*ஒம்* திரை விமர்சனம்

 

ஜவ்வாது மலையிலிருந்து செம்மரம் வெட்டச் சென்ற தமிழர்களை, ஆந்திர வனத்துறையினர் சுட்டுக்கொன்ற மனித உரிமை மீறலை மையப்படுத்திய கதைக் கருவோடுதான் வெளியாகியுள்ளது, ஓம்! ஆனால், வழக்கம்போல் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படத்தின் மையக்கரு, அதன் உண்மை பின்னணி, நோக்கம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ‘அமரன்’ போலவே இப்படத்திலும் இஸ்லாமிய வெறுப்பையே விதைத்து, திசை திருப்பியிருக்கிறார்.

செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் தலைவர் சர்வதேச மாஃபியா அப்துல் ஹமீதை (‘அமரன்’ இயக்குநர் அல்லவா? ராஜ்குமார் பெரியசாமியால் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய பெயர்!) பிடிக்க, ஐ.பி.எஸ் அதிகாரியான சாய் பல்லவி தலைமையில் தனிப்படை அமைக்கப்படுகிறது. அந்த சிறப்புப் படையில் இணையும் தனுஷ் தமிழ்நாடு அரசியல்வாதியும் செம்மரக் கடத்தல் காரருமான மம்முட்டியிடம் ரகசிய உளவாளியாக சேர்கிறார். இதனைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த வலையமைப்பையும் சாய்பல்லவி -தனுஷ் கூட்டணி கண்டுபிடித்ததா? இறுதியில் என்ன ஆனது? என்பதுதான் ‘ஓ.ம்’ படத்தின் ஒன்லைன்.

படத்தில் தனுஷ் மாஸ் ஆக, கெத்தாக பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அதைவிட சாய் பல்லவியின் கதாப்பாத்திரம்தான் செம்ம மாஸ். அப்போ, மம்முட்டியோட நடிப்பு? கொஞ்சம் பொறுங்க பாஸ்! 🙂
செம்மரம் வெட்டச்சென்ற ஜவ்வாது மலை தொழிலாளர்கள் கொத்து கொத்தாக சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொட்டிருப்பதும், அவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இழப்பு, வலியை பதிவு செய்திருப்பதும் வரவேற்கப்பட வேண்டியது. அரசு சாட்சியாக மாறிய ஒருவரின் உயிரைக் காப்பாற்ற சாய் பல்லவியும் தனுஷும் சிறையில் போரா(ரி) டும் காட்சிகள் மிரட்டல். தனுஷுடன் போட்டி போட்டிக்கொண்டு அடித்து நொறுக்கும் ஃபைட்டின் இறுதியில், மொத்தமாக ஸ்கோர் செய்திருப்பவர், சாய் பல்லவிதான்.

இப்போது, மம்முட்டிக்கு வருவோம் 🙂 இப்படியொரு வெள்ளந்தியான செம்மரக்கடத்தல் கொள்ளையரை தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, பாலிவுட்; ஹாலிவுட்டில் மட்டுமல்ல, ஏன் இந்த அகில உலகத்தில்; விண்வெளி; சூரிய குடும்பம்; விண்மீன் மண்டலம்; பிரபஞ்சம் இப்படி எங்குமே பார்த்திருக்க முடியாது.
அவ்வளவு பெரிய செம்மரக்கட்டைக் கடத்தல்காரராக இருந்தும்கூட ‘பீப்பீ, மேளம்லாம் அடிப்பாங்களே அதுதானே கல்யாணம்? ’ என கேட்கிற அப்பாவி ‘சின்னத்தம்பி’ பிரபுபோல்தான், அவரது கேரக்டர் வடிமைக்கப் பட்டிருக்கிறது.

