*மலேஷிய நாதஸ்வர கலைஞர் செல்வி. அஞ்சலி கதிரவனின் சிறப்பு நேர்காணல்…*

*1. உங்கள் சொந்த ஊர் என்ன? பெற்றோர், மூதாதையர் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்?*
நான் மலேசியாவில் பிறந்து வளர்ந்தவள். என்னுடைய குடும்பப் பின்னணியைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், இசைக்கும் கலைக்கும் எங்களுடைய குடும்பத்தில் நீண்ட தொடர்பு உண்டு. குறிப்பாக, என்னுடைய தாத்தா கந்தன், எங்கள் குடும்பத்தின் கலைப் பயணத்திற்குத் தொடக்கப்புள்ளி என்று சொல்லலாம். அவர் ஒரு சிறந்த பாடகர். அவரிடமிருந்துதான் இசையின் மீதான ஈர்ப்பு எங்கள் குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தப்பட்டது. என் அப்பா, சித்தப்பா மற்றும் அண்ணன் என குடும்பத்தில் உள்ள பலரும் பாடகர்களாகவே இருந்துள்ளதால், இயல்பாகவே இசை எனக்குள் ஒரு அங்கமாகிவிட்டது. பாடுவதற்கான தாளமும், ராகமும் எனக்கு இயற்கையாகவே கைவந்தது. இந்தக் கலைப் பயணம் எனக்கு ஏழாவது வயதிலேயே ஒரு சிறந்த மேடையை அமைத்துத் தந்தது. என்னுடைய பள்ளி ஆசிரியர் தின விழாவில், ‘மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே’ என்ற பாடலை முதன்முதலாக மேடையில் பாடினேன். அந்த நிகழ்வுதான் என்னைக் கலைத்துறைக்குள் ஒரு பாடகியாக அறிமுகப்படுத்தியது.
*2. பாரம்பரியமான நாதஸ்வர கலையில், உங்கள் பங்களிப்பு எப்படி நிகழ்ந்தது?*
என்னுடைய கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகு, கிரியேட்டிவ் மல்டிமீடியா (Creative Multimedia) துறையில் பட்டம் பெற்றேன். அந்தப் படிப்பின் வழியாகப் புதிய விஷயங்களைக் கற்கும் ஆர்வம் எனக்குள் எப்போதும் இருந்தது. அந்த ஆர்வம்தான் என்னைத் தனித்துவமான கலைப் பாதையில் பயணிக்க வைத்தது. இசையின் மீது எனக்கு இருந்த தீவிர ஈர்ப்பின் காரணமாக, இசையை மேலோட்டமாக மட்டும் பார்க்காமல், அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளவும், புதிய பரிமாணங்களை ஆராயவும் விரும்பினேன். அந்தத் தேடல்தான் என்னைப் பாரம்பரியமான ‘நாதஸ்வரக் கலை’யைத் தேர்ந்தெடுக்க வைத்தது.
*3. இந்தக் கலையில் உங்கள் குருநாதர் யார்?*
நான் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது, என்னுடைய முதல் குருநாதராகத் திகழ்ந்தவர் திரு.துரை பாரதிதாசன் ஐயா அவர்கள். அதன் பிறகு ஒவ்வொரு காலகட்டத்திலும் எனக்குத் தேவையான புதிய விஷயங்களை, திரு. வெங்கடேசன் ஐயா, திரு. சம்பத்குமார் என பல குருநாதர்களின் வழிகாட்டுதல்கள் எனக்கு கிடைத்தன. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இருந்த மற்ற துறை ஆசிரியர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் நான் கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம்.
