பிரச்சாரப் படம் என்பது என்ன? ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை, ஒரு குறிப்பிட்ட கருத்தை, மக்களை ஏற்றுக் கொள்ள வைப்பதற்காக, அதாவது, மக்களை நம்ப வைப்பதற்காக, உண்மைகளை மறைத்து, தவறான ஒருதலைப்பட்சமான தகவல்களைக் கொண்டுசேர்ப்பதுதான் பிரச்சாரம்.
ஆனால் துரந்தர் படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. அந்த உண்மைச் சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்னவாக இருந்திருக்கும்? இந்தியாவில் நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல் பாகிஸ்தானில் எப்படி திட்டமிடப்பட்டிருக்கும் என்பதை கற்பனை கலந்து சொல்லி யிருக்கிறார்கள். இதில் என்ன பிரச்சாரம் இருக்கிறது?
முதலில் இது இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் என்பதே பொய்யான பிரச்சாரம். படம் முழுவதும் பாகிஸ்தானில் நடக்கிறது. இந்தியாவை வீழ்த்த வேண்டும், இந்தியாவை துண்டு துண்டாக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முயற்சி செய்வது உண்மைதானே? சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் இந்தியாவை கணக்கே இல்லாத அளவிற்கு காயப்படுத்தியிருக்கிறார்கள். இந்தியாவை எப்படியாவது அழித்து விடவேண்டும் என்பதற்காக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை பொய் என்று யாராவது சொல்லமுடியுமா? பாகிஸ்தான் இந்தியாவின் எதிரி நாடு!
75 ஆண்டுகால பகையில் இந்தியா எப்படி திருப்பி அடித்தது, அடிக்கிறது என்பதுதான் துரந்தர். அதில் அரசியலும் இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தியா எப்படியான முடிவுகளை எடுத்திருக்கிறது என்பதையும், இந்தியாவின் கேரக்டர் எப்படி மாறியிருக்கிறது என்பதையும் படம் பதிவு செய்திருக்கிறது. ஒருவேளை இதுதான் இடதுசாரி லிபரல்களுக்கு கண்ணை உறுத்துகிறது என்று நினைக்கிறேன்.
முதல் பாகத்தில் இந்தியாவில் மும்பை தீவிரவாத தாக்குதலை பார்க்கும் ரன்வீர்சிங், நம்மால் இதை தடுக்க முடியவில்லையே எனும் விரக்தியில், வேதனையுடன் அதைப் பார்ப்பார். இரண்டாம் பாகத்தில் துபாய் விமான நிலையத்தில் இறங்கும் ரன்வீர், URI அட்டாக் செய்தியை பெருமிதத்துடன் பார்த்து நகர்ந்து செல்வார். பழைய இந்தியாவுக்கும், புதிய இந்தியாவுக்குமான வேறுபாட்டை இந்த இரண்டு காட்சிகளில் புரிந்து கொள்ளலாம்.
நீ அடிச்சா, அதைவிட வலிமையா திருப்பி அடிப்போம் என்பது புதிய இந்தியாவின் கேரக்டர். அதை இந்த திரைப்படம் சரியாக பதிவு செய்திருக்கிறது.
பாகிஸ்தானில் இந்தியாவின் கரன்சி அச்சடிக்கப்பட்டு, கோடிக்கணக்கில் இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. படத்தில் காண்பிக்கப்படுவது அப்பட்டமான உண்மை. கள்ளநோட்டு அடிக்கும் கேரக்டராக வரும் ஜாவேத் கனானி நிஜ கேரக்டர். இந்தியாவில் டிமானிட்டைசேஷன் அறிவிக்கப்பட்ட சில நாட்களில், ஜாவேத் கட்டிடத்தில் இருந்து விழுந்து இறந்து போனார் என்பது உண்மையான செய்தி.
எஸ் பி சவுத்ரி அஸ்லாம் கேரக்டரும் உண்மைதான். லியாரி தாதாக்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த இருந்த போலீஸ் அதிகாரி. அவர் மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டதும் உண்மை சம்பவம்.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஆதிக் அஹமத் பாகிஸ்தானின் ஐஸ்ஐ மற்றும் லக்ஷர் இ தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தார் என்பதும் நிரூபிக்கப்பட்ட உண்மை. படத்தில் காட்டப்பட்டதுபோல் அவர், சுட்டுக் கொல்லப்பட்டதும் உண்மை சம்பவம்.
