*‎பறை இசைத்தால், மன அழுத்தம் வெகுவாக குறையும்” -சந்திரிகா*

 

 

 

*ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும், பறை இசையைத் தனித்த மூச்சாகக் கொண்டு இயங்கி வரும் கலைஞர் சந்திரிகா அவர்களுடனான உரையாடல்*

‎ஷீபா : உங்களைப் பற்றி சுருக்கமாகச் சொல்லுங்கள்? உங்களது இந்தப் பயணம் எப்போது, எப்படி தொடங்கியது?

‎சந்திரிகா: நான் ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் (Organic Chemistry) பி.ஹெச்டி (PhD) முடித்துள்ளேன். கடந்த 10 ஆண்டுகளாகப் பறையை கற்றுக் கொண்டும், மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்து கொண்டும் இருக்கிறேன். 2015-ஆம் ஆண்டிலிருந்து எனது பறை இசைப் பயணம் தொடங்கியது. நான் ஒரு நாடகக் கலைஞராகவும் இருக்கிறேன். வீதி நாடகங்கள் மற்றும் மேடை நாடகங்கள் பலவற்றை செய்து வருகிறேன். எனது இந்தப் பயணம் வீதி நாடகங்கள் மூலமாகவே தொடங்கியது. வீதி நாடகம் என்பது மக்களை ஓரிடத்தில் திரட்டி நடத்தப்படுவது. அப்படி மக்களைத் திரட்டுவதற்காக ஒரு இசைக் கருவியாகவே நான் பறையை கற்கத் தொடங்கினேன்.

ஷீபா : ஒரு காலத்தில் குறிப்பிட்ட வட்டத்திற்குள் வைக்கப்பட்டிருந்த பறை இசை, இன்று மேடை ஏறி உலக அரங்கிற்கு சென்றிருக்கிறது. இந்த மாற்றத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

‎சந்திரிகா: எந்தவொரு மாற்றமும் மக்கள் சிந்திக்காமலோ அல்லது விழிப்புணர்வடையாமலோ கண்டிப்பாக நிகழாது. இன்று பறை இசையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், எங்களுக்கு முன்னால் இருந்த தலைமுறை நிகழ்த்தியது தான். ‎அவர்கள் எதிர்கொண்ட சூழல்கள், அனுபவித்த அவமானங்கள் மற்றும் வேதனைகளை பார்த்துதான், இந்த பறையிசை கருவி நம் அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கிறது. இந்தக் கருவி எந்த அளவிற்கு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொண்டபோது தான், எனக்குள் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. ‎முந்தைய தலைமுறையினர் செய்த அந்த மாற்றங்களைத்தான் இப்போது நாங்கள் தொடர்கிறோம் . இனிமேலும் எங்களால் முடிந்தவரை, தற்போதைய இளைய தலைமுறைக்கு இந்த மாற்றத்தைக் கொண்டு சேர்க்கும் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.

ஷீபா : பறை இசைக்கும் பெண்களுக்குச் சமூகத்தில் கிடைக்கும் அங்கீகாரம் இப்போது எந்த அளவில் இருக்கிறது? நீங்கள் சந்தித்த தடைகள் என்ன?

‎சந்திரிகா : சமூகத்தில் பெண்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்று பார்த்தால், ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஆண்கள் பறை கற்க விரும்பினால் அவர்கள் சமூகத்தில் இருக்கும் சிக்கல்களை மட்டும் எதிர்கொண்டால் போதும். ஆனால், ஒரு பெண் பறை கற்க முயலும்போது அந்தப் போராட்டம் முதலில் அவர் வீட்டிலிருந்தே தொடங்குகிறது. குடும்பத்தினர் பல்வேறு காரணங்களைச் சொல்லி தடுப்பார்கள்.  இவற்றை எல்லாம் எதிர்த்து அவர்கள் வெளியே வருவதே ஒரு பெரிய சவால்தான். இன்று குடும்பங்களில் நிலவும் இந்தச் சூழல் ஓரளவிற்கு மாறியிருக்கிறது என்று சொல்லலாம். இருப்பினும், சமூகத்தில் ஆண்களுக்கு இணையான அங்கீகாரம் இன்னும் பெண்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை என்பதே கசப்பான உண்மை. ஆனால், இந்த நிலை மெல்ல மெல்ல மாறி வருகிறது. பெண்களுக்கான அங்கீகாரம் இப்போது ஓரளவிற்கு துளிர்விட தொடங்கியிருக்கிறது. தனிப்பட்ட ரீதியில் நான் சந்தித்த தடைகள் என்று பார்த்தால், எனக்கு வீட்டிலிருந்து எந்தத் தடையும் வரவில்லை. என் குடும்பத்தினர் கம்யூனிச மற்றும் முற்போக்குச் சிந்தனை கொண்டவர்கள் என்பதால், அவர்களே என்னை ஊக்குவித்து ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்ள தூண்டி கொண்டே இருப்பார்கள். ஆனால், பொதுவெளியில் ஒரு பெண் வேலைக்குச் சென்றாலே விமர்சனங்கள் எழும் இந்தச் சூழலில், ஒரு பெண் பறை இசைக்க தொடங்கும்போது பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இத்தகைய சமூகத் தடைகளைத் தாண்டித்தான் நாங்கள் பயணிக்கிறோம்.