*4. மலேசியாவில் இருந்து தமிழகத்தில் உள்ள சிதம்பரம் பல்கலை கழக கல்லூரிக்கு அனுப்ப எப்படி குடும்பத்தினர் உங்களை அனுமதித்தார்கள்?*
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் என்பது, பல கலை மேதைகளை உருவாக்கிய ஒரு புனிதமான கலைக்கூடம். அந்தப் பல்கலைக் கழகத்தில் நாதஸ்வரக் கலையை முறைப்படி பயில வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. முதலில் இந்தத் துறையில் சேருவேன் என்று வீட்டில் சொன்னபோது, அப்பா தயங்கினார். பெண் பிள்ளை, தனியாகப் போய் என்ன செய்வாள் என்று அம்மா பயந்தார். மலேசியாவிலிருந்து ஒரு பெண்ணை இவ்வளவு தூரம் தமிழ்நாட்டிற்கு அனுப்பிப் படிக்க வைப்பதில் எங்கள் உறவினர்கள் பலரும் வெவ்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். திருமணம் செய்து அனுப்ப வேண்டியதுதானே, எதற்குப் படிக்க. வைக்க வேண்டும் என்று பல விமர்சனங்கள் வந்தன. இருப்பினும், இசையின் மீது நான் கொண்டிருந்த தீராத ஆர்வத்தையும், அர்ப்பணிப்பையும் என் பெற்றோர் உணர்ந்தனர். அவர்களின் அந்த ஆதரவுதான், விமர்சனங்களையும் தடைகளையும் கடந்து, நான் தமிழ்நாட்டிற்கு வந்து எனது கலைப் பயணத்தைத் தொடங்கக் காரணமாக அமைந்தது.

*5. இசையில், நீங்கள் நாதஸ்வரத்தை தேர்ந்தெடுக்க என்ன காரணம்?*
நம்முடைய பிறப்பு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எப்போதும் உண்டு. அப்படி இருக்கும்பொழுது, நாம் செய்கிற செயலானது, அந்த செயலின் மூலமா மற்றவர்களுக்கு என்ன நன்மை அளிக்கிறது, அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு என்ன விஷயத்தை நம்மால் கற்றுக்கொடுக்க முடியும் என்கிற சிந்தனை எனக்குள் இருப்பதால் இசை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரு சூழல் வரும்பொழுது, ஒரு பெண்ணாக இருக்கும் நான், இனிவரும் தலைமுறை பெண்களுக்கும் எடுத்துக்காட்டும் வகையில் ஒரு சிறப்பான ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் எனக்குள் இருந்தது. பொதுவாக இசைக்கருவிகள் என்று பார்த்தால் நாதஸ்வரத்துறை தமிழர் பாரம்பரிய இசைக்கருவிகள் வாசிக்கிற கலைஞர்கள் ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் துறையாக இது இருந்தது. தமிழக அளவில் அளவில் மதுரை பொண்ணுத்தாயம்மாள் போன்ற ஒரு சில பெண் முன்னோடிகள் இருந்தாலும், மலேசியா சூழலில் நாதஸ்வரத்தை வாசிக்கிற பெண்கள், இல்லை என்றும்கூட சொல்லலாம். இந்த சூழலில் நாம் இந்த துறையை தேர்ந்தெடுக்கும் பொழுது,இனிவரும் தலைமுறை பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த துறையை சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் தேர்ந்தெடுத்துப் படித்தேன்.
*6. இதுவரை நிகழ்ந்த உங்கள் கச்சேரிகளில், உங்களால் மறக்க முடியாத கச்சேரி எது?*
என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாதஸ்வர கச்சேரி என்றால், அது மலேசியாவில் என்னுடைய “அகரம் இசைப் பயிற்சி கல்லூரி” மூலமாக நான் நடத்தின “மங்கள பேரிசை” எனும் நிகழ்ச்சிதான். அதாவது மலேசியாவில் இருக்கும் அனைத்து தமிழ் நாதஸ்வர கலைஞர்களையும் ஒன்றிணைத்து, அவர்களை வாழ்த்தி, அவர்களின் உழைப்பைப் பாராட்டும் வகையில் நடத்தின ஒரு விருது விழா. அந்த நிகழ்ச்சி மலேசியாவில் மட்டுமல்லாமல் உலகத்தில் இருக்கும் அனைத்து தமிழ் நாதஸ்வர கலைஞர்களுக்கும் சமர்ப்பிக்கும் வகையில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்சியில கலைஞர்களோடு ஒன்றிணைந்து நான் வாசித்த அந்த தருணம்தான் எனக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி.

