முருகனடிமை வாஸ்து S.செல்வா எழுதும் கதவைத் திற காசு வரட்டும் புதிய தொடர் இன்று ஆரம்பம். ஆயிரம் கேள்விகள்; ஆயிரம் பதில்கள்!

கேள்விகள் ஆரம்பம்…

1.வாஸ்துவுக்கும் மனையடிக்கும் சம்மந்தம் இருக்கா?

- Advertisement -

பெரும்பாலும் மக்களுக்கு மனையடிதான் வாஸ்து என்று நம்பிக் கொண்டு உள்ளார்கள். இதற்கு என்ன காரணம், காலண்டர் பின்னால், அதற்கான பலன்களை எழுதியிருப்பார்கள். இதனைவைத்தே மக்களுக்கும் அவ்வாறு தோன்றியது. ஆனால் உண்மையில் இப்போது குறிப்பிடும் 30 செ.மீ கொண்ட ஒரு அடி என்பதை, மனையடியாக சொல்லப்படவில்லை என்பதுதான்.

ஏனெனில் 12 அங்குலம் கொண்ட அடி கணக்கும் மற்றும் மீட்டர் கணக்குகளை கடந்த 70 வருடங்களாகதான் பயன்படுத்தி வருகிறோம். உலகம் முழுவதும் ஒரே மாதிரியான அளவுகளை பின்பற்ற வேண்டும் என உருவாக்கப்பட்டதுதான் மெட்ரிக் அளவுமுறைகள். இதனை வெளிநாட்டு அளவுமுறை அல்லது பிரிட்டீஷ் அளவு முறை என்பார்கள். அதில்தான் அடி மற்றும் மீட்டர் கணக்குகள் வரும்.

வாஸ்து சாஸ்திரம் உருவாகிய காலம் என்பது பல ஆயரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆகும். அப்போதைய நம் தமிழர் பயன்பாட்டில் இருந்த அளவு முறைகள் என்பது முழம், விச்சி, அங்குலம் கால், மாத்திரை என்பவைகளென சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் ஒவ்வொரு காலகட்டத்திலும் வாஸ்து சாஸ்திரத்தை அந்தந்த காலத்திற்க்கேற்ப உள்ள கட்டிட கலைக்கு ஏற்ப புதுப்பித்து வந்துள்ளனர். அதனை நூல்களாக எழுதியுள்ளனர். அதன்படி மயமதம், மானசாரா, விஸ்கர்மா, பிரகாசிகா போன்ற பழமையான நூல்களில் 1 மனையடி என்பது 13.5 அங்குலம் என குறிப்பிட்டுள்ளது.

ஆனால் மக்களால் இப்போது பயன்படுத்தும் அடி என்பது 12 அங்குலம் கொண்டது. இன்னொரு வாய்வழி தகவலாக பார்ப்போமானால் குடும்ப தலைவரின் பாத அளவுகளை கொண்டே மனையடி கணக்கிடப்பட்டது என்றும், மற்றொரு தகவலாக குடும்ப தலைவர் நடக்கும் இரண்டு காலடிக்குகளுக்கும் இடைப்பட்ட அளவுகளே மனையடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே மனையடி என்பதின் கணக்குகள் பலவாறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் முழுமையான விளக்கங்கள் கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.

உதாரணமாக 6 அடி, 8 அடி, 10 அடி என, பலன்கள் ஒற்றை வரியில் காலண்டரில் குறிப்பிட்டிருக்கும். ஆனால் நூல்கள் எதுவும் இல்லை. ஒவ்வொரு அடிகளுக்கும் பலன்கள் என்பது பாடல்களாக குறிப்பிட்டிருக்கலாம். காலப்போக்கில் அதனை சுருக்கப்படுத்தியே நமக்கு கிடைத்திருக்கிறது.

இவ்வாறு மனையடியில் குளறுபடிகள் நிறைய உள்ளன. மனையடி மட்டுமே வைத்து வீடு கட்டிய பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை நான் பார்த்துள்ளேன். நான் மனையடியை யாருக்கும் சிபாரிசு செய்வதில்லை. அதன் மீது அதித நம்பிக்கை உள்ளவர்களுக்கு என்னால் முடிந்தவரை விளக்கம் கொடுத்து, மனையடி என்பதனை விட 8 திசைகளுக்குமான கட்டமைப்பே இன்றைய காலத்திற்கு தேவை என்பதனை வலியுறுத்தி வருகிறேன்.
மனையடி பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களிடையே இன்னும் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை.

2.) வாஸ்து சாஸ்திரம் எப்போது இந்தியாவில் தோன்றியது?

மனிதன், தன் இனத்தைப் பெருக்க எப்போது நினைத்தானோ, அப்போதே வாஸ்து ஆரம்பகிவிட்டது.

வாஸ்து என்பது அறிவியல் என்று பல மேடைகளிலும் கட்டுரைகளிலும் தெரிவித்து வருகிறேன்.

இதில் தனக்கான ( Comfortable Zone )வசதியான வசிக்க ஏற்ற இயற்கை சூழல் இருக்கும் என்பதனை, வாஸ்து அறிவுறுத்துகிறது.