‎ஷீபா : பறையில் பல வகைகள் மற்றும் ‘அடி’ முறைகள் உள்ளன. அதில் உங்களுக்கு மிகவும் பிடித்த அல்லது நீங்கள் சவாலாகக் கருதும் ‘அடி’ எது?

‎சந்திரிகா: பறையிசைப் பொறுத்தவரை, எனக்கு இது ‘சவாலான அடி’ என்று தனித்து எதுவும் இல்லை.  ஏனென்றால், பறை வாசிப்பில் உள்ள எல்லா அடிகளுமே எனக்கு மிகவும் பிடித்தமானவை. இருப்பினும், எனக்கு எப்போதும் மிகவும் பிடித்தமான ஒரு அடி என்று கேட்டால், அது ‘ஒத்தை அடி’ தான். குறிப்பாக, “வாரணம் ஆயிரம்” படத்தில் வரும் “அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல” என்ற பாடலில் வரும் அந்த ஒத்தை அடி எனக்கு மிகவும் நெருக்கமானது.

ஷீபா : பறை இசையைக் கற்க வரும் இன்றைய தலைமுறையினருக்கு அதன் ஆன்மா புரிகிறதா? அல்லது வெறும் கொண்டாட்டமாக மட்டும் பார்க்கிறார்களா?

‎சந்திரிகா : ஆரம்பத்தில் பறை இசையைக் கற்க வருபவர்கள், இது ஒரு துடிப்பான (Vibrant) இசை, ஒரு ‘வைப்’ (Vibe) தரும் கலை என்று ஒரு கொண்டாட்ட மனநிலையுடன் தான் வருகிறார்கள். ஆனால், அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் போது நாங்கள் கையாளும் முறைகள் அவர்களை மெல்ல மாற்றுகின்றன. இந்தக் கலையை ஏன் கற்க வேண்டும், இதன் நீண்ட வரலாறு என்ன, இதன் சமூகப் பின்னணி என்ன, மற்றும் நாம் இதைக் கையில் எடுக்கும்போது சமூகம் நம்மை எப்படிப் பார்க்கும் போன்ற ஆழமான விஷயங்களை தெரிந்து கொண்டு அவர்கள் கற்று கொள்கிறார்கள். பயிற்சியின் முடிவில், அவர்கள் வெறும் கொண்டாட்டத்தைத் தாண்டி, ஒரு புரிதலோடு கூடிய சிறந்த மாற்றத்திற்கு உள்ளாவதை எங்களால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

‎ஷீபா : பறை இசைக்கும்போது ஏற்படும் அந்த அதிர்வு, உடல் மற்றும் மன நிலையில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது?

‎சந்திரிகா : பறை இசைப்பது என்பது மற்ற இசைக் கருவிகளை வாசிப்பதை போன்றது அல்ல. பொதுவாக இசைக்கருவிகளை ஓரிடத்தில் அமர்ந்து வாசிப்பார்கள். ஆனால், பறையை நாம் வாசித்துக் கொண்டே நடனமாட வேண்டும், சைகைகள் காட்ட வேண்டும், குழுவாக ஒருசேர இயங்க வேண்டும். இதில் மனமும் உடலும் ஒன்றிணைந்தால் மட்டுமே நம்மால் முழுமையாக இசைக்க முடியும்.