*7. உங்கள் வாழ்க்கைத் துணைவரும் இசைக் கலைஞராக இருக்க வேண்டும் என்ற விருப்பம் உண்டா?*
வாழ்க்கை துணைவரைப் பற்றி, எனக்கு அந்த அளவுக்குக்கு எந்த ஒரு சிந்தனையும் இல்லை. ஆனால் எனக்கு விருப்பமான உறவுகள், என்னுடன் நெருங்கி இருக்கிற உறவுகள் அனைவரும் என்னுடைய இசையை நேசிக்க வேண்டும்; எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்…
*8. திரை இசையில், யாருடைய இசையில் நாதஸ்வரம் வாசிக்க விரும்புகிறீர்கள்?*
பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் நாதஸ்வரம் வாசிக்க வேண்டும் என்றால், அதற்காக நான் நிறைய உழைக்க வேண்டும். ஏ.ஆர். ரஹ்மான் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய இசையில் நாதஸ்வரம் வாசிக்க வேண்டும் என்பது என் மிகப்பெரிய ஆசையாக இருக்கிறது. ஏற்கனவே அவருடைய பாடல்களை நான் நிறைய கச்சேரிகளில் வாசித்து வருகிறேன். அந்த உழைப்பும், முயற்சியும் என்னை ஒரு நாள், நிச்சயம் அவர் இசையில் வாசிக்கும் நிலைக்குக் கொண்டு செல்லும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

*9. உங்கள் வழக்கமான இசைப் பயிற்சி நேரம் எப்போது?*
என்னுடைய பயிற்சியின் நேரம், நாளுக்கு நாள் மாறுபடும். காரணம், என்னுடைய அகரம் இசைப் பயிற்சி கல்லூரி மாணவர்கள் குரலிசை படிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் பகுதி நேரமாக நான் கிராஃபிக் டிசைனராவும் (graphic designer) இருக்கிறேன். இது தொடர்பான வேலைகள் இருப்பதால் என்னுடைய பயிற்சி நேரம் என்பது, ஒரு நாள் ஒரு மணி நேரம், ஒரு நாள் இரண்டு மணி நேரம், இல்லையென்றால் அரை மணி நேரம் என்று நாளுக்கு நாள் மாறுபடும். ஆனாலும்கூட, அந்த ஒவ்வொரு நாளும் பயிற்சி எடுக்கிற அந்த குறிப்பிட்ட நேரத்தை, முழுக்க முழுக்க அதிலேயே கவனம் செலுத்தும் வகையில நான் என்னுடைய பயிற்சியை மாற்றி அமைத்துக் கொள்வேன்.
*10. ஒரு பெண் இசைக் கலைஞராக இருப்பதில் உள்ள சங்கடங்கள் என்ன?*
பெண்கள் என்றாலே சவால்கள்தான். காரணம், சமீபத்தில் ஒரு கருத்து எனக்கு வந்தது. அதாவது, நான் ஒரு பெண்ணாக இருப்பதால்தான் வாய்ப்புகளும், கச்சேரிகளும் கிடைக்கிறது எனவும், உங்களை கொண்டாடுறார்கள் எனவும் ஒரு சிலர் எனக்கு சொன்ன கருத்துக்களை நான் பார்த்தேன்.
ஆனால், இந்த உலகமானது, கலை என்று வரும் பொழுது, நாம் அந்த கலையை எப்படி (Present) வெளிப்படுத்துகிறோம் என்கிற தெளிவு இருந்தால் மட்டும்தான் மக்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள். ஒரு ஈர்ப்பு இல்லாமல் ஒரு விஷயத்தை நாம் கொடுத்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அப்படி இருக்கும் போது, இதுவரைக்கும் நான் சந்தித்த சவால்கள், வெற்றிகள், வாய்ப்புகள் இது எல்லாமே சும்மா யாரும் கொடுக்கவில்லை. அது என்னுடைய உழைப்பின் மூலமாகத்தான் கிடைத்திருக்கிறது. அதை சிலர் சிந்திக்காமல் இப்படி ஒரு குறையாகக் கூறும் பொழுது, அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்த நாதஸ்வரத்துறை இதுநாள்வரை ஆண்கள் அதிகமாக வாசித்து வந்த நிலையில்,இந்தத் துறையை நான் தேர்ந்தெடுக்கும்போது இருந்த சவால்கள், இதுநாள்வரை தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன. இதையெல்லாம் உடைத்தெறிந்து பெண்களாகிய நாம் முன்னுக்குத்தான் வரவேண்டும். காரணம், ஒவ்வொரு குறைகளையுமே வெற்றிகளுக்கான படிகளாகத்தான், நான் நினைக்கிறேன். அதுமட்டுமில்லாமல் என்னுடைய செயல்பாடுகள் அனைத்தும் எனக்கு எதிராக கருத்துக்களை பதிவிடுகிறவங்களுக்கு பதில்களைச் சொல்லும் என்று இங்கு சொல்ல விரும்புகிறேன்.

