*உங்கள் சினிமா பிரவேசம் மற்றும் ஒளிப்பதிவு மீதான ஆர்வம் குறித்து…?*
சினிமா என்பது ஒரு காட்சி மொழி. அந்த மொழியை முறையாகக் கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை தரமணி திரைப்படக் கல்லூரியில் (FTIT) சேர்ந்தேன். 2001-2004 காலகட்டத்தில் ஒளிப்பதிவுத் துறையில் (Cinematography) பயின்று, D.F.T பட்டம் பெற்றேன். அதுதான் எனது பயணத்தின் தொடக்கப்புள்ளி. இன்று S.I.C.A மற்றும் W.I.C.A போன்ற மதிப்புமிக்க சங்கங்களில் உறுப்பினராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
*பாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் அவர்களிடம் பணியாற்றிய அனுபவம் எப்படிப் பட்டது?*
ரவி யாதவ் சார் ஒரு மிகச்சிறந்த கலைஞர். அவரோடு இணைந்து ஹிந்தியில் Race, Race 2, 36 China Town, Prince, mr. fraud , Hello darling, Its my life, naqaab, போன்ற பிரம்மாண்டமான படங்களில் பணியாற்றியது எனக்கு உலகத் தரம்வாய்ந்த தொழில்நுட்ப அறிவைக் கொடுத்தது. குறிப்பாக, ஆக்ஷன் மற்றும் கிளாஸியான காட்சிகளை எப்படி கையாள வேண்டும், லைட்டிங் நுணுக்கங்கள் எனப் பல விஷயங்களை அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன்.
*தமிழில் நீங்கள் பணியாற்றிய ‘திருப்பாச்சி’ போன்ற படங்கள் இன்றும் பேசப்படுகிறது. அதன் அனுபவம் குறித்து?*
ஒளிப்பதிவாளர் சரவணன்.எஸ் சாருடன் இணைந்து திருப்பாச்சி, பம்பரக் கண்ணாலே, டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் போன்ற படங்களில் பணியாற்றியது ஒரு நல்ல அனுபவம். ஒரு ‘மாஸ்’ படத்திற்குத் தேவையான எனர்ஜியை கேமரா கோணங்கள் வழியே, எப்படி கொண்டு வருவது என்பதை உணர்ந்தேன். அதுமட்டுமின்றி, மனோஜ் பரமஹம்சா, V. மணிகண்டன், கல்யாண், திவாகர் மற்றும் ஞானம் போன்ற திறமையாளர்களுடன் பணியாற்றியது எனது பார்வையை இன்னும் விசாலமாக்கியது.
*நீங்கள் ஒளிப்பதிவாளராக (DOP) தடம் பதித்த திரைப் படங்கள் பற்றி?*
2009-ல் ‘சிவப்பு மழை’ திரைப்படம் மூலம் எனது தனி பயணம் தொடங்கியது. மிக சமீபத்தில் 2023-ல் வெளியான ‘சான்றிதழ்’ திரைப்படம் வரை, ஒவ்வொரு படைப்பிலும் ஒரு புதுமையைப் புகுத்த முயன்று வருகிறேன். இதுதவிர, 230-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்கள் (Ads), 9 குறும்படங்கள், 3 ஆல்பம் மற்றும் 2 ஆவணப் படங்கள் எனத் தொடர்ந்து கேமராவுடன் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.
*தெலுங்கு, மலையாள திரைத் துறையிலும் உங்களின் பங்களிப்பு?*
ஒளிப்பதிவாளர் ஞானம் சாருடன் இணைந்து தெலுங்கில் ‘Raju Gari Ghadhi’ மற்றும் மலையாளத்தில் ‘Poomaram’ போன்ற படங்களில் பணியாற்றினேன். அதேபோல் ஹைதராபாத்தில் 100 persent Luck, Mayaderpam, Lakshmi Talk Show, Family circus , Bindass போன்ற புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றியது ஒரு மாறுபட்ட மற்றும் சிறந்த அனுபவமாக அமைந்தது.
*உங்களின் எதிர்காலத் திட்டம் மற்றும் இலக்கு?*
சினிமா தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த மாற்றங்களுக்கு ஏற்ப என்னை தகவமைத்துக் கொண்டு, டிஜிட்டல் ஒளிப்பதிவில் புதிய பரிசோதனைகளைச் செய்ய வேண்டும் என்பதே எனது திட்டம். நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களுக்கு எனது கேமரா கோணங்கள் மூலம் உயிர் கொடுக்கக் காத்திருக்கிறேன்….
*சந்திப்பு: ஷீபா*