‎நம் கால்கள் சொல்வதைக் கேட்டு நடனமாடிக் கொண்டே, குழுவின் வேகத்திற்கு ஏற்ப இசைக்கும் போது உடலில் ஒரு நேர்மறையான மாற்றம் உண்டாவதை உணர முடியும். மிக முக்கியமாக, பறை இசைக்கும் போது ஏற்படும் அந்த அதிர்வுகள் மனதிற்குப் பெரிய மகிழ்ச்சியைத் தருகின்றன. இதனால் மன அழுத்தம் (Stress) பெருமளவு குறைகிறது. “பறை இசைத்த பிறகு என் ஸ்ட்ரெஸ் எல்லாம் போய்விட்டது” என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சொல்வதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

ஷீபா : பறை இசையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அரசு அல்லது கல்வி நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

‎சந்திரிகா: நிச்சயமாக, கடந்த சில ஆண்டுகளாகவே இதில் நல்ல மாற்றங்களை நாம் பார்த்து வருகிறோம். குறிப்பாக,  கடந்த அரசு திமுக ஆட்சி  நடத்திய ‘கலைத் திருவிழாக்கள்’ ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தன. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இந்தத் திருவிழாக்கள் மூலம் பல்வேறு கலைகளைக் கற்றுக்கொண்டு, அவற்றை மேடைகளில் வெளிப்படுத்திப் பரிசுகளை வென்றனர்.  அதில் வெற்றி பெற்ற மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பையும் பெற்றனர்.

‎இந்த முன்னெடுப்பால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்ததுடன், தனியார் பள்ளிகளும் தற்போது நாட்டுப்புறக் கலைகளைக் கற்றுத் தர ஆர்வம் காட்டி எங்களை அணுகத் தொடங்கியுள்ளனர். அதனால் ‎இந்த அரசும் இதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. பறை உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 

‎தற்போது நடைமுறையில் உள்ள கலைத் திருவிழாக்களை எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து நடத்த வேண்டும். ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு நாட்டுப்புறக் கலைஞரை நியமித்து, ஏதேனும் ஒரு கலையைக் கற்பதை ஒரு பாடமாகவே (Curriculum) வடிவமைக்க வேண்டும்.

‎ஒவ்வொரு மாணவரும் ஏதோ ஒரு கலையைக் கட்டாயம் கற்க வேண்டும் என்ற நிலை வரும்போது, நம் கலைகள் அழிந்துவிடாமல் வளர்வதுடன் கலைஞர்களின் வாழ்வாதாரமும் மேம்படும்.

ஷீபா : பறை இசையை நேரில் கற்றுக் கொடுப்பதற்கும், கேமரா முன்னால் நின்று ஒரு Vlog மூலம் கற்றுக் கொடுப்பதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

‎சந்திரிகா : பறை இசையை ஒரு கேமரா முன்னால் நின்று முழுமையாகக் கற்றுக்கொடுத்துவிட முடியாது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. குருவிடமிருந்து நேரில் கற்றுக்கொள்வதுதான் எப்போதும் மிகச்சிறந்த கற்றல் முறையாக இருக்கும். இருந்தாலும், Vlog மூலம் இதைச் செய்வதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. உதாரணமாக, ஒரு சமையல் வீடியோவைப் பார்ப்பவர்கள் அனைவரும் உடனடியாகச் சமைப்பதில்லை.  ஆனால், “என்றாவது ஒருநாள் இதைச் சமைக்க வேண்டும்” என்ற ஆர்வம் அவர்களுக்குள் எழும். அதேபோலத்தான், பறை இசை வீடியோக்கள் “இது இவ்வளவு எளிதா?” அல்லது “இவ்வளவு கடினமா?” என்று மக்களை யோசிக்க வைத்து, ஒரு ஆர்வத்தைத் தூண்டுகின்றன.