ஏனெனில், அவர் பெயர் ஆண்டனியோ, அப்துல் ஹமீதோ அல்ல. அவர் பெயர் கார்த்திகேயன்! மனைவியுடன் கோயில் கோயிலாக சுற்றி வருகிறவர். “அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே” என்ற பாடல் மட்டும்தான் அவருக்கு மிஸ்ஸிங். கொஞ்சம் விட்டிருந்தால், ஒரு கட்டத்தில் தனுஷுக்கும் மம்முட்டிக்கும் “பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு…” என தளபதி ரேஞ்சுக்கு பாடல் வெச்சிருப்பார்போல!

ரகசிய உளவாளி தனுஷும் செம்மரக்கட்டைக் கடத்தல்காரர் மம்முட்டியும் கோப்பெருஞ்சோழன் -பிசிராந்தையர் ரேஞ்சுக்கு நட்பு ஆகிவிடுகிறார்கள். நல்லவேளை, சாய் பல்லவி தனுஷ்ஷை சர்வதேச மாஃபியா அப்துல் ஹமீது வீட்டிற்கு உளவு பார்க்க அனுப்பவில்லை. அனுப்பியிருந்தால், அவரது பர்சனல் குணங்களால் ஈர்க்கப்பட்டு, “இனமென பிரிந்தது போதும்.. மதமென பிரிந்தபோதும்… மனிதம் ஒன்றே தீர்வாகும்” என உணர்ச்சி பெருக்கெடுத்து ஓடும் க்ளைமாக்ஸாக இருந்திருக்கும். ஆனால், படத்தை இயக்கியவர், ராஜ்குமார் பெரியசாமியாயிற்றே, அப்படியெல்லாம் விடமாட்டார் அல்லவா? படத்தின் பெயரும் ‘ஓம்’ ஆயிற்றே?

ஜவ்வாதுமலை பகுதிகளில் வறுமைச்சூழல், போதிய கல்வியறிவின்மை, குழந்தை திருமணங்கள், அடிப்படை வசதியின்மை என இன்னமும் தனி தீவுபோல்தான் மக்கள் வசித்து வருகிறார்கள். அப்படியிருக்க, செம்மரக்கட்டை வெட்ட அம்மக்கள் ஏன் செல்கிறார்கள்? என்பதை இன்னும் அழுத்தமாக காண்பித்திருக்கலாம். அதேபோல், கடத்தல்காரர்கள் ஒருவர்கூட சுட்டுக் கொல்லப் படுவதில்லை.

அப்படியிருக்க, செம்மரம் வெட்டும் தொழிலாளிகள் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னணி என்ன? அவர்களை யார் அனுப்பினார்கள்? அவர்கள் மூலம் உண்மை வெளிவந்துவிடும் என்றா? இப்படி எந்த காரணத்தையும் சொல்லாமல் வெறும் போலீஸுக்கும் மரம் வெட்டுகிறவர்களுக்குமான ‘ரிவேஞ்ச்’ ஆக மட்டுமே சுருக்கப்பட்டிருக்கிறது. ஒரு காட்சியில் நாயகன் செம்மரக்கட்டை வெட்டச் சென்ற தொழிலாளர்களைக் காப்பாற்றுகிறார். அப்போதுகூட, நாயகனின் அப்பாவை ஆந்திர வனத்துறையினர் சுட்டுக் கொன்றதால்தான் அவர்கள் மீது ரிவேஞ்ச் எடுக்கிறார்.

இதன்மூலம், போலீஸுக்கும் தொழிலாளர்களுக்குமான பிரச்சனையாக மட்டுமே ‘ஓம்’ திசை திருப்பப்பட்டுள்ளது. அத்தனை பேரையும் குருவி சுடுவதுபோல் ஒரே ஒரு ஆஃபிசர் மட்டும் உத்தரவிட்டு அப்படி சுட்டு வீழ்த்திவிட முடியுமா என்ன? நிச்சயமாக தொழிலாளிகள் சுட்டுக் கொல்லப் பட்டதற்கு பின்னால், கொள்ளை கும்பலும் அரசியல் பின்னணியும் இருந்திருக்கும். ஆனால், அதுகுறித்து டீடெய்லாக காண்பிக்கப்படாதது ஏமாற்றமே!