ஆரம்பத்தில் காட்டில் வாழ்ந்த மனிதன், மரத்தின் மீது ஏறி தங்கினான். பின் குகைகளில் தங்கினான். பின் கூறை அமைத்து தங்கினான். பின் சுண்ணாம்பு கலவையை கொண்டு வீட்டை உருவாக்கினான். இதில் சுண்ணாம்பு கலவையைக் கொண்டு உருவாக்கியதே அன்றைய நவீன கட்டமைப்பின் தொடக்கமாகும். மேற்கண்ட கட்டமைப்புகள் அனைத்தும், இயற்கையை ஒத்திசைந்தே அமைத்தான் மனிதன்!

இதில் வாழ்ந்த மகான்களே, நமக்கு இந்த கட்டமைப்புகள் பற்றி ஒவ்வொரு காலகட்டதிலும் நூல்களாக எழுதி வந்துள்ளனர்.

அதன்படி அதர்வன வேதத்தில் வாஸ்து பற்றிய குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளன. அதன் காலம் என்பது கி.மு 1500-500 என கூறப்பட்டுள்ளது.மேலும் கி.மு 2600-1900 ஆண்டுகளில் சிந்து பள்ளதாக்கில் உருவாக்கப்பட்ட நகரங்கள் யாவும், வாஸ்து முறைப்படி இயற்கை சூழலுக்கு உருவாக்கப்பட்டுள்ளது என தொல்லியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கி.பி 500-1500 காலகட்டத்தில், இதனை நன்கு அறிந்த வல்லுநர்கள் கோவில்களைக் கட்டினர். அந்த வகையில் கட்டப்பட்ட கோவில்கள்தான் தஞ்சை பெரியகோவில், காஞ்சிகோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருப்பதி ஏழுமலையான் கோவில்கள்! அதன் தொடர்ச்சியாகத்தான், அரண்மணைகளை கட்டுவதற்கும் பயன்படுத்தினர்.

சுருங்கச் சொன்னால், வாஸ்து சாஸ்திரமாக உருவாகி, 5,000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். மனிதன் தனக்கான இடத்தை அமைக்க தொடங்கியதிலிருந்தே வாஸ்து என்பதும் உருவாகியது என்றாலும், இதனை சாஸ்திரங்களாக உருவாக்கி, அதனை எதிர்கால சந்ததியினருக்கும் கொண்டு சேர்ந்த பெருமை, நம் சித்த புருஷர்களான ரிஷிகளுக்கே உரித்தானது. அந்த வகையில் பிருகு முனிவர், மனு, விஸ்வகர்மா, மயன், பராசரர், பிரஹஸ்பதி,இவர்கள் வழிவந்த ஸ்தபதிகள் இந்த வாஸ்து சாஸ்திரத்தை மக்களுக்கு அர்பணித்தனர்.

 

3) கோவில்கள், அரண்மனைகள், வீடுகள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான வாஸ்து சாஸ்திரம்தானா?

கோவில்களில் பயன்படுத்தும் வாஸ்து என்பது, அந்த கோவிலுக்கு என்ற ஆகம விதிகள், சிற்ப சாஸ்திர விதிகள் போன்றவற்றை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டது.

அரண்மனைக்கு, அங்கே உருவாக்கப்படும் பலதரப்பட்ட கட்டமைப்புகளை வைத்து வாஸ்து சாஸ்திரத்தை பயன்படுத்தினர். அரண்மனை கட்டமைப்பிற்கான விதிகளை பிருஹத்சம்ஹிதை என்ற நூலில் வராஹமிஹிரர் என்பவர், தெளிவு படுத்தியுள்ளார். அதில் கோட்டை வாயில், அரசவை, ஆயுதக் கிடங்கு, கல்யாண கூடம், விருந்தினர் மாளிகை, நந்தவனம், சமையல்கூடம், தானியக் கூடம், போர்ப் பயிற்சி செய்யும் இடம், நாட்டியக் கூடம் என பல கட்டமைப்புகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும், அதன் அளவுகள் எத்தணை முழம் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது..அது மட்டுமல்லாமல், பலவிதமான அரண்மனைகளில் மாளிகைகள் இருந்துள்ளன. அவ்வாறான மாளிகைகள் எல்லாம், அந்தந்த நாட்டின் மலைகள், ஆறுகள் இதனை அனுசரித்தும் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளும்படியான கட்டமைப்புகளையெல்லாம் வைத்தே, உருவாக்கப்பட்டிருக்கின்றன.

தனிமனித வீட்டிற்கான வாஸ்து என்பது, கோவில்கள் மற்றும் அரண்மனைகளுக்கும் மாறுப்பட்டதாக இருந்தன.
அதிலும் வர்ணாசிர தர்மப்படியே வாஸ்து விதிகளை கடைபிடித்து வந்துள்ளனர்.

ஆனால் இன்றைய நவீன காலத்தில், வாஸ்து என்பது பழைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட வாஸ்து விதிகளை அடிப்படையாக கொண்டு, இன்றைய விஞ்ஞான உலகத்திற்கு ஏற்றவாறு பல்வேறு வாஸ்து விதிகள் புதுப்பிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தொடரும்…