வெஞ்சன்ஸ் திரைப்பட விமர்சனம்



ஏ.பி.அசோக்குமார் தயாரித்திருக்கும் ‘வெஞ்சென்ஸ்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார், ராகுல் அசோக். இப்படத்தில் அபர்ணதி, இளவரசு , ஜான்விஜய், லிவிங்ஸ்டன், ஒய் ஜி மகேந்திரன், காளி வெங்கட், சரவண சுப்பையா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஆதவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒரு பெண் எடுக்கும் முடிவுகள், இந்த சமூகத்திலும் அரசியலிலும் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்த படம் மூலம் சொல்கிறார்கள், கொஞ்சம் நீளமாக, கொஞ்சம் குழப்பமாக! அதற்குப் பொறுப்பு,
படத்தை இயக்கி இருக்கும் ராகுல் அசோக்.
சிறுவயதில் பெற்றோரைப் பிரிந்த அபர்ணதியைக் காளி வெங்கட் மிகுந்த பாசத்துடன் வளர்த்து வருகிறார். காளி வெங்கட்தான் தனது தந்தை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் அபர்ணதி. அவர் படிக்கும் பள்ளிக்கூடத்தில் தன்னை யாருமே கண்டு கொள்வதில்லை என்று தந்தையிடம் வருத்தப்படுகிறாள் அபர்ணதி. அப்போது இந்த மாவட்டத்திலேயே முதல் மாணவியாக நீ வந்தால் உன்னை எல்லோரும் பாராட்டுவார்கள் என்று தந்தை சொல்கிறார். தன்னைப் பற்றி மற்றவர்கள் பேச வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் அபர்ணதி, அதற்கான முயற்சியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக வருகிறார். அதிக மதிப்பெண் பெற்று முதல் மாணவியாக வந்த போது அனைவரும் பாராட்ட வேண்டும் என்ற ஒரு போதை வந்து, தினசரி அனைவரும் தன்னைப் பற்றிப் பேச வேண்டும் என்று நினைக்கிறார் . அந்த மகிழ்ச்சி இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே நீடிப்பதால் மீண்டும் புகழ் போதைக்கு அடிமையாகிறார் அபர்ணதி. அதற்காகச் சில அதிர்ச்சிகரமான செயல்களைச் செய்கிறார். அப்படிப்பட்டவர் நன்றாக படித்து கலெக்டராகிறார். தனது சொந்த மாவட்டத்திலேயே கலெக்டராகி, தன் பதவியின் மூலமும், தனது நடவடிக்கைகள் மூலம் மற்றவர்களின் பாராட்டுகளை பெறும் அபர்ணதிக்கு, முதலமைச்சர் இளவரசு மூலம் பல தடைகள் ஏற்படுகிறது.
அபர்ணா ஆட்சியரான பிறகு தனக்கென ஒரு தூய்மையான மற்றும் நேர்மையான பிம்பத்தை மிகத் திட்டமிட்டு உருவாக்கி, தனது அதிரடி நடவடிக்கைகளால் மக்களிடம் புகழ் பெறுகிறார். ஆனாலும் முதல்வர் சில விஷயங்களில் கட்டுப்படுத்தி தடை செய்வதை அவர் விரும்பவில்லை. ஒரு கட்டத்தில் முதலமைச்சரே, தான் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டிய சூழலை உருவாக்கி, அவரின் முன்னேற்ற பாதையை நோக்கிச் செல்கிறார். ஆனால், அவர் முன்னேற்றத்திற்கு இணையாக எதிர்ப்புகளையும், பலவித தடைகளையும் எதிர்கொள்ளும்போது தேர்தல் வியூகம் வகுப்பாளராக மாறுகிறார்.
ஒரு கட்டத்தில் அவரது கடந்த கால ரகசியங்களும், சிறுவயதில் தனது வளர்ப்புத்தந்தை காளி வெங்கட் தொடர்பான அதிர்ச்சிகரமான உண்மைகளும் வெளிவரத் தொடங்குகின்றன. அதனை தனது புத்திசாலித்தனத்தால் எப்படி முறியடித்து, தான் நினைத்ததை செய்து முடிக்கிறார் என்பதை அரசியல் கலந்த புதிய கோணத்தில் கதை சொல்லும் படம்தான் “வெஞ்சன்ஸ்”.
படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களும், சம்பவங்களும் தமிழக, இந்திய அரசியலைப் பிரதிபலிக்கின்றன. குறிப்பாக ஜெயலலிதாவை நினைவூட்டும்படி இருக்கின்றன.
அதனால் அவரைப் போல் நடை உடை பாவனைகளைச் செய்து பல காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
முதலமைச்சர் கதாபாத்திரத்தில் வரும் இளவரசு, மத்திய அமைச்சராக வரும் ஜான் விஜய், அபர்ணதியின் தந்தையாக வரும் காளி வெங்கட், எதிர்க்கட்சித் தலைவராக வரும் லிவிங்ஸ்டன், முன்னாள் முதலமைச்சராக வரும் ஒய்.ஜி.மகேந்திரன், அமைச்சராக வரும் சரவண சுப்பையா ஆகியோர் தோன்றும் காட்சிகளில் தமிழகத்து அரசியல் சூழ்நிலைகளை பார்க்க முடிகிறது.
டி.எம்.கார்த்தி, சுரேஷ் சக்கரவர்த்தி, நோபல் கே.ஜேம்ஸ், சச்சு, பிரதமராக நடித்திருக்கும் மங்கல், சாய் தன்யா, ரேகா நாயர், சிறுமி சம்யுக்தா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்கள் வேலையை, சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு படத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து பயணிக்கிறது.
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. அருண் ராஜின் பின்னணி இசை, ப்ளஸ் பாயிண்ட்.
தமிழக அரசியல் பின்னணிகளை இணைத்து ஒரு பரபரப்பான படமாக உருவாக்கியுள்ளார், இயக்குநர்.
‘வெஞ்சென்ஸ்’ படம், அரசியல் கலந்த ஆரவாரமான படம்.

