*மணிரத்னம்-சுஹாசினி தம்பதியின் ஒரே மகன் நந்தனை அறிந்துள்ளீர்களா?*

 

 

 

- Advertisement -

80-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சுஹாசினி. மூத்த நடிகர் சாருஹாசனின் மகளான இவர் தயாரிப்பாளரும், இயக்குநரும் கூட. அதோடு உதிரிப்பூக்கள், காளி, ஜானி, நண்டு, மெட்டி, ராஜ பார்வை, மீண்டும் கோகிலா ஆகியப் படங்களில் துணை ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி யிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள இவர், 1988-ம் ஆண்டு இயக்குநர் மணிரத்னத்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நந்தன் என்ற மகன் இருக்கிறார். ஆனால் பலர் அவரை பார்த்ததில்லை. தந்தை தாயை போல் அல்லாமல் சினிமாவில் இருந்து விலகியே இருக்கும் நந்தன், அண்மையில் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது தந்தை மற்றும் தாய் மணிரத்னம் – சுஹாசினியுடன் இணைந்து வந்து வாக்கு செலுத்தினார்.

அப்போதுதான் நந்தன் ஊடக வெளிச்சத்திற்கு வந்தார். இதற்கு முன் சினிமா பக்கமோ ஊடகங்களில் பக்கமோ நந்தன் தென்பட்டதில்லை. லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம் மற்றும் அரசியல் சார்ந்த உயர்கல்வியைப் பயின்ற நந்தன், ஆரம்பம் முதலே அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டவர் என்பதை சுஹாசினியே ஒரு முறை வெளிப்படுத்தியுள்ளார்.

நந்தன் தனது 15வது வயதிலேயே லெனினிஸம் சார்ந்த ‘Contours of Leninism’ என்ற சிறு புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதோடு நந்தனின் அரசியல் ஆர்வம் நிற்கவில்லை. இதற்கடுத்து நந்தன் மேற்கொண்ட அரசியல் நகர்வை அண்மையில் கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பேசிய சுஹாசினி வெளிப்படுத்தினார். அந்த நிகழ்வில், “மற்ற குழந்தைகள் போல் அல்லாமல், நந்தன் பள்ளி முடிந்து வந்ததும், பாராளுமன்றத்தில் நடக்கும் உரைகளை கேட்பான். 12 வயதில் கார்ல் மார்க்ஸ் எழுதிய ‘மூலதனம்’ புத்தகத்தை வாசிப்பான்.

அப்படியொரு நாள் புத்தகங்களை எடுத்துக்கொண்டு நேராக அவன் சிபிஎம் அலுவலகத்திற்கு சென்றுவிட்டான். அங்கே, தான் காரில் வருவதை மற்றவர்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக காரை வேறு இடத்தில் நிறுத்திவிட்டு பின்னர்தான் கட்சி அலுவலகத்திற்குள் சென்றான். கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நந்தனை பார்த்தவர்கள் அவன் யார், எங்கிருந்து வருகிறான் என்பதை எல்லாம் கேட்கவில்லை. முதலில் அவனிடம் அவர்கள் கேட்டது ‘சாப்பிட்டாயா’ என்று தான். இது தான் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிறப்பு.
சாப்பிட்டபின்பே சிபிஎம் கட்சிச் செயலாளரை சந்தித்து நந்தன் பேசியிருக்கிறான். தந்தையின் பெயரைக் கேட்டபோது மணிரத்னம் பெயரைக் கூறினால் தான் யார் என்பது தெரிந்துவிடும் என்பதற்காக மணிரத்னமின் உண்மையான பெயரான ‘கோபால ரத்னம் சுப்ரமணியன்’ என்ற பெயரைக் கூறியிருக்கிறான். ஆனால், எனது பெயரான சுஹாசினியை கூறிய போதுதான், அவன் எங்கள் மகன் என்பதை அங்கிருந்தவர்கள் அடையாளம் கண்டுகொண்டனர். இந்த சம்பவங்களுக்கு பிறகு நந்தன் சி.பி.எம் கட்சியின் உறுப்பினராக மாறினான்” என்று தன் மகனைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசினார்
கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து அரசியலில் இயங்கி வந்தாலும், பெரும்பாலும் ஊடக வெளிச்சத்தில் இருந்து விலகியே இருக்கிறார், நந்தன். தனது தந்தை, தாயைப் போலத் சினிமா துறையில் நுழையாமல், கல்வி மற்றும் அரசியல் ஆய்வுத் துறைகளில் தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார்.
*நன்றி: நியூஸ் 18*