வள்ளுவ நாட்டில் மனைவி தனலட்சுமி மற்றும் குழந்தை சகிதமாக மகிழ்ச்சியாக வாழ்கிறார், நாயகன் கலைச்சோழன். ஒரு கட்டத்தில் உலக பொதுமறையாம் திருக்குறளை எழுத தொடங்குகிறார்.
இதற்கிடையில் இரு நாடுகளுக்கிடையே போர் சூழ, அறத்தின் வழி நின்று மக்களை காப்பாற்ற போராடுகிறார், கலைச்சோழன். இந்தச் சூழலில் படைத் தலைவனான குணாபாபுவுக்கும், பாதினிகுமாருக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. போர் நடைபெறும் சூழலில் திருக்குறளை அவர் எழுதி முடித்தாரா? போரின் முடிவு என்ன? குணாபாபு – பாதினிகுமார் காதல் என்ன ஆனது? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்கிறது, திருக்குறள் திரைப்படம்!
நாயகன் கலைச்சோழன், படம் முழுக்க ஆக்கிரமித்திருக்கிறார்! நடை, உடை, பேச்சு என திருவள்ளுவராகவே வாழ்ந்துள்ளார். அவரது உடல் மொழியும், இனிய தமிழ் உச்சரிப்பும் கவனம் கொள்ள வைக்கின்றன! கலைச்சோழனுக்கு சற்றும் சளைக்காத நடிப்பால், பார்ப்பவரை வியக்க வைக்கிறார், அவரது மனைவி வாசுகியாக வரும் தனலட்சுமி. வசன உச்சரிப்பில் நாயகனை போட்டிக்கு அழைக்கிறார். அழகு கண்கள்! நல்ல உயரம்.
குணாபாபு, பாதினிகுமாரின் காதல் ரசிக்க வைக்கிறது. சுப்பிரமணிய சிவா, ஓ.ஏ.கே.சுந்தர், சுகன்யா, சந்துரு, கொட்டாச்சி, கார்த்தி, ஹரிதாஸ்ரீ என நடித்த அத்தனை பேரும் கவனம் ஈர்க்கிறார்கள். கடந்த காலத்தை கண்முன் நிறுத்தும் ஒளிப்பதிவாளர் எட்வின் சகாய் காட்டும் கைவண்ணம், படத்துக்கு மிகப்பெரும் ப்ளஸ் பாயிண்ட்! வாழ்த்துகள். அவரைப் போலவே காட்சிக்குக் காட்சி, மெனக்கெட்டு உழைத்திருக்கிறார், ஆடை வடிவமைப்பாளர் ‘யாத்திசை சுரேஷ்’.
படத்தின் கதை வசனம் ஜெயராஜ். தியேட்டரில் சுமார் 15 இடங்களுக்காவது வசனங்களிக்கு, கைதட்டல்கள் கிடைத்தன. பாராட்டுதல் ஜெயராஜ் அவர்களுக்கு.
இளையராஜாவின் இசை உயிரோட்டமாய் ஓங்கி ஒலிக்கிறது.
‘முல்லைவாசம்…’, ‘கொத்து கொத்தாய்…’ பாடல்கள் மீண்டும் கேட்க வைக்கின்றன. கதாபாத்திரங்களின் நடிப்பு, தமிழ் வசனங்கள் அருமை. மெதுவான திரைக்கதைதான் படத்திற்கு பலவீனம். திருவள்ளுவர் காலத்தை கண்முன்னே கொண்டுவந்து, அதில் கமர்ஷியல் விஷயங்களைச் சிறப்பாக புகுத்தி, ரசிக்க வைத்திருக்கிறார், இயக்குனர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன்.
திருக்குறளுக்கு உரிய மரியாதை செய்திருக்கும் படம்! ஒவ்வொருவரும் திரையில் பார்த்து, பாராட்டப்பட வேண்டிய படமும் கூட!