அக்யூஸ்ட் பட விமர்சனம்

அருமையான லைன். சிறையிலிருந்து கோர்ட்டுக்கு ஒரு கைதியை பாதுகாப்பாக கொண்டு செல்கிறார்கள். ஆனால் தமிழக போலீஸ் துணையுடனே ஒரு கும்பல் அந்தக் கைதியை வழியில் என்கவுண்டர் மூலம் கொல்ல முயற்சிக்கிறது! அதே நேரம் கர்நாடகாவில் இருந்து வந்த ஒரு கூலிப்படை, அதே கைதியை கோர்ட்டுக்குப் போகவிடாமல் தடுத்துக் கொல்லப் பார்க்கிறது! என்ன காரணம்? கொஞ்சம் கொஞ்சமாக ப்ளாஷ்பேக் காட்சிகள் மூலம் விடை சொல்கிறார், எழுதி இயக்கி இருக்கும் இயக்குனர் பிரபு ஸ்ரீனிவாஸ்.

கேரக்டரைப் புரிந்து கொண்டு, ஒரு லோக்கல் ரெளடியாகவே மாறி இருக்கிறார் ஹீரோ உதயா. 40 வயதிற்குள் லோக்கல் ரெளடிகள் சந்திக்கும் பிரச்னைகளையெல்லாம் பட்டியல் போட்டுக் காட்டி இருக்கிறார்கள்.

- Advertisement -

காதல், குத்தாட்டம், தகராறு, காதலியின் பிரிவு, செண்டிமெண்ட், அரசியல்வாதிகளின் செயல்பாடுகள், இறுதியில் இருவரும் இறப்பது என படம் முழுக்க கதை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

மருதநாயகத்தின் ஒளிப்பதிவு மிக நேர்த்தி.

ஆனால் இசையமைப்பாளர் நரேன் பாலகுமாரன், எங்கேயுமே ஓய்வு கொடுக்காமல், எல்லா ரீல்களுக்கும் வாசித்துத் தள்ளியிருக்கிறார்! சைலண்ட் ஷாட்ஸ் கொஞ்சமாவது இருந்தால்தான் மற்ற காட்சிகளுக்கு மதிப்பு இருக்கும்.

குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி, கதாநாயகி ஜான்விகாவுக்கு ஒரு ரெளடியைக் காதலிக்கும் கட்டாயம் என்ன வந்தது என்பதை இயக்குனர் சொல்ல மறந்து விட்டார். ஆரம்பத்தில் ஹீரோவோடு ஓவராக குத்தாட்டம் போடுவதும், க்ளைமாக்ஸில் காதலனை வசை பாடுவதும் என, அவருக்கு நடிக்க நல்ல வாய்ப்பு.

அஜ்மல் நடிப்பு, மிக யதார்த்தம். ஒரு அப்பாவி போலீஸாக அசத்தி இருக்கிறார். தன் காதலி குறித்து மற்றவர்களிடம் வெளிப்படையாக பேசியிருப்பது, மிக அழகு! ஒரு கைதிக்கும் தனக்கும் இருக்கும் உறவைப் புரிந்து கொண்டு வேகமெடுக்கும் அவரது நடிப்பு, படத்துக்கு மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட்ஸ்!

யோகிபாபு படத்தில் இருக்கிறார். ஆனால் வழக்கமான பாத்திரம், வசனம் எல்லாம் அவரது பழைய படங்களையே நினைவூட்டுகின்றன.

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்! அவரது உழைப்பிற்கு பாராட்டுதல்கள்.

ஹீரோ உதயாவின் ரீ எண்ரிக்கு இந்தப் படம் மிக உபயோகமாக இருக்கும்.