கார் ரேஸிங்கில் சொந்தமாக அணியை நடத்தி வரும் அஜித்குமார், கேம்பா குளிர்பான விளம்பரத்தில் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரம் அஜித்குமார். சிறுவயது முதலே கார் மற்றும் பைக் பந்தயங்கள் மீது தீராத காதல் கொண்ட அஜித்குமார் சொந்தமாக அஜித்குமார் ரேஸிங் என்ற கார் பந்தய அணியை நடத்தி வருகிறார்.
இதற்காக இதுவரை திரைப்படங்கள் மூலமாக தான் சம்பாதித்த பணத்தை அதில் முதலீடு செய்துள்ளார்.
அஜித்குமார் ரேஸிங் அணி 24எச் ஐரோப்பியன் சாம்பியன்ஷிப், துபாயில் நடந்த ரேஸ் என பல ரேஸ்களில் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. போடியத்திலும் இடம் பிடித்து உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கியுள்ள அஜித்தின் கார் ரேஸிங் அணிக்கு ஏராளமான முதலீடுகள் தேவைப்படும் நிலையில், அஜித்குமார் ரேஸிங் அணி கேம்பா குளிர்பான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
பெப்சி, கோலா வருகைக்கு முன்பு இந்தியாவில் பிரபலமாக இருந்த இந்த கேம்பா நிறுவனத்தை கடந்தாண்டு ரிலையன்ஸ் வாங்கியது.
இதை மீண்டும் புத்துயிர் பெற வைக்க ரிலையன்ஸ் முடிவு செய்துள்ள நிலையில், கேம்பாவை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
விளம்பரத்தில் நடித்த அஜித்:
இதற்காக, அவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அஜித்குமார் கேம்பா குளிர்பானத்திற்காக தற்போது விளம்பரத்தில் நடித்துள்ளார்.
கேம்பா குளிர்பானத்தை கையில் ஏந்தியவாறு உள்ள அஜித்தின் புகைப்படம் இன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு கார் ரேஸிங் அணியை நடத்துவது என்பது மிக மிக சவாலான விஷயம் ஆகும். இந்த சூழலில், தனது அஜித்குமார் ரேஸிங் அணியின் ஸ்பான்ஸர்களில் ஒருவரான கேம்பா நிறுவனத்திற்காக அஜித் விளம்பரத்தில் நடித்துள்ளார்.
தற்போது புகைப்படம் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், தொலைக்காட்சி விளம்பரம் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அஜித்குமார் சிறு வயதில் ஒரு செருப்பு விளம்பரத்தில் நடித்திருந்தார். பின்னர், பெரிய ஹீரோவாக உருவெடுத்த பிறகு நெஸ்கஃபே விளம்பரத்தில் நடித்திருந்தார். தற்போது மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு குளிர்பான விளம்பரத்தில் நடித்துள்ளார்.
இந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக அஜித்குமாருக்கு மிகப் பெரிய அளவில் ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் தான் நடிக்கும் திரைப்படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சியிலே பங்கேற்பதில்லை. ஏராளமான முதலீடுகள் தேவை என்பதாலே தற்போது தனது ஸ்பான்சர் விளம்பரத்தில் அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், அஜித்குமார் நடிக்க உள்ள புதிய படத்திற்கும் இதுவரை தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. அவர் அதிக ஊதியம் கேட்பதாலே இதுவரை தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
நன்றி: எஸ். சரவணன்