ரஹ்மானின் மற்றொரு தளபதியாக வரும் உசேர் பலூச் என்கிற கேரக்டரும் நிஜ கேரக்டர்தான். அப்படி ஒரு நபர், துபாய் ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டதும் உண்மை சம்பவம்.
லக்ஷர் இ தொய்பா தீவிரவாதிகள் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டதும் உண்மையான சம்பவங்கள்தான். தீவிரவாதி அபு காட்டல், தீவிரவாதி சைபுல்லா காலித், முப்தி ஷா மிர், ஜெய்ஷ் இ மொஹம்மத், தீவிரவாத அமைப்பை சேர்ந்த முப்தி பயஸ் முஹம்மத் உட்பட பல 32 தீவிரவாதிகள் பாகிஸ்தானிலேயே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதும் உண்மையான சம்பவங்கள்தான். அப்படி கொல்லப்பட்டவர்கள் அனைவருமே இந்தியாவில் தீவிரவாத சம்பவங்களை நிகழ்த்தியவர்கள். இந்திய மக்களின் உயிரை பறித்தவர்கள். அதுமட்டுமில்லாமல், நாங்கள்தான் இந்த தீவிரவாத சம்பவத்தை நிகழ்த்தினோம் என்று ஆணவத்துடன் வெளிப்படையாக சொன்னவர்கள். இவர்களை காத்திருந்து போட்டு தள்ளியிருக்கிறோம்.
இந்தியாவின் மீது கைவைத்தால் பரலோகம் நிச்சயம் என்கிற பயத்தை விதைத்ததுதான், புதிய இந்தியா.
இதையெல்லாம் செய்தியாக படித்து கடந்து சென்ற மக்கள், ஒரு திரைப்படமாக பார்க்கிறார்கள். வலதுசாரிகள் மட்டுமே பகிர்ந்து பரவசமடைந்த இந்த செய்திகள், இன்று வெகுஜன மக்களிடம் சென்று சேர்வதால் பதட்டமடைகிறது, இடதுசாரி லிபரல் குரூப்.
டிமானிட்டைசேஷன் என்ற ஒன்று அறிவித்தபோதே அது, கருப்புப் பணத்தை அழிப்பதற்கு மட்டுமில்லாமல், தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கும் சேர்த்தே அறிவிக்கப்பட்டது. திரைப்படத்தில் மோடி அவர்களின் அறிவிப்பிலேயே இந்த விஷயம் சொல்லப்பட்டிருக்கும்! கருப்பு பணத்தை ஒழிப்பதில் டிமானிட்டைசேஷன் தோல்வி அடைந்திருக்கலாம். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் டிமானிட்டைசேஷனின் நோக்கத்தை சந்தேகப்பட முடியாது.
அதேபோல் டிமானிட்டைசேஷன் முடிவால், இந்தியாவில் எல்லை தாண்டிய தீவிரவாத செயல்கள் முற்றிலுமாக நின்றிருக்கிறது என்பதும், காஷ்மீரில் கல்லெறி சம்பவங்கள் நின்று, 370 நீக்கம் அமைதியாக செய்யப்பட்டதும் வரலாற்று உண்மை. எல்லையைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து பாகிஸ்தானால் தீவிரவாத தாக்குதலை செய்ய முடியவில்லை என்பதும் உண்மை தானே?
அந்த உண்மையைத்தான் துரந்தர் படம் சொல்லியிருக்கிறது.
இதில் என்ன ப்ரோபகண்டா இருக்கிறது? இந்தியாவில் இருக்கும் இந்திய தேசத்திற்கு விசுவாசமாக இருக்கும் எந்த ஒரு இஸ்லாமியருக்கும் இந்த படம் உறுத்தாது. ஆனால் இந்தியாவில் இருந்துகொண்டு பிரிவினை பேசி, இந்த தேசத்தை கூறு போட நினைக்கும் சல்லிகளுக்கு இந்த படம், பச்சை மிளகாயை பின்னால் சொருகியது போலத்தான் இருக்கும்!
அதற்கு நம்மால் எதுவும் செய்ய முடியாது.
இந்தியாவில் பாதுகாப்பாக உட்கார்ந்துகொண்டு, இந்தியாவுக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேசவிரோதிகளுக்கு எதிரான ப்ரோபகண்டா படம் என்று வேண்டுமானால் இதைச் சொல்லலாம்!