‎இந்த வீடியோக்களைப் பார்க்கும் மக்கள், அவற்றைச் சேமித்து வைத்துக் கொள்கிறார்கள். அந்த ஈர்ப்புதான், “ஒருநாள் கண்டிப்பாக நேரில் சென்று இதைக் கற்க வேண்டும்” என்ற உந்துதலை அவர்களுக்கு அளிக்கிறது. அந்த ஆர்வத்தின் மூலம் நிறையப் பேர் எங்களைத் தேடி நேரில் வருகிறார்கள். அப்படி வருபவர்களுக்கு நாங்கள் முறையாகப் பறை இசையைக் கற்று கொடுக்கிறோம்.

‎ஷீபா : பொதுவாகப் பறை இசை என்பது ஆண்களுக்கானது என்கிற பிம்பம் இருந்தது. ஒரு பெண்ணாக நீங்கள் பறை கற்றுக் கொடுக்கும் போது மாணவர்களிடம் (குறிப்பாகப் பெண்களிடம்) ஏற்படும் தாக்கம் என்ன?

‎சந்திரிகா : உண்மைதான், முன்பு பறை இசை என்பது ஆண்களுக்குரிய ஒன்றாகவே பார்க்கப்பட்டது. இறப்பு வீடுகளில் இது அதிகம் பயன்படுத்தப்பட்டதாலும், பெண்கள் பறையைத் தொட்டால் ‘தீட்டு’ என்ற பிற்போக்கான பார்வை இருந்ததாலும் இந்தப் பிம்பம் உருவானது. ஆனால், தற்போது அந்த பிம்பங்கள் உடைக்கப்பட்டுள்ளன. நான் பறை இசைக்கத் தொடங்கி பத்து வருடங்கள் ஆகின்றது. இந்த நீண்ட பயணத்தில், பறை இசை குறித்து இருந்த அந்தப் பழைய கட்டுக்கதைகளை உடைத்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. “என்னால் முடிகிறது என்றால் மற்ற பெண்களாலும் முடியும்” என்பதை நான் நிரூபித்துள்ளதாகவே நம்புகிறேன். என்னை முன்மாதிரியாகக் கொண்டு பல பெண்கள் பறை கற்க முன்வந்துள்ளனர். அவ்வாறு ஆர்வம் காட்டியவர்களில் நிறைய பெண்கள் தற்போது எங்கள் குழுவிலேயே பயிற்சியாளர்களாக (Trainers) உயர்ந்துள்ளனர். இப்போது அவர்கள் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்து வருகிறார்கள்.  அவர்களைப் பார்த்து இன்னும் பல பெண்கள் ஈர்க்கப்பட்டு பறை கற்கத் தொடங்கியுள்ளனர். இந்தப் சங்கிலித்தொடர் போன்ற மாற்றம் இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து நீடிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

‎ஷீபா : ஆன்லைன் வழியாகப் பறை இசையின் நுணுக்கங்களை புரிய வைப்பதில் உள்ள சவால்கள் என்ன? உங்களிடம் பறை கற்க வருபவர்களில் உங்களுக்கு மறக்க முடியாத மாணவர்/மாணவி யார்?

‎சந்திரிகா : ஆன்லைன் வழியாகப் பறை இசை கற்பிப்பதில் இருக்கும் மிகப்பெரிய சவால் ‘அதிர்வு’ (Vibration) தான். நான் வாசிக்கும்போது ஏற்படும் அந்த அதிர்வை ஆன்லைனில் கற்பவர்களால் உணர முடியாது, அதேபோல அவர்கள் வாசிப்பதை என்னாலும் முழுமையாக உணர முடியாது. இன்றைய காலச் சூழலில், வேலைப்பளு மற்றும் பல்வேறு காரணங்களால் அனைவரும் ஓரிடத்தில் கூடிப் பழகுவது கடினமாகிவிட்டது. அந்த வகையில் ஆன்லைன் வகுப்புகள் ஒரு சிறந்த உதவியாக இருக்கின்றன.

ஆனாலும், பறை என்பது ஒரு ‘கூட்டிசைக் கருவி’ (Group Instrument). முகம் பார்த்து, அனைவரும் ஒருசேரப் பறை எழுப்பும் போது கிடைக்கும் மகிழ்ச்சி தனித்துவமானது. எனவே, ஆன்லைனில் கற்றாலும், வாழ்நாளில் ஒருமுறையாவது அனைவரும் நேரில் கூடி இசைக்க வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமாகவும் இருக்கிறது. என்னுடைய மாணவர்களில் மறக்க முடியாதவர்கள் என்று இருவரைக் குறிப்பிடுவேன்.

