முருகனடிமை வாஸ்து S. செல்வா அவர்களின் கேள்வி-பதில் தொடர்கிறது

7) தென் கிழக்கு மூலையை ஏன் அக்னிமூலை என்கிறார்கள்?
வாஸ்து பற்றி எது தெரிகிறதோ இல்லையோ, அக்னி மூலை மட்டும் எதுவென்று எல்லோருக்கும் நன்றாக தெரியும்.
தென்கிழக்கை ஏன் அக்னி மூலை என சொல்ல வேண்டும்? ஏன் மற்ற திசைகளை சொல்லவில்லை?
எல்லாமே அறிவியல் காரணங்கள்தான்!
வாஸ்து என்பது பஞ்சபூத தத்துவங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம், 8 திசைகள், சூரியன், இவற்றை நமது வீட்டில் சரிவிகிதத்தில் பயன்படுத்த முற்படுவதே ஆகும். அதன் வகையில் அக்னி பாகம் என்பது மிக முக்கியமானது. அக்னிபாகத்தில்தான் சமையலறைக்கு ஏதுவான வெப்பநிலை நமக்கு கிடைக்கும்.
சூரியன் பகல் முழுதும் தெற்கு சாய்ந்தவாறே பயனிப்பார். இதன் காரணமாக, பூமியின் தென்கிழக்கு, தெற்கு மத்தியம் ,தென்மேற்கு திசைகளில் வெப்ப தாக்குதல் அதிகமாக இருக்கும். வருடம் முழுதும் சூரியன் இவ்வாறுதான் பயணிப்பார்.
இதில் தென்மேற்கு பருவமழை காரணத்தினால், மேற்கு, தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட வெப்ப தாக்குதலை சமாளித்து, வெப்பம் குறைக்கப்படும்.
வடக்கிலிருந்து வரும் வாடை காற்று, தெற்கில் ஏற்படும் வெப்பத்தைத் தணிக்கும்.
இதில் எந்த ஒரு பருவ நிலை காரணத்தினாலும் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட வெப்ப தாக்குதல் குறையாமல், வருடம் முழுதும் சூடாகவே காணப்படும்.
* சூரியன் காலை நேரத்தில் கிழக்கில் உதித்து தென்-கிழக்கை நோக்கி நகர்கிறான்.
* அந்த நேரத்தில் வரும் UV (அல்ட்ரா வைலட்) கதிர்கள் வீட்டுக்குள் புகும்போது இந்தப் பகுதியில் சமையலறை அமைக்கும்போது, சுத்தமாகவும் கிருமி இல்லாததாகவும் வைத்திருக்க அது உதவுகிறது.
* காலை வேளையில் சமையல் செய்வது உடலுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கச் செய்கிறது.
எனவே தென்கிழக்கு திசையை அக்னி பாகம் என்று வாஸ்துவில் அழைக்கிறோம்.
8) அக்னி மூலையில் வாஸ்து குறை ஏற்பட்டால் என்ன பாதிப்பு உருவாகும்?
இந்த பாகத்தில்தான் சமையலறை அமைக்க அறிவுறுத்தப்படுகிறது. நாம் உண்ணும் உணவு, வயிற்று பகுதியை சென்றடையும். இது அனைவரும் அறிந்ததே. அக்னி பாகத்தில் ஏற்பட்ட வாஸ்து பாதிப்பு என்பது, மனிதனின் வயிற்றுப் பகுதியை பாதிக்கும். எனவேதான் வீட்டின் தென்கிழக்கு உட்பகுதியில் கழிவறை, படிக்கட்டு, செப்டிக் டேங்க்,மற்றும் தென்கிழக்கு வெளிப்பகுதியில் செப்டிக் டேங்க் அமைப்பது போன்றவை வீட்டில் உள்ளவர்களுக்கு வயிற்று நோய்கள் ஏற்படும். வயிற்றில் அறுவை சிகிச்சை, நீரிழிவு நோய் ஏற்படும். அதேபோல், பெண்களுக்கு வயிற்று பகுதியில் ஏதேனும் பாதிப்புகள் வரும்போது, அது அவர்கள் கருத்தரிப்பதை தாமதம் செய்கிறது. இதனால் குழந்தை பிறப்பது தடைப்படுகிறது. தென்கிழக்கு பகுதியில் எந்த பாதிப்பும் இல்லாமல், நல்ல அமைப்பாக இருந்தால் மட்டுமே, அந்த வீட்டின் பெண்கள் நல்ல ஆரோகியமான நிலையிலும், அவர்களின் வாழ்வு முன்னேற்றமாகவும் இருக்கும்.

(கேள்வி-பதில்கள் தொடரும்)
