நடிகையிலிருந்து, மயிலா திரைப்படம் மூலம், இயக்குனராகி இதுக்கும் செம்மலர் அன்னம் சிறப்புப் பேட்டி!
கேள்வி: நடிகையிலிருந்து இயக்குநராக மாறிய உங்கள் அனுபவம் எப்படி இருந்தது? ஆரம்ப கால சவால்களை எப்படி எதிர்கொண்டீர்கள்?
பதில்: சினிமாவில் ஆரம்ப காலத்தில் நான் பல சவால்களைச் சந்தித்தேன். ஆனால் அந்தச் சவால்களை நான் கஷ்டங்களாகப் பார்க்காமல், ஒரு கற்றலாகவும் (Learning), எனது வளர்ச்சிப் பாதையில் உள்ள படிக்கட்டுகளாகவுமே பார்த்தேன். நடிகையாக இருந்ததால் எனக்கு சினிமாவில் நிறைய தொடர்புகள் (Contacts )கிடைத்தன. இது தொழில்நுட்ப ரீதியான சந்தேகங்களைக் கேட்பதற்கும், எனது படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் மிகவும் உதவியாக இருந்தன. நான் பணியாற்றிய இயக்குநர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்ட ஒவ்வொரு விஷயமும் எனது படத்திற்கு ஒரு நல்ல அடித்தளமாக அமைந்தன.
கேள்வி: பெண் இயக்குநர்கள் பெண் சார்ந்த (feminism) படங்களை மட்டுமே எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீங்களா? இல்லை இயல்பான வாழ்வியலாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
பதில்: ஒரு படைப்பு என்பது நாம் உணர்ந்த, கடந்து வந்த அல்லது நெருங்கிப் பார்த்த விஷயங்களின் தொகுப்பாகவே உருவாகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமூகத்தில் இருக்கும் சவால்கள் வெவ்வேறானவை. எனவே, ஒரு பெண் படைப்பாளி, தனது அனுபவங்களின் அடிப்படையில் பெண் சார்ந்த பிரச்சினைகளைப் பேசுவது என்பது மிகவும் இயல்பான (Organic) ஒன்று. ஆண்கள் தங்களுக்குத் தெரிந்தவற்றை எடுப்பதை இயல்பு என ஏற்கும் சமூகம், பெண்கள் எடுக்கும்போது மட்டும் அதை ‘பெண்ணியம்’ என்ற குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுருக்குவது தவறு. இதுவும் ஒரு இயல்பான படைப்புதான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கேள்வி: சினிமாவில் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்களிடையே இருக்கும் சம்பள வேறுபாடு பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: மற்ற துறைகளில் அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், சினிமாவில் ஒருவரின் ‘சந்தை மதிப்பு’ (Market Value) மற்றும் மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் பிரபலத்தை பொறுத்தே சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இடையே பெரும் சம்பள ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்றது.
தற்போது வரும் பல புதிய தயாரிப்பாளர்கள் மாற்றத்தைக் கொண்டு வர விரும்புகிறார்கள். குறிப்பாக, படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு மற்றும் சமமான மரியாதையை வழங்குவதில் அக்கறை காட்டுகிறார்கள். சிறிய பட்ஜெட்டில் உருவாகும் சுயாதீன திரைப்படங்களில் உழைப்பு மற்றும் ஊதியம் ஆகிய இரண்டையும் அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்து கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது. இத்தகைய படங்கள் மூலம் ஒரு சமத்துவமான சூழல் உருவாகிறது.
தற்போது கலைஞர்கள் தங்களுக்குள்ள சம்பளப் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர். இந்த விழிப்புணர்வு பலருக்கு உண்மையை உணர வைத்து, மாற்றத்தை நோக்கிச் செயல்படத் தூண்டுகிறது. சமூகம் மற்றும் அரசியல் புரிதல் கொண்ட இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் திரையுலகிற்கு வரும்போது, இத்தகைய ஏற்றத் தாழ்வுகளை களைவதற்கான முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.
கேள்வி: “மயிலா” உங்களுக்கு எவ்வளவு ஸ்பெஷல்? மயிலா உருவான விதம் மற்றும் அதன் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்?
பதில்: “மயிலா” எனது வாழ்க்கையில் எப்போதும் ஒரு பொக்கிஷமான படம். இது ஒரு கிராமப்புறப் பெண்ணின் போராட்டத்தைப் பற்றியது. எனது மகளுக்கும் எனக்கும் இடையே நடந்த ஒரு சிறிய சம்பவமே இந்தக் கதையை எழுதத் தூண்டுகோலாக இருந்தது. பின்பு பல பெண்களிடம் பேசியபோது, அவர்கள் பகிர்ந்த, சொல்லப்படாத கதைகளை அவர்களின் இடத்திலிருந்து நேர்மையாகச் சொல்ல வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் இதை உருவாக்கினேன். இப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘ப்ரைட் ஃபியூச்சர்’ பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டது எனக்குப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது.
