சினிமா பாணியில் அசத்தலான செட்!

ஆன்மீகம், பக்தி என்ற இதயத்தை ஈர்க்கும் நுட்பமான விவகாரத்தில் பணத்தை அள்ளி இறைத்து மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
மாநாட்டு தீர்மானங்களை கேட்கும் போது, இது முருகனுக்கான மாநாடு இல்லை. மூர்க்கத்தனமான அரசியலுக்கான முன்னெடுப்பாக நடத்தப்பட்டுள்ள மாநாடு என்பது தெட்டத் தெளிவாக விளங்குகிறது. முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அனைத்தும் அரசியலையே பேசுகின்றன.
திருப்பரங்குன்றத்தை வைத்து மதத் தீயை பற்ற வைக்கும் நோக்கத்தில் தீர்மானங்கள் உள்ளன.
அறநிலையத் துறையை அரசாங்கத்தின் கையில் இருந்து பிடுங்கி அளப்பரிய கொள்ளைகளை அரங்கேற்றத் துடிக்கிறது ஒரு தீர்மானம்!
முருகனின் அறுபடை வீடுகளிலும் மத அரசியல் சர்சைகளை செய்யத் திட்டமிடும் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது ஒரு தீர்மானம்!
வருகின்ற தேர்தலில் பாஜகவை வெற்றி பெற வைப்பது பற்றி ஒரு தீர்மானம் முழங்குகிறது.
மனித நேயத்தை மறக்கடித்து, மதவெறியை மனதினில் திணிக்கும் உள் நோக்கம் மாநாட்டின் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுவதை துல்லியமாக அவதானிக்க முடிகிறது.
நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனில்லை. எந்தக் கட்சிக்கும் ஆதரவாளனும் இல்லை. இயற்கையாகவே சிறு வயது தொடங்கி இறை நம்பிக்கை உள்ளவன் என்ற வகையில் முருகன் மாநாட்டிற்கும் அந்த முருகன் சாமிக்கும் எள் முனையளவு தொடர்பும் இல்லை என்பது மட்டுமல்ல, இது முருகக் கடவுளுக்கு எதிரான மாநாடு என்பதை முருக பக்தனாக உரக்க சொல்கிறேன்.
’இறைவன் மனிதனை காக்கிறான்’ என்ற நம்பிக்கையிலேயே இடியை இறக்கி, இந்த மனிதர்களிடம் இருந்து நம் இறைவனை காப்பாற்றுவது எப்படி? என நம்மை தீவிரமாக சிந்திக்க வைக்கிறது இந்த மாநாடு!
-சாவித்திரி கண்ணன்
