகளும்.
மீ. யூசுப் ஜாகி