*11.நாதஸ்வரம் தவிர வேறு எந்த இசைக் கருவிகளில் உங்களுக்கு ஆர்வம் உண்டு?*
நாதஸ்வரத்தைத் தவிர்த்து வேறு இசைக் கருவிகளைக் கற்றுக் கொள்வதிலும் எனக்கு இதுவரைக்கும் ஆர்வம் இருந்தது இல்லை. காரணம், நாதஸ்வரத் துறையை நான் மிகவும் விரும்பியே தேர்ந்தெடுத்துக் கற்றுக் கொண்டேன். அந்தத் துறையினுடைய ஆழத்தை நான் பார்க்க வேண்டும் என்பதுதான் என் நோக்கமாக இருந்தது.
அப்படி இருக்கும் பொழுது, இசை என்பது மிகப்பெரிய ஒரு கடல். நான் ஐந்தரை ஆண்டுகள் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் என்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்திருந்தாலும் கூட, “அனுபவக் கல்வி” என்கிற கல்வியானது ஒரு கலைஞனைச் சிறப்பான முறையில் உயர்த்தும் என்பது என்னுடைய நம்பிக்கை. அது உலகத்தில் எல்லாருக்கும் தெரிந்த ஒன்றே. அந்த அனுபவக் கல்வியை இந்த நாதஸ்வரத்தின் வழியாக நான் இன்னும் அதிகமாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். ஒவ்வொரு மேடைகளிலும் நான் வாசிக்கும் போது, அந்த ஒவ்வொரு மேடையும் எனக்கு ஒரு பயிற்சி, ஒரு அனுபவம். என்னுடைய 20-ஆவது வயதில்தான் இந்த நாதஸ்வரத்தை நான் படிக்கப் போனேன். நிறைய இன்னல்களைத் தாண்டி நான் இந்தத் துறையைக் கற்றுக்கொண்டாலுமேகூட, படித்த அந்த ஆண்டுகள் மிகக் குறுகிய நிலையில் இருக்கும் பொழுது, அதனுடைய ஆழத்தை நான் இன்னும் பார்க்க வேண்டும் என்று வரும் போது, இந்தக் கச்சேரிகள் மூலமாக அனுபவக் கல்விகளைத் தேடும் போதுதான் கிடைக்கும். நான் தேர்ந்தெடுத்த இந்தத் துறையை சிறப்பாக செய்ய, என்ன செய்ய முடியும் என்ற வழிகளைப் பார்க்க வேண்டும். அதனால் நாதஸ்வரத்தைத் தாண்டி வேற எந்த இசைக் கருவியையும் தேர்ந்தெடுத்துப் பழக எனக்கு விருப்பம் இல்லை.
*12.ஒரு இசைக் கலைஞராக, உங்கள் எதிர்காலக் கனவு என்ன?*
ஒரு இசைக் கலைஞராக என்னுடைய கனவு, நாதஸ்வர துறையில் நிறைய ஆழத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். சூழலுக்கு ஏற்றாற்போல அதை வெளிப்படுத்த வேண்டும். அதாவது, இப்போது இருக்கிற காலகட்டத்தில் நிறைய பாடல்கள், புதுப் பாடல்கள், பழைய பாடல்கள் இப்படி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதை மக்களுக்கு எந்த வகையில கொண்டுபோய் சேர்த்தால், அவர்கள் விரும்பும் வகையில் அந்த இசை அமையும் என்பதைப் பார்த்து, இதுநாள் வரை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறேன். இதே போல் புதுப்புது விஷயங்களையும் முயற்சி பண்ண வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் குறிப்பாக, நான் கற்றுக்கொண்ட இந்தத் துறையில் பாடலாக இருக்கட்டும் நாதஸ்வரமாக இருக்கட்டும் அதை இன்னும் ஆழமாக கற்றுக்கொண்டு அதன் அனுபவத்தைத் தேட வேண்டும். வளர்ந்து வரும் தலைமுறையினர்களுக்கு இதைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுதான் எனக்கு மிகப்பெரிய கனவாக இருக்கிறது.