அதேபோல், மிகவும் எதிர்பார்த்த நஸ்ருதீன் ஷாவையும் வீணடித்திருக்கிறார்கள். சிறையில் மம்முட்டியை கொல்ல வரும் காட்சியில் சிறையிலுள்ள அத்தனை பேரும் ஏதோ ஸோம்பிகள் போல் சூழ்ந்து கொள்வதும் நம்பும்படியாக இல்லை. அதுவும், இவ்வளவு பெரிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஏதோ டீ கடையில் அமர்ந்து பேசிக் கொள்வது போல்; திட்டம் தீட்டுவதுபோல் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. மம்முட்டி வீட்டில் இவ்வளவு எளிதாக தனுஷ் சென்று, ரொம்ப எளிதாக துபாய்க்கு சென்று அப்துல் ஹமீதை சந்திக்கும்போது, இதெல்லாம் சாதாரணமப்பா என்றுதான் தோன்றுகிறது.

படத்தில் செம்மக்கரக்கட்டை கடத்தல் கும்பல் தலைவர் கார்த்திகேயன் (மம்முட்டி) நல்லவர், நல்லவர் என்றே காட்சிக்கு காட்சி வசனங்கள் வருகின்றன. ஆனால், அப்துல் ஹமீத் மரங்களை மட்டுமல்ல; மனிதர்களையும் கொல்வார் என்று வசனம் வைத்திருப்பதோடு, அத்தனைப் பழியையும் அப்துல் ஹமீத் மீதே அடுக்கி கொடூரமானவராக சித்தரித்திருக்கிறார்கள். அதாவது, முன்பெல்லாம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என விஜயகாந்த் படங்கள் வருமே அப்படித்தான், ராஜ்குமார் பெரியசாமியின் படங்கள் இருக்கின்றன.

இவ்வளவு சென்சிட்டிவ்வான திரைக்கதையில் இரண்டே காட்சிகளைத் தவிர மற்றக் காட்சிகள் எல்லாமே தனுஷுக்கும் மம்முட்டிக்குமான ‘மெய்யழகன்’ ரேஞ்ச் பாசப் போராட்டங்களாக தொடர்ந்து, தொல்லை கொடுக்கின்றன. அதுவும், யார் யாரையோ கைது செய்யப்படும்போது எந்த பரபரப்பும் ஏற்படவில்லை.

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் இசைதான். ஓம் ஆபரேஷனில் சிக்கிய நம்மை மீட்பராக வந்து காப்பாற்றுவது சாய் அபயங்கர் இசைதான்! தனுஷ் ஆக்‌ஷன் காட்சிகள், ஸ்லோமோஷனில் அவர் நடந்து வரும் காட்சிகளில் எல்லாம் பார்வையாளர்களை தனது மியூசிக்கால் மெஸ்மரிசம் செய்திருக்கிறார்.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சும்மாவே சுடுதண்ணியில் கையை விடுவார். ‘ஓ.ம்’ (என்னதான் இதன் விரிவாக்கம் ‘ஆபரேஷன் மோல்’ என கூறிக்கொண்டாலும்!) தலைப்பு இப்படி வைத்துவிட்டு சும்மாவா விடுவார்? வழக்கம்போல், ஒட்டுமொத்த செம்மரக் கடத்தலுக்கு காரணம் சர்வதேச கொள்ளையர் அப்துல் ஹமீத் எனக் கூறி, இஸ்லாமிய வெறுப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார். செம்மரக் கடத்தல்காரராகவே இருந்தாலும் அவர் இந்துவாக இருந்தால் நல்லவர்; தூய்மையானவர்; தங்கமானவர் என ஓம், ரீம், க்ரீம் ஃபார்முலாவை இதில் அப்ளை செய்திருக்கிறார்.

‘ஓம்’… இஸ்லாமிய வெறுப்பு படமா? செம்மரக்கடத்தல் அரசியலை அழுத்தமாக பேசவில்லையா? திரைக்கதை சொதப்பலா? என்றெல்லாம் கேட்டால், ‘ஆம்’!

*நன்றி: வினி சர்பனா*

Comments (0)
Add Comment