*நீளிரா விமர்சனம்*


நடிகர்கள்: நவீன் சந்திரா, சனந்த் ரெட்டி, ரூபா கொடுவாயூர், கபிலா வேணு
திரைக்கதை, இயக்கம்:சோமீதரன்
இந்த திரைப்படம், ஒரே இரவில் நடக்கிறது. படத்தின் இறுதியில், வாசுகி என்ற கதாபாத்திரத்திற்கு இலங்கையிலிருந்து ஐரோப்பாவிற்கு இனி வரவிருக்கும் நீண்ட, கடினமான பயணத்தை விவரிக்கும் ஒரு குறிப்பு, திரையில் காட்டப்படுகிறது. ஒரு நெடும் சாகசத்தை உணர்த்தும் அந்த வாசகம், இந்த
படத்திற்கு திடீரென உயிரூட்டுகிறது.
1988-ஆம் ஆண்டில் வட இலங்கையில் நடப்பதாக அமைக்கப்பட்ட, ஒரு இலங்கைத் தமிழரால் இயக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமான ‘நீளிரா’ , வாசுகியின் திருமணத்திற்கான ஏற்பாடுகளுடன் தொடங்குகிறது. இதில், இந்திய அமைதிப்படை (IPKF) மற்றும் இலங்கை இராணுவத்திடம் அனுமதி பெறுவதற்கான ஏற்பாடுகளும் அடங்கும்.
“இருண்ட காலங்களில்கூட, சிறிதளவு வெளிச்சத்தை எதிர்பார்க்க நமக்கு உரிமை உண்டு” என்று எழுதிய ஹன்னா ஆரென்ட்டை இது நினைவூட்டுகிறது. படம் முழுக்க இருளிலேயே நகர்கிறது. அதுவே பலம். அதுவே பலவீனம்!
திருமணத்திற்கு முந்தைய இரவு, முற்றிலும் தற்செயலாக, எட்டு IPKF வீரர்கள் அந்த வீட்டிற்கு இடம் மாறிப்போய் வருகிறார்கள். விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் அங்கு அந்த இரவைக் கழிக்க! அந்த வீட்டில் தஞ்சம் புகுந்து, அதன் உறுப்பினர்களைச் சிறைபிடிக்கிறார்கள். IPKF-இன் இருப்பை அறிந்த விடுதலைப் புலிகள், பதற்றத்தைத் தூண்டுகிறார்கள், மேலும் அந்த வீட்டின் உறுப்பினர்களின் தாக்குதலில் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த ஒரு இரவுதான் முழுப்படமும். அவர்கள் எப்படி தப்பித்தார்கள்? உள்ளே இருந்தவர்கள் என்ன ஆனார்கள்? என்பதே பரபரப்பான மீதிக்கதை. க்ளைமேக்ஸை வெளியே சொல்ல வேண்டாம் என்று இயக்குனர் கேட்டுக்கொண்டதால், அதைப்பற்றி பேசப் போவதில்லை!
இதே இயக்குனர், 1981-ல் யாழ்ப்பாண மத்திய நூலகம் எரிக்கப்பட்ட நிகழ்வைப் பற்றிய ‘எரியும் நினைவுகள் ’ என்ற ஆவணப் படத்தை எடுத்தவர். அந்த நிகழ்வில், பல அரிய நூல்கள், சுமார் 97,000 நூல்கள் எரிந்து சாம்பலாயின. நீளிராவிலும் அந்த பாதிப்பு பதிவாகி இருக்கிறது. ஆனால் இயக்குனரின் தணிக்கை கட்டுப்பாடுகள், காட்சிகளின் உண்மைத்தன்மையை ஒளித்து வைக்கின்றன. இதை படமாக்க முனைந்த கார்த்திக் சுப்புராஜும், இயக்குனர் சோமிதரனும் பாராட்டுக்குரியவர்கள். உலக அளவில் பல விருதுகளை இந்தப்படம், பெற்றுவரும்.