‎”வேதா” இவர் இரண்டாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே என்னிடம் பறை கற்று வருகிறார். இப்போது சுமார் 7-8 வருடங்களாக எங்களுடன் பயணிக்கிறார்.

‎”ஐஸ்வர்யா”பி.எஸ்.ஜி (PSG) கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வாளராக (PhD Scholar) இருக்கும் இவர், எனக்கு மிகவும் பிடித்தமான மாணவி.

ஷீபா : ஒரு கலையை ‘Vlog’ ஆக மாற்றும்போது அதன் புனிதம் கெடாமல் எப்படிப் பார்த்துக்கொள்வது? Content Creation-க்காகப் பறையில் புதிய மாற்றங்களைச் செய்கிறீர்களா அல்லது பாரம்பரிய முறையையே பின்பற்றுகிறீர்களா? பறை இசையை வைத்து Vlog செய்வது மற்ற கலைஞர்களுக்கு ஒரு வாழ்வாதாரப் பாதையாக அமையும் என்று நினைக்கிறீர்களா?

‎சந்திரிகா : முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எந்த ஒரு இடத்திலும் எதற்கும் ‘புனிதம்’ கற்பிக்கப்படுவதை நாங்கள் விரும்புவதில்லை. ஏனென்றால், ஒரு விஷயம் புனிதப்படுத்தப்படும்போது அதற்கு நேர்மாறாக மற்றொன்று இழிவானதாகக் கருதப்படும் சூழல் உருவாகிறது. முன்னொரு காலத்தில் பறையை இழிவாகவும், மற்ற கருவிகளைப் புனிதமாகவும் பார்த்தனர். இன்று நாங்கள் பறையை புனிதப்படுத்தினால், அது மற்ற கருவிகளை இழிவாக பார்ப்பதற்கு சமம். எனவே, நாங்கள் எதையுமே புனிதம் என்று நம்புவதுமில்லை, பின்பற்றுவதுமில்லை. சமூக ஊடகங்களுக்காக (Content Creation) நாங்கள் பறை இசையின் அடிப்படையிலோ அல்லது அதை இசைக்கும் முறையிலோ எந்த மாற்றமும் செய்வதில்லை.

பாரம்பரியமான அதே முறையைத்தான் பின்பற்றுகிறோம். ஆனால், இன்றைய தலைமுறை குழந்தைகளுக்குப் புரியும் வகையில் அதைக் கொண்டு சேர்க்கும் விதத்தை (Presentation) மட்டுமே மாற்றியிருக்கிறோம். Vlog செய்வது பொருளாதாரத் தேவையை தீர்க்கும் அல்லது தன்னிறைவு கொடுக்கும் ஒரு விஷயமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.  இதன் மூலம் ‎பறையை பற்றித் தெரியாதவர்களுக்கு அது என்னவென்று அறிமுகப்படுத்த முடியும். ஏற்கனவே பறை தெரிந்தவர்களுக்கு தெரியாத சில அடிகளைக் கற்றுக்கொடுக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.

மக்கள் இதைப் பார்த்து ஆர்வம் கொண்டு கலையைக் கற்க முன்வருவார்கள். இப்படிப் பறையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு கருவியாக இது இருக்குமே தவிர, கலைஞர்களின் பொருளாதாரத் தேவையை இது முழுமையாகத் தீர்த்துவிடாது.

‎ஷீபா : இசைஞானி இளையராஜா  சாரோட பாடல்கள் பெரும்பாலும் மெலடியாக இருக்கும். அதற்குப் பறையின் ‘கம்பீரமான’ சத்தம் எப்படிப் பொருந்துகிறது? இந்த ‘Fusion’ ஐடியா உங்களுக்கு எப்படித் தோன்றியது?

‎சந்திரிகா : இளையராஜா சாரோட பாட்டு பெரும்பாலும் மெலடியா இருக்குங்கிறதையே நான் ஒத்துக்க மாட்டேன். ஏன்னா அவரோட ஆர்க்கெஸ்ட்ராவுல பெரும்பாலும் பறை பயன்படுத்தப் பட்டிருக்கும். அவரோட எல்லாப் பாடல்களிலுமே  பெரும்பாலும் பர்க்கஷன் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (Percussion Instruments) பயன்படுத்தப் பட்டிருக்கும்.

