ஆழி-பட விமர்சனம்

   

இரண்டே கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு, படம் முழுக்க மிக சாமார்த்தியமாக படத்தை நகர்த்தி இருக்கிறார், இயக்குனர் மாதவன் ராம்தாஸ்.

மீன்பிடி படகு மெக்கானிக் சரத்குமார், இயல்பான ஒரு வாழ்க்கை வாழும் மனிதராக இருந்தாலும், மறுபக்கம் போதைப் பொருள், ஆயுத கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவரது ஒரே மகளான தேவிகா, கல்லூரியில் உடன் படிக்கும் இந்திரஜித்தைக் காதலிக்கிறார்.

பணக்காரன் – ஏழை வித்தியாசம் காரணமாக இந்த காதலை ஏற்க மறுக்கும் சரத்குமார், அந்த இளைஞனைக் கடத்தி, ஆழ்கடலுக்கு அழைத்துச் சென்று கொலை செய்ய திட்டமிடுகிறார். தப்பிக்கப் போராடும் அந்த இளைஞன் தப்பித்தாரா? அல்லது சரத்குமாரால் கொல்லப்பட்டாரா என்பதே படத்தின் கதை.

அப்பா வேடம், சரத்குமாருக்கு புதிது இல்லை. ஆனால் இதில் மகள் மீது அதீத பாசமும், அவள் காதலன் மீது கொலை வெறியும் கலந்த மனிதராக மிக இயல்பாக நடித்திருக்கிறார். கெட்டப்பும் சூப்பர்.

இளம் காதலனாக நடித்திருக்கும் இந்திரஜித், உயிர் பயத்தையும் பதட்டத்தையும் நன்கு வெளிப்படுத்தி இருக்கிறார். பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வு! சரத்குமாரின் மகளாக வரும் தேவிகா, குறைந்த காட்சிகளிலேயே வந்தாலும், தன் அழகால் கவனம் ஈர்க்கிறார்.

ஆழியில் பயணிக்கும் ஒரு மீன்பிடி படகை மையமாக வைத்து, இரண்டு கதாபாத்திரங்களின்மோதலை, முழு படத்தையும் நகர்த்த முயற்சித்திருக்கிறார், இயக்குநர் மாதவன் ராமதாஸ். இரண்டே கதாபாத்திரங்களுடன் தீவிரமான திரில்லர் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார்.
காதலைவிட தந்தை-மகள் பாசம் பெரியது என்பதை சொல்லி இருக்கிறார்.

ஆனந்த் ஒளிப்பதிவில் படகின் உட்புறத்தில் படமாக்கப்பட்ட பல காட்சிகள் மிக அருமை. ஜாஸி கிப்ட் இசையில் பாடல்கள் கைகொடுக்காவிட்டாலும், வில்லியம் பிரான்சிஸின் பின்னணி இசை, காட்சிகளுக்கு ப்ளஸ் பாயிண்ட்.

ஒரு திகில் பட விறுவிறுப்பைக் கொடுத்துக்கும் இயக்குனருக்கு பாராட்டுகள்.

Comments (0)
Add Comment