கேள்வி: உங்களின் முதல் படமே ரோட்டர்டாம் போன்ற சர்வதேச விழாக்களுக்கு சென்றிருப்பது, பெரும் மகிழ்ச்சி. அதனோட உழைப்பு பற்றி வளரும் பெண் இயக்குநர்களுக்கு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
பதில்: “மயிலா” படம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இந்த சர்வதேச அங்கீகாரத்தால், படம்குறித்த நேர்மறையான கருத்துக்கள் இப்போதே வரத் தொடங்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சி. பெண் இயக்குநர்கள், எக்காரணத்தைக் கொண்டும் தங்கள் முயற்சியைக் கைவிடக்கூடாது. என்னுடைய திரைப்பட உருவாக்கத்தில் பல சவால்களை சந்தித்தேன். மற்றும் பல விஷயங்களை இழந்தேன். ஆனால் படத்தை முடித்தே தீர வேண்டும் என்ற குறிக்கோளுடன் தீவிரமாக உழைத்தேன். எந்த ஒரு செயலையும் செய்ய சரியான திட்டமிடல் வேண்டும். அதேபோல் பொறுமை மற்றும் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்புடன் அணுகினால், அது நிச்சயமாக உரிய இடத்தை அடையும்.
கேள்வி: நீங்கள் ஒரு சிறந்த நடிகை. இப்போது இயக்குநர். கேமராவிற்கு முன்னால் நடிப்பதற்கும், பின்னால் நின்று ஒரு உலகத்தையே உருவாக்குவதற்கும் அதிக சவாலாக எது இருந்தது?
பதில்: உண்மையைச் சொல்லப்போனால், கேமராவுக்கு முன்னாடி நடிக்கிறது எனக்கு எப்பவும் ஒரு சின்ன பயத்தைக் கொடுக்கிற விஷயம்தான். ஏனென்றால் அது இன்னொருத்தருடைய கதை இன்னொருத்தருடைய உலகம். அவர்கள் உருவாக்கி வைத்திருந்த ஒரு உலகத்தை நாம் சரியாக பிரதிபலிக்கிறோமா என்ற தயக்கம் எப்போதும் இருக்கும். நடிப்பு என்பது ஒரு சின்ன வட்டத்துக்குள் முடிந்து விடும். நம்ம கேரக்டரை இயக்குநருக்கு பிடித்த மாதிரி, ஒரு மீனிங்ஃபுல்லாக நடித்துக் கொடுத்து விட்டால் நம் வேலை அங்கேயே முடிந்து விடும். இயக்குநர் என்று வரும்போது பொறுப்புகள் ரொம்ப அதிகம். ஒரு ‘கேப்டன் ஆஃப் தி ஷிப்’பா மொத்த குழுவையும் ஒரு கிரியேட்டிவ் ஜோன்ல கொண்டு வரணும். அவங்ககிட்ட வேலை வாங்குவது, முக்கியமான முடிவுகளை எடுப்பது என்பது எல்லாமே இயக்குநர் கட்டுபாட்டில் தான் இருக்கிறது.
ஆனா, இதை நான் ‘சவால்’ என்று சொல்ல விரும்பவில்லை, இதுதான் ஒரு இயக்குநரின் இயல்பு. அந்தப் பொறுப்புக்கு ஏற்ற மாதிரி நம்மை நாமே, தகுதிப்படுத்திக்க வேண்டும். இப்போது நான் ஒரு படம் பண்ணினதன் மூலமாக, இன்னும் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். இயக்குனராக தொடர்ந்து கத்து கொண்டே இருக்கணும் என்பதை புரிந்து கொண்டேன்.
கேள்வி: “மயிலா திரைப்படம் உழைக்கும் பெண்களின் அக உலகைப் பேசுகிறது. இந்த மகளிர் தினத்தில், சமூகத்தில் இன்னும் கவனிக்கப்படாமல் இருக்கும் ‘மயிலா’க்களை பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: பெண்கள் இன்று பெரிதும் மாறிவிட்டார்கள். பெண்கள் சார்ந்த விஷயங்கள் இப்போது வெளிப்படையாகப் பேசுகிறார்கள். பல பெண்கள் தைரியமாகத் தங்கள் கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கி விட்டனர். இருப்பினும், சமூகத்தில் இன்னும் தங்களுக்குள் இருக்கும் வலிகளையும் போராட்டங்களையும் வெளியே பேசத் தயங்கும் அல்லது பேச முடியாத நிலையில் இருக்கும் பெண்களின் குரலாகத்தான் இந்த மயிலா பேசுகிறாள். உழைக்கும் பெண்களோட, அதாவது பொருளாதார சுதந்திரம் எதுவும் இல்லாம, தனிப்பட்ட திருமண வாழ்க்கையில இருக்கக் கூடிய போராட்டங்கள் எல்லாத்தையும் அழுத்தம் திருத்தமாக இந்தப் படம் பேசுகிறது.
பெண்கள் எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் முயற்சியைக் கைவிடாதீர்கள் (Don’t give up). பல சவால்கள் வரலாம், ஆனால் சரியான திட்டமிடலும், பொறுமையும், ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பும் இருந்தால், உங்கள் படைப்பு நிச்சயமாக உரிய இடத்தைச் சென்றடையும். “மயிலா” திரைப்படம் இன்னும் பேசப்படாத பல பெண்களின் குரலாக இருப்பாள் என்று நம்புகிறேன்.
செம்மலர் அன்னத்தின் முயற்சியும், செயல்பாடுகளும் அவருக்கு மென்மெலும் வெற்றிகளையும், உயரங்களையும் தரட்டும் என FilmToday, இந்த பெண்கள் தினத்தில் வாழ்த்துகிறது!
சந்திப்பு: ஷீபா