சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஆர் .பாரதி கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ட்ரீம் கேர்ள்’. இப்படத்தில்
ஜீவா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜெஸ்டின் பேத்தியும் நடிகை பபிதாவின் மகளுமாகிய ஹரிஷ்மிதா நடித்திருக்கிறார். மற்றும் பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா ஆகியோரும் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குநர் எம். ஆர். பாரதி பேசும்போது, ” இது ஒரு காதல் கதை.கதாநாயகனுக்கு சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பது கனவு.கதாநாயகிக்கோ தான் ஒரு பாடகியாக வேண்டும் என்று கனவு.
இப்படி இருவரும் கனவைத் துரத்திக் கொண்டிருக்கிறார்கள்.மற்றபடி இருவருமே ஜாலியாக வாழ்க்கையை, அதன் போக்கில் போகவிட்டு மகிழ்ச்சியின் தருணங்களை ஒரு சொட்டு கூட வீணடிக்காமல் வாழத் துடிப்பவர்கள் .
நவீன உலகத்தின் சமகாலப்பிரதியாகவும் பிரதிநிதியாகவும் அந்த இருவரும் இருக்கிறார்கள். அவர்களுக்குள் காதல் வருகிறது. கனவைத் துரத்தும் அவர்களுக்குள் ஒரு கனவும் வருகிறது.அது சில மாயங்களைச் செய்கிறது. அதன் வர்ணஜால விளைவுகளைச் சொல்வதுதான் ‘ட்ரீம் கேர்ள்’ படம். இது மசாலா கலப்பில்லாத ஒரு முழுமையான காதல் கதை. படத்தில் வில்லனே கிடையாது, வேண்டுமானால் கனவு தான் வில்லன் என்று கூறலாம்.
கதையில் குளுமை இருப்பதால் இதன் படப்பிடிப்பை முழுக்க முழுக்க ஊட்டியிலேயே நடத்த திட்டமிட்டேன். அதன்படியே நடைபெற்றுள்ளது. சரியாகத் திட்டமிட்டால் 25 லட்ச ரூபாயில் ஒரு நல்ல படம் எடுக்க முடியும் என்பதற்கு இந்தப் படம் ஓர் உதாரணம்.
நான் இந்தக் கதையை வைத்துக் கொண்டு தயாரிப்பாளரைத் தேடி அலையவில்லை. திறமைசாலிகளை மட்டுமே தேடினேன் .அதற்குரிய பலன் கிடைத்தது. இதில் நடித்திருக்கும் நாயகனும் சரி, நாயகியும் சரி, பிற நடிகர்களும் சரி அருமையாக நடித்திருக்கிறார்கள். நான் அவர்களை -அழகையும் தோற்றத்தையும் வைத்து தேர்வு செய்யவில்லை. நடிப்புத் திறமையை மட்டுமே வைத்து தேர்வு செய்தேன். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. இதில் பணியாற்றும் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் அனைவரும் திறமையின் வழியாகத்தான் இந்தப் படத்திற்குள் வந்தார்கள்.
நான் இதற்கு முன்பு ‘அழியாத கோலங்கள் 2’ என்ற படத்தை இயக்கி இருந்தேன். அதன் படப்பிடிப்பை 12 நாள்களில் முடித்திருந்தேன். நான் செலவு செய்த தொகையை கலைஞர் டிவியிலிருந்தே எனக்குக் கொடுத்து விட்டார்கள்.
தேவையில்லாமல் செய்த சில செலவுகள்தான் எனக்கு இழப்பு . மற்றபடி இன்று ஏராளமான வியாபார வழிகள் உள்ள சினிமாவில் சரியாகப் புரிந்து கொண்டு திட்டமிட்டுப் படமெடுத்து வெளியிட்டால் இழப்புக்கு வழியே இல்லை என்பது என் கருத்து” என்கிறார்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு சாலமன் போவாஸ் இளமாறன், வசனம் ஹேமந்த் செல்வராஜ், ராம் சரசுராம், எம். டி .தமிழரசன், தயாரிப்பு வடிவமைப்பு எஸ் .ரதி,
திரைக்கதை எம்.டி. தமிழரசன், கிருத்திகா தாஸ், எடிட்டிங் எஸ். பி . அஹமத், இணை இயக்கம் எம்.பொன் புவனேஸ்வரன்.
இப்படத்தில் என் .காவேரி மாணிக்கம், டாக்டர் ஆர். குணசேகரன், B. ஆதித்யன் இணைத் தயாரிப்பாளர்களாகப் பங்கெடுத்துள்ளனர்.
‘ட்ரீம் கேர்ள்’ படத்தின் கதை அழுத்தமாக இருப்பதால் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம்பெற்றுள்ளது. 2026 காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதியன்று இந்தப் படம் வெளியாகிறது.
தகவல் சக்தி சரவணன்