‎அவரோட இசை என்பது ஒரு கடல் மாதிரி.  அதிலிருந்து  ஒரு  சின்ன முத்துக்களை எடுத்து நாங்க பயன்படுத்துறோம். குறிப்பாக, அவருடைய பாடல்களில் இருந்து எடுத்த சின்னச் சின்ன மெட்டுகளை தான் நாங்க வாசிச்சு காட்டுகிறோம். மக்களுக்கு எந்தெந்த இடத்தில் எல்லாம் பறையை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை  தெரியப்படுத்துவதற்காகதான் நாங்க இதைச் செய்கிறோம்.

‎ஷீபா : ஒரு பாடலைத் தேர்ந்தெடுத்த பிறகு, அதற்கு எந்த மாதிரியான ‘அடி’ (Rhythm) செட் ஆகும் என்பதை எப்படி முடிவு செய்கிறீர்கள்? ராஜா சாரோட பாடல்களில் உங்களுக்குப் பறை இசைக்க மிகவும் பிடித்த பாடல் எது?

‎சந்திரிகா :   நான் முன்பே சொன்னது போல எந்தப் பாடலுக்கும் நாங்கள் புதிய மெட்டுகளை (Rhythm) உருவாக்குவதில்லை. ராஜா சார் ஏற்கனவே உருவாக்கிய அந்த இசையை எடுத்து மக்களுக்குத் தெரியப் படுத்துகிறோம். அவருடைய எல்லாப் பாடல்களிலும் பறை இருக்காது. சிலவற்றில் மிருதங்கம் அல்லது தபலா பயன்படுத்தப்பட்டிருக்கும். அவற்றையும் நாம் பறையிலும் இசைக்க முடியும் என்பதைத்தான் வீடியோவாகப் பதிவு செய்கிறோம். ராஜா சாரினுடைய பாடல்களில் எனக்குப் பறை இசைக்க மிகவும் பிடித்த பாடல் ‘காட்டுக்குயிலு மனசுக்குள்ள…’. இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல்.

‎ஷீபா : பாரம்பரியக் கலையை சினிமா பாடல்களோடு இணைக்கும்போது, ‘Pure Folk’ விரும்பிகள் மத்தியில் ஏதேனும் விமர்சனம் வந்ததா? அல்லது எல்லோருமே இதை ரசித்தார்களா?

‎சந்திரிகா : விமர்சனங்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால், எந்நேரமும் தூய்மைவாதம் (Purism) பேசுபவர்களை நாங்கள் ஆதரிப்பதில்லை. தூய்மைவாதம் என்பது ஒரு கட்டத்தில் மதம், சாதி அல்லது மொழி சார்ந்த வெறியாக மாறிவிடும் அபாயம் கொண்டது. இப்படிப் பேசுபவர்கள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு ஒரே இடத்திலேயே நின்றுவிடுவார்கள். ஆனால் மக்கள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருப்பார்கள். எந்தவொரு கலையாக இருந்தாலும் அது அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டுமானால், கால மாற்றத்திற்கும் பரிணாம வளர்ச்சிக்கும் உட்பட்டு இருக்க வேண்டும். இல்லை  “இப்படியேதான் இருக்க வேண்டும்” என்று பிடிவாதம் பிடித்தால், அந்தக் கலை பின்தங்கிவிடுமே தவிர மக்களுடன் இணைந்து பயணிக்க முடியாது.

‎ஷீபா : இவ்ளோ தூரம் பறை இசையை கொண்டு வந்திருக்கீங்க.  அடுத்து ஒரு மியூசிக் ஆல்பம் அல்லது சினிமாவில் பறை இசைக்கு  என்று ஒரு தனி முக்கியத்துவம்  கொடுக்கிற மாதிரி ஏதாவது பிளான் வைத்திருக்கிறீர்களா?

