தமிழ்ப் படங்களில் நாம் அதிகம் அறிந்திடாத வட மஞ்சுவிரட்டு என்கிற ஜல்லிக்கட்டுக்கு மாற்றான ஒரு விளையாட்டை வடம் பிடித்துச் சொல்லியிருக்கிறார், இயக்குனர்
கேந்திரன். வி.
ஊர் பெரிய மனிதரான ஆடுகளம் நரேன், ரொம்ப நல்லவராக இருக்கிறார். மாடுகளின் மேல் அதீத பாசம் கொண்ட அவர், மாட்டுச் சாணத்தைக் கூட மனிதன் மிதிக்கக் கூடாது என்கிற பண்புள்ளவர்.
அந்த சாணம்தான் நாளை திருநீராக போகிறது என்கிற மரியாதைதான் அத்ற்குக் காரணம். அந்த அளவுக்கு நல்லவராக இருக்கும் அவர், அடிமாட்டுக்கு செல்லும் காளைகளை மீட்டு, அவற்றை வளர்த்து வருகிறார்.
அவரது மகனாக விமல், அப்பா வளர்க்கும் காளைகளை தேர்ந்தெடுத்து, வட மஞ்சுவிரட்டு விளையாட்டுக்கு தயார் செய்கிறார். அது மட்டுமல்லாமல் அப்படி தயார் செய்த ‘பாண்டி முனி’ என்கிற காளையைக் கொண்டு போட்டிகளில் பல பரிசுகளை வென்று வருகிறார்.
இவரைப் போலவே, போட்டிக் காளைகள வளர்த்து வருகிறார், நட்டி. யாராவது உருவாக்கி விட்டால் அதை விலை பேசி தன்னுடையதாக மாற்றிக் கொண்டு போட்டிகளில் கலந்து வெல்வார்.
இந்நிலையில் பாண்டி முனியை அவர் தன் வசப்படுத்த நினைத்ததால் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
விமல் இதில் மாடுகளை விளையாட்டிற்குத் தயார் செய்யும் பயிற்சியாளர் வேடத்தை ஏற்றிருக்கிறார்.
இடையில் ஒரு கொலைக் கேஸில் விமல், உள்ளே போய்விட்டு ஜாமீனில் வெளியே வருகிறார்.
எதிரிகளோடு மோதும விமலுக்கு நாயகி சனஷ்கா ஸ்ரீ, காதல் வலை வீசுகிறார். நல்ல அழகு. நன்கு நடிக்கவும் செய்கிறார். இடைவேளையில் ஒரு டிவிஸ்ட் கொடுத்து, கவனம் ஈர்க்கிறார். நல்ல கேரக்டர்.
நடிப்பில் முரட்டுத்தனம் காட்டும் நட்டி, படத்தின் பாதிக்குப் பிறகு, முக்கியத்துவம் பெறுகிறார்.
வில்லனாகவே வந்து போகும் ஆடுகளம் நரேனுக்கு, இதில் வித்தியாசமாக ரொம்ப நல்ல கேரக்டர்.
முனீஷ் காந்த்திற்கு, நகைச்சுவை கலந்த குணச்சித்திர வேடம். உணர்ந்து நடித்திருக்கிறார்.
இவர்களுடன் விமலின் அம்மாவாக நடித்திருக்கும் இந்துமதி, அத்தை தீபா சங்கர், பால சரவணன், மதுசூதனன் ராவ் உள்ளிட்டோர் தங்கள் பாத்திரங்களுக்கு சிறப்பு செய்திருக்கிறார்கள்.
வட மஞ்சுவிரட்டு, அவற்றுக்கான பயிற்சிக் காட்சிகளில் எல்லாம் ஒளிப்பதிவாளர் பிரசன்னா, மிகத் திறமையாக இயக்குனருக்கு ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறார்.
பாடல்களில் டி.இமானின் தனித்துவம் தெரிகிறது. பாண்டி முனி என்ற பாடல், பல இடங்களில் ஒலிக்கிறது.
பின்னணி இசையில் தூள் கிளப்பியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் கேந்திரன், கதையை தெளிவாகச் சொல்லி இருக்கிறார். பக்காவான கமர்ஷியல் இயக்குனராக ஒரு ரவுண்டு வருவார். மண்ணின் வாசனையோடு அனைவரும் ரசிக்கும்படியாக இந்தப் படத்தை தந்திருக்கும் அவரை பாராட்டியே தீர வேண்டும்.