*HEART IN – பட விமர்சனம்*

 

 

 

 

மெமரி லாஸ் என்பதுதான் படத்தின் மையக்கரு. காதலை மறக்க முடியுமா? அல்லது காதலே நினைவுகளை மீட்டெடுக்குமா? என்ற கேள்வியை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் இந்த HEART IN.

ஜெய்ப்பூரில் செஃப் ஆக வேலை செய்யும் சிவா (சனந்த்), ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் சாதனா (இமையா)வை சந்திக்கிறார். இருவருக்கும் இடையே உருவாகும் நட்பு, அழகான காதலாக மாறுகிறது. ஆனால் தனது முந்தைய காதல் இன்னும் மனதில் ஆழமாக பதிந்திருப்பதால், புதிய உறவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சிவா கூறுகிறார்.

சாதனாவின் உண்மையான அன்பு இறுதியில் சிவாவின் மனதை மாற்றுகிறது. காதல் மலர்ந்த நேரத்தில், எதிர்பாராத விபத்து ஒன்று அனைத்தையும் தலைகீழாக மாற்றுகிறது. அந்த விபத்தால் சிவா, தனது கடந்தகால காதலான சாஹித்யா (மடோனா செபஸ்டின்)வுடன் வாழ்ந்த நினைவுகளுக்கே திரும்பிச் செல்கிறார். தற்போது காதலிக்கும் சாதனாவை அவரால் அடையாளம் காண முடியவில்லை.

இதன் பிறகு என்ன நடக்கிறது? சிவாவின் வாழ்க்கையில் யார் நிலைத்திருக்கிறார்கள்? கடந்தகாலமா… நிகழ்காலமா… என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

புதுமுகம் சனந்த், இரண்டு வெவ்வேறு மனநிலைகளை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். காதலனாகவும், நினைவிழந்த மனிதராகவும் அவரது நடிப்பு நம்ப வைக்கிறது.

இமையா, தனது கதாபாத்திரத்தில் உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக ஏமாற்றம், காதல், வலி என பல உணர்வுகளை சிறப்பாக கடத்தியிருக்கிறார்.

மடோனா செபஸ்டின், குறைவான நேரத்திலேயே தனது அனுபவமான நடிப்பால், கவனம் ஈர்க்கிறார். வாட்ஸ்அப் மணி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது பங்களிப்பை அருமையாகச் செய்துள்ளனர்.

ராஜேஷ் முருகேசனின் பாடல்களும் பின்னணி இசையும் காதல் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. முகேஸ்வரனின் ஒளிப்பதிவு ஜெய்ப்பூரின் அழகை திரையில் ரசிக்க வைக்கிறது. பரத் விக்ரமனின் எடிட்டிங் நேர்த்தியாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் சில இடங்களில் திரைக்கதை சற்று மெதுவாக நகர்வதால் தடுமாற்றம் தெரிகிறது.

சினிமாவில் நினைவிழப்பு என்ற பழக்கமான கதைக்களத்தை, காதல் மற்றும் உணர்ச்சிகளுடன் கலந்து வித்தியாசமான அனுபவமாக மாற்ற முயற்சித்திருக்கிறார் இயக்குநர் கிஷோர் குமார். சில திருப்பங்கள் யூகிக்கக் கூடியதாக இருந்தாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் படத்தை இறுதிவரை பார்க்க வைக்கிறது.

சனந்தின் முதிர்ச்சியான நடிப்பு இமையா, மற்றும் மடோனா செபஸ்டினின் இயல்பான நடிப்பு ராஜேஷ் முருகேசனின் இசை, உணர்வுபூர்வமான காதல் காட்சிகள் பலவீனங்கள் இரண்டாம் பாதியில் வேகம் குறைவது, சில காட்சிகளில் இன்னும் ஆழமான எழுத்து இருந்திருக்கலாம் என்று தோன்ற வைக்கிறது.

HEART IN பெரிய திருப்பங்களோ, மாஸ் தருணங்களோ இல்லாமல், காதல், நினைவுகள் மற்றும் உறவுகளின் உணர்வுகளை மென்மையாகச் சொல்லும் ரொமான்டிக் டிராமாவாக இருக்கிறது. காதல் கதைகளை ரசிப்பவர்களுக்கு இந்தப் படம் ஒரு நல்ல அனுபவத்தை தரலாம் என்கிற நம்பிக்கை இயக்குனருக்கு அதிகம் இருக்கிறது! அவர் நம்பிக்கை ஜெயிக்கட்டும்.

Comments (0)
Add Comment