கதை, தொடர்கதை, கட்டுரை, ஜோக் எழுதிய எழுத்தாளர்களுக்கு மட்டும் அவர் வாரிக் கொடுக்கவில்லை…
விகடன் ஊழியர்களுக்கும் ‘சுவையான’ சம்பளம் கொடுத்து, பரிசுகள் கொடுத்து வாழ்த்தியவர் எங்க முதலாளி வாத்தியார்.
ஆம்… 1993-ல், ஒரு நாள் எடிட்டோரியல் ஊழியர்களை அழைத்தார். “உங்களுக்கு தற்சமயம் ‘கல்கண்டு’ போல ஒரு சிறு தொகையை சம்பளத்தோடு வழங்குகிறேன். வாயில் ஒதுக்கிக் கொள்ளுங்கள். அடுத்து வரும் ஆறு மாதங்களில் உங்கள் செயல் திறன் கவனிக்கப்பட்டு அதற்கு ஏற்றார் போல சம்பளம் கூட்டப்படும்!” என்று அறிவித்தார்.
ஆறுமாதம் முடிந்தது. பலபேரை நிரந்தர ஊழியர்களாக மாற்றினார். பலபேருக்கு பதவி உயர்வையும்… புதிய பதவிகளையும் அளித்து கெளரவித்தார். ‘கல்கண்டின்’ மகிமையை இன்னமும் சுவைத்துக் கொண்டு இருக்கிறோம். எடிட்டோரியலில் சிறந்த கட்டுரை எழுதியவர்களுக்கு தனி கவரில் 1000, 2000… 5000 வரை அளித்திருக்கிறார்.
‘வடவீர பொன்னையா’ என்ற புனைப்பெயரில் நான் எழுதிய ‘வருச நாட்டு ஜமீன் கதை’க்கு எங்க வாத்தியார் கையால் ‘ஒரு லட்ச ரூபாய்’ பெற்ற கதையைச் சொல்கிறேன்…
அப்போது நான் வெறும் புகைப்படக்காரன்தான். நான், ‘ஜமீன் கதை’யை எழுதக் காரணமாக இருந்த முக்கிய தளகர்த்தாக்கள்…
ஆசிரியர் பாலசுப்ரமணியன், மதன், ராவ், வீயெஸ்வீ, கே.அசோகன், ரா.கண்ணன், உபைதூர், ஓவியர் சசி…மற்றும் தேனி மாவட்ட மக்கள்!
நான் வெள்ளைத்தாளில் எழுதிக் கொடுத்த முதல் அத்தியாயத்தைப் படித்துவிட்டு, ‘சக்சஸ்!’ என்று கைகொடுத்துப் பாராட்டி ஊக்கம் கொடுத்தவர் கே.அசோகன்.
ஜூ.வி.யில் 45 வாரங்கள் தொடர்ந்து நடுப்பக்கத்தில் இந்தக் கதையை வெளியிட்டு எனக்குச் சிறப்பு சேர்த்தார் நம்ம ஆசிரியர்.
சில அத்தியாயத்தை அவர் படித்துவிட்டு என்னிடம் பேசிய பழங்கதைகளை தனி புத்தகமாகவே போடலாம்.
என்ன காரணத்தாலோ தெரியவில்லை, 7வது அத்தியாயம் வெளிவந்தபோது, வடவீர பொன்னையா எனும் கிழவன் (ஆம். அப்படித்தான் ஒண்ணுபோல நினைத்திருக்கிறார்கள்) யாரென்று விசாரித்து… அதே வாரத்தில் என்னை நேரில் அழைத்து, திகைத்து சந்தாஷமாகப் பாராட்டியவர்கள்… மூப்பனார், கலைஞர், பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து, இறையன்பு IAS, மற்றும் தொல்லியல் துறை நரசிம்மன். இவர்களையெல்லாம் சந்திக்க நமது வாத்தியார் பெருந்தன்மையுடன் அனுமதி அளித்தார்.
தொடர் ஆரம்பித்த 42வது வாரம்… கடைசி ஜமீன்தாரான மைனர் பாண்டியனின் கதையைச் சொன்ன அவரது வைப்பாட்டி வேலம்மா என்பவர், வறுமை நிலையில் உயிரோடுதான் இருக்கிறார் என்று எழுதி இருந்தேன். உடனே என்னை அழைத்த ஆசிரியர், அந்த வேலம்மா பற்றி விசாரித்து, அவருக்கு 10,000 ரூபாய் கொடுத்து உதவினார்.
45வது வாரம்…கதை முடிந்த அடுத்த வாரமே, கதைக்கு உயிரோவியம் வரைந்த ஓவியர் சசி அவர்களுக்கு, வயிற்றில் கேன்ஸர் வந்ததை ஆசிரியரிடம் சொன்னேன். உடனே நம்ம ஆசிரியர், அந்த ஓவியரின் சிகிச்சை செலவுக்காக 25,000/- ரூபாய் கொடுத்து உதவினார்.
கதை முடிந்ததும், 1000 ரூபாய் வீதம் கணக்கிட்டு, 45,000/- ரூபாய்க்கான காசோலையை கே.அசோகன் கையால் பெற்றுக்கொண்டேன்.
அடுத்த வாரமே, என்னை தன் அறைக்கு பிரத்யேகமாக அழைத்த என் ஆசான்… ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை என்னிடம் கொடுத்து, “நீங்கள் எழுதிய கதையை ரசித்து, இதை அளிக்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றார்.
உடனே நான் பதறிப்போய், “சார்… மாதா மாதம் சம்பளமும் பெற்றிருக்கிறேன். கதைக்காக ஏற்கெனவே 45,000/- பெற்றுக் கொண்டுவிட்டேன்..!” என்றேன்.
“ம்ம்ம்… அது விகடன் நிறுவனம் நீங்கள் எழுதிய கதைக்கு சன்மானமாக உங்களுக்கு அளித்தது… இது, நான் உங்கள் கதைக்கு வாசகனாக… ரசிகனாக அளிக்கும் என் ‘பர்ஸனல் பணம்’!” என்றார்.
கட்டுப்படுத்த முடியாமல் நான் அழுதுவிட்டேன். இதோ அந்த சம்பவத்தை இப்போது எழுதுகையிலும் பெருகும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறேன்.
மேலும் சில கடிதங்களைக் கொடுத்தார். அவை எல்லாமே, வருசநாட்டு ஜமீன் கதையைப் பாராட்டி, ஆசிரியரின் முகவரிக்கே வந்த பர்ஸனல் கடிதங்கள். அரசியல்வாதிகள், கலெக்டர், தாசில்தார்கள், அரசு நில அளவைதாரர்கள், மில் ஓனர்கள், கடவூர் ஜமீன்தார், சேத்தூர் ஜமீன்தார், பேரையூர் ஜமீன்தார் இன்னும் பலர் எழுதிய கடிதங்கள். அதில் பங்கஜம் என்கிற பெண்மணி அனுப்பிய 500 ரூபாய்க்கான காசோலையையும் கடிதத்தையும் என்னிடம் கொடுத்த என் அருமை ஆசான், “இந்தப் பெண்மணி எழுதிய கடிதம்தான் உங்களுக்கு அன்பளிப்பு தரச்சொல்லி என்னைத் தூண்டியது..!” என்றார்.
-பொன்ஸீ
நன்றி: விகடகவி