‘மைலாஞ்சி’ -திரைப்பட விமர்சனம்

Casting : Sriram Karthick, Krisha Kurup, Munishkanth, Singampuli
Directed By : Ajayan Bala
Music By : Ilayaraja
Produced By : Ajay Arjun Productions – Dr.Arjunan
’மைலாஞ்சி’ என்ற பெயரில் பறவைகள் பூங்கா ஒன்றை நடத்தி வரும் நாயகி கிரிஷா குரூப், தனக்கு பிடிக்காத மாமாவுடன் நசக்கவிருக்கும் கட்டாய திருமணத்தில் இருந்து தப்பிப்பிக்க, தன் வீட்டில் குடியிருக்கும் ஒரு என்ஜினியரை காதலிக்கிறார். அவரிடம் காதலை சொல்ல நினைக்கும் போது, அவர் சென்னைக்கு மாற்றலாகிச் சென்று விடுகிறார்.
வனவிலங்கு புகைப்படக் கலைஞரான நாயகன் ஸ்ரீராம் கார்த்தி, பறவை ஒன்றை புகைப்படம் எடுப்பதற்காக அங்கு வருகிறார். அவருக்கும் கிரிஷா குரூப்புக்கும் நட்பு கிடைக்கிறது. நட்பு காதலாக மாறுகிறது. தன் காதலை கிரிஷா குரூப்பிடம் சொல்ல நினைக்கும்போது, கிரிஷா குரூப், தன் மனதில் உள்ள காதலை சொல்லி, தன்னை சென்னையில் இருக்கும் காதலனுடன் சேர்த்து வைக்குமாறு ஸ்ரீராம் கார்த்திக்கிடம் கேட்கிறார். தொலைபேசி எண், முகவரி என்று எதுவும் தெரியாத ஒருவரை தேடிப் பிடித்து சேர்த்து வைப்பதாக சொன்னாலும், அவர் மனதில் உள்ள காதலை வளர்க்கும் ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குரூப்பின் காதலை சேர்த்து வைக்கும் முயற்சியில் போலியாக ஈடுபடுகிறார்.
ஒரு கட்டத்தில் கிரிஷா குரூப்பின் மனதில் இருக்கும் காதலை அழிக்க முடியாது, என்ற முடிவுக்கு வரும் ஸ்ரீராம் கார்த்திக், அவரது காதலனை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி, அவரை கண்டுபிடிப்பதோடு, அவரிடம் கிரிஷா குரூப்பின் காதலை தெரியப்படுத்தி, அவரை மீண்டும் ஊட்டிக்கு வர வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். மறுபக்கம் நிஜமான காதல் ஸ்ரீராம் கார்த்திக்குடந்தான் என்பதை கிரிஷா குரூப் உணர்கிறார். அவர் தன் மனதில் ஏற்பட்ட நிஜக்காதலை ஸ்ரீராம் கார்த்திக்கிடம் சொல்லிவிட வேண்டும் என்று முயற்சிக்க, அதைப் புரியாத ஸ்ரீராம் கார்த்திக், காதல் வலியோடு அங்கிருந்து சென்று விடுகிறார். இதற்கிடையே, அவர் தேடிய கிரிஷா குரூப்பின் காதலன் மீண்டும் ஊட்டிக்கு வருவதோடு, கிரிஷா குரூப்பின் குடும்பத்தாரிடம் அனைத்தையும் சொல்லி, திருமண ஏற்பாட்டுகளைச் செய்கிறார்.
ஒருவரை ஒருவர் காதலித்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அதே சமயம் ஒருவரை ஒருவர் மறக்க முடியாமல் தவிப்புகளோடு பயணிக்கும் ஸ்ரீராம் கார்த்திக் மற்றும் கிரிஷா குரூப்பின் காதல் என்னவானது ?, இவர்களது காதல் விவகாரம் தெரியாமல், இவர்களது அழைப்பின் பேரில் வந்து திருமணத்திற்கு தயாராகும் சென்னை வாசியின் காதல் என்னவானது ? எந்த காதல் வென்றது என்பதுதான் ‘மயிலாஞ்சி’.
நாயகியாக நடித்திருக்கும் கிரிஷா குரூப், குமரி பருவத்தில் குழந்தைத்தனமான செயல்பாடுகளோடு நடித்திருப்பதும், அவர் அணிந்திருக்கும் உடையில் இருக்கும் நேர்த்தி, அவரது கதாபாத்திர வடிவமைப்பில் இல்லாததும், அவரது கதாபாத்திரத்தை கதையோடு ஒட்ட விடாமல் செய்கிறது. அவரை சுற்றி கதை நகர்ந்தாலும், அவர் பார்வையாளர்களை எந்தவிதத்திலும் கவரவில்லை.
நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீராம் கார்த்திக், தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து, தனது பாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.
கிரிஷா குரூப்பின் ஒருதலைக் காதலனாக நடித்திருக்கும் நடிகருக்கு வேலை குறைவு.
முனிஷ்காந்த் மற்றும் சிங்கம்புலி வரும் காட்சிகளில் லேசாக சிரிக்க முடிகிறது. நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் செந்தி, நாயகியின் சித்தியாக நடித்திருக்கும் நடிகை, மாமனாக நடித்திருக்கும் கலையரசன் கன்னுசாமி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் செழியனின் பணி படத்திற்கு பலம்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
செழியன், இளையராஜா, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் மூவரின் உழைப்பும் படத்தின் வெற்றிக்கு கை கொடுக்கவில்லை என்பது இயக்குனருக்கு தோல்விதான்.