‎சந்திரிகா : பறை இசை இன்று அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு எண்ணற்ற கலைஞர்கள் காரணமாக உள்ளனர். பல திரைப்படப் பாடல்களில் பறை பயன்படுத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், எங்களுடைய நோக்கம் சினிமாவில் வாய்ப்பு பெறுவது அல்லது அங்கு செல்வது என்பதாக ஒருபோதும் இருந்ததில்லை.
‎பறை இசைக்கான உரிய மரியாதையும் அங்கீகாரமும் எங்கு கிடைக்கிறதோ, அங்கு நாங்கள் பணியாற்றுகிறோம். உதாரணமாக, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் சிறந்த சவுண்ட் எஃபெக்ட்ஸ்காக தேசிய விருது பெற்ற  திரு. ஆனந்த கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கினார். அந்த இடத்தில் கலைக்கும் கலைஞர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைத்ததால் நாங்கள் அதை ஏற்றுக் கொண்டோம்.

‎எங்களது உண்மையான இலக்கு ‎பறை இசை குறித்த சரியான புரிதலை மக்களிடம் கொண்டு செல்வது.
‎அதன் வரலாற்றைப் பதிவு செய்வது. ‎பறை மட்டுமல்லாது அனைத்துப் பாரம்பரிய கலைகளையும், நமது மொழியையும் மக்கள் கொண்டாடி கற்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது.

இதை ஒரு கருவியாகக் கொண்டுதான் நாங்கள் செயல்படுகிறோமே தவிர, வாய்ப்புகளுக்காக மட்டுமே இந்தக் கலையை சுமந்து செல்லவில்லை.

‎ஷீபா: ஒரு பெண் கலைஞராக ஒரு குழுவை வழிநடத்தும்போது நீங்கள் எதிர்கொள்ளும் சவால் என்ன?

‎சந்திரிகா : ஒரு பெண் கலைஞராகப் பறை இசையைத் தேர்ந்தெடுத்தபோது பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. குறிப்பாக, ஒரு நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் திரும்பும்போது தாமதமானால், ‘ஏன் இந்த நேரத்தில் ஒரு பெண் வெளியே செல்கிறாள்?’, ‘ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறாள்?’, ‘அதுவும் ஆண்களுடன் சேர்ந்து வருகிறாளே’ போன்ற கேள்விகள் சமூகத்தில் எழுந்தன. பொதுவாக ஆண்கள் ஒரு குழுவிற்குத் தலைமை தாங்கி வழிநடத்தும்போது, அது அவர்களுடைய ஆளுமையாகவும் திறமையாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் அதே ஒரு பெண் ஒரு குழுவை முன்னின்று வழிநடத்தும்போது, அது திமிராகவும் ‘பாஸியாகவும்’ (Bossy) தான் பார்க்கப்படுகிறது. ஒரே விஷயத்தைத்தான் இருவருமே சொல்லியிருப்பார்கள்.

ஆனால், அது பார்க்கப்படும் விதம் மட்டும் வேறாக இருக்கும். பெண்களின் தலைமைப் பண்பு ஒருவித ஆதிக்கம் செலுத்துவதைப் (Domination) போலத்தான் ஒரு கோணத்தில் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலையும் நான் எதிர்கொண்டு, இப்போது அதிலிருந்து வெற்றியுடன் மீண்டு வந்திருக்கிறேன். மற்ற துறைகளில் பெண்களுக்கு இருக்கும் அதே சவால்கள் பறை இசையிலும் இருந்தன. அடுத்ததாக, சாதிய ரீதியிலான தடைகளையும் நான் சந்தித்திருக்கிறேன். ‘இந்தக் கருவியை நான் வாசிக்கக்கூடாது’ என்கிற தொனி உறவினர்களிடமும் சரி, சுற்றியிருப்பவர்களிடமும் சரி, ஆரம்பத்தில் அதிகமாகவே இருந்தது.

நான் ஒரு நிலையை அடைந்து, இதில் சில சாதனைகளைச் செய்யும் வரை இந்தப் பேச்சுகள் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. ‎ஆனால், இப்போது நிலைமை மாறியிருக்கிறது. நான் செய்த இந்த விஷயங்கள் அவர்களின் பார்வையையே மாற்றியமைத்துள்ளது. ஆரம்பத்தில் விமர்சித்தவர்களே, இப்போது ஆர்வத்துடன் இதைக் கற்றுக்கொள்ள முன்வரும் அளவுக்கு ஒரு நேர்மறையா (positive)மாற்றம் ஏற்பட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

 

*சந்திப்பு: ஷீபா*



Comments (0)